செவ்வாய், 2 ஏப்ரல், 2013

எண்ணம்


துறவி ஒருவர், அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார். மருத்துவம், சோதிடம் சொல்லி கிராம மக்களுக்கு உதவி வந்தார். அதற்க்காக காசு, பணம் எதுவும் வாங்குவதில்லை.

ஒரு வேளை உணவு மட்டும் யாசித்து உண்பார். உணவு அதிகமாக இருந்தால் நாய், பறவைகள் என்று பிராணிகளுக்கு படைத்து விடுவார். அல்லது யாருக்காவது கொடுத்து விடுவார்.

அங்கு ஒரு மூதாட்டியும் வசித்து வந்தாள். அவளுக்கு துணையாக ஒரே மகன். அவனும் பெரிய குடிகாரன். வேலைக்குச் செல்வதில்லை, ஊரைச் சுற்றி வருவான்.

வீட்டுக்கு வந்து தாயை அதட்டி, மிரட்டி சாப்பிட்டுவந்துவிட்டுச் செல்வான். அம்மா வேலை செய்து வைத்திருக்கும் பணத்தையும் பிடுங்கி கொண்டுபோய்விடுவான்.

மகனின் மோசமான நிலையைப் பார்த்துப் பழகிய மூதாட்டிக்கு வாழ்க்கையே துன்பமாகத் தெரியும். யாரைக் கண்டாலும் வெறுப்புடன் பேசுவாள். திட்டித் தீர்ப்பாள். அதிலும் அவளிடம் அதிகமாக திட்டு வாங்குவதில் அந்த துறவி முக்கியமானவர்.

சாதுவாக இருப்பார் என்பதால் மூதாட்டிக்கு துறவியை கண்டாலே பிடிக்காது. இஷ்டம்போல் திட்டித் தீர்த்துவிடுவாள். ஆனால் மூதாட்டியின் வெறுப்பையோ, கோபத்தையோ துறவி சற்றும் பொருட்படுத்துவதில்லை.

ஒருநாள் மகன், மூதாட்டியை அடித்து உதைத்து கையில் இருந்த பணத்தை எல்லாம் பிடுங்கிப் போயிருந்த சமயம், துறவி பிச்சை கேட்டு வந்தார். மிகுந்த வருத்தத்தில் இருந்த மூதாட்டிக்கு துறவியைக் கண்டதும் கடும் கோபம் ஏற்பட்டது.

‘வேலை செய்றவங்களே நிம்மதியாகக் சாப்பிட முடியவில்லை. இவன் ஊரைச் சுற்றிக் கொண்டு வேளாவேளைக்கு பிச்சை எடுத்து தின்கிறான்.. இவன் கதையை முடித்துவிட வேண்டும்’ என்று எண்ணிய மூதாட்டி, சோற்றில் விஷம் வைத்து எடுத்து வந்து துறவிக்குப் போட்டாள்.

அதை வாங்கிக் கொண்டு, தான் வழக்கமாக இருக்கும் குடிலுக்குச் சென்றார் துறவி. அவர் சாப்பிடத் தயாரானபோது அங்கே மூதாட்டியின் குடிகார மகன் வந்து சேர்ந்தான்.

தள்ளாடியபடி வந்த அவன், ‘யோவ் சாமியாரே சாப்பாடு வச்சிருக்கியா?’ என்று கேட்டுக் கொண்டே பிச்சைப் பாத்திரத்தை எடுத்தான்.

துறவியோ, அவன் சாப்பிட்டது போக மீதியை நாம் உண்ணலாம் என அமைதி காத்தார்.

குடித்துவிட்டு வந்ததிருந்த அவன் பேராசையுடன் எல்லா சோற்றையும் சாப்பிட்டுவிட்டான். அடுத்த கணம் அங்கேயே மயங்கி விழுந்தான்.

அவனது நாடித்துடிப்பை சரிபார்த்த துறவி, மருந்து கொடுத்துப் பார்த்தார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இறந்துபோனான்.

தகவல் மூதாட்டிக்கு தெரிவிக்கப்பட்டது. ‘ஐயய்யோ! நான் உமக்குக் கொடுத்த உணவையா எனது மகனுக்கு கொடுத்தீர்? அதில் உம்மை சாகடிக்க விஷம் கலந்திருந்தேனே. இப்போது என் தவறுக்கு எனது ஒரே மகனையும் இழந்துவிட்டேனே?’ என்று கதறி அழுதாள் மூதாட்டி.

கதையின் நீதி: “கெடுவான் கேடு நினைப்பான்”, தீமையை எண்ணிவிட்டு நன்மையை அடையமுடியாது. என்பதை இந்த சிறுகதை விளக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக