வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பொறுமையும் பொறுப்பும்

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்...?

அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம்...

தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார், அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச்சொன்னார். பல்பை கொண்டு வரும்போது, அது கைதவறி விழுந்து உடைந்துவிட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை.

ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார். அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்துவரச் சொன்னார்.

பல்பை கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டுவிட்டனர்.

அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது என்னால் மீண்டும் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் அவரது மனதை காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? மீண்டும் அவனிடமே பணியை கொடுத்தால் அவன் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவான். அதனால்தான் அப்படி செய்தேன்’ என்றார்.

எடிசனுக்கு வெற்றியை பெற்றுத்தந்த பொறுமை உணர்ச்சியின் எல்லையை அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்!

நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாது
ஆனால் எப்போதும் இதமாகப் பேச முடியும்.!!!

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

பிடிவாதம்

ரேவதி நன்றாகப் படிக்கும் மாணவி, பிறர் தன்னிடம் ஒப்படைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைசாலி சிறுமி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள்.

ஆனால் ரேவதியின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. ரேவதியின் அம்மா, அப்பாவிற்கு அவளது பிடிவாதம் பெரிய தலைவலியாக இருந்தது. உடை, பொம்மை, பரிசுப் பொருள் எது கேட்டாலும் உடனே வாங்கி தரவேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.

நாளைய தினம் ரேவதியின் பிறந்தநாள். வெகு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரவேண்டும் என்று அடம்பிடித்தாள்.

ரேவதியின் அம்மாவும், அப்பாவும் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் இங்கே இருக்கணும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு’ என்று கட்டளையிடுவதுபோல் கூறிவிட்டுச் சென்றாள்.

ரேவதியின் பெற்றோர் என்ன சய்வதென்று தெரியாமல் விழித்தனர்.

மாலையில் பள்ளி முடிந்ததும் ரேவதி  வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க?” என்றாள்.

“நீதான், எல்லாரும் டூர் போறாங்க... என்னை அனுப்ப மாட்டீங்களான்னு கேட்ட இல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும்.’ என்றார்.

“இல்லேப்பா நான் டூர் போகலை. அடுத்தவாட்டி போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா” என்றாள் அந்த வீட்டுச் சிறுமி.

“இல்லைங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். பண்ணைக்காரர் தோடத்திலே வேளைக்கு ஆள் கூப்பிட்டிருக்காங்க. நான் ஒருவாரம் வேலைக்குப்போறேன். கிடைக்கிற பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சிரியாக இருக்கும்” என்றாள் அந்த சிறுமியின் அம்மா.

இதை பார்த்துக் கொண்டிருந்த ரேவதி ஆச்சிரியப்பட்டாள். ‘ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கிறாள். ஒரு அம்மா, தன் குழந்தைக்காகவும், கணவருக்காகவும் வேலைக்குப் போகிறேன் என்கிறார். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதால் அவர்கள் குடிசையில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது’ என்று எண்ணினாள்.

ரேவதி வீட்டிற்குச் சென்றதும் அவளது பெற்றோர் என்ன சொல்லப்போகிறாளோ என்று தயங்கிக் கொண்டிருந்தனர். “ரேவதி...” என்று அவர்கள் வாயெடுக்க, “அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா அடுத்த பொறந்த நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று கூறியவளைப் பார்த்து வியப்படைந்தனர் அவளது பெற்றோர்.

தனது பிடிவாத குணத்தை அழித்த மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் ரேவதி.

கழுகும், நரியும்

வேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால்  கட்டிப் போட்டிருந்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி, தன் வீட்டிற்குக் கொண்டு சென்று அன்புடன் வளர்த்தார்.

இறக்கைகள் நன்கு வளர்ந்ததும் அதைப் பறந்துபோக அனுமதித்தார். கழுகு பறந்து செல்லும் போது. அதன் பார்வையில் ஒரு முயல் தென்பட்டது. அதை அப்படியே தூக்கி வந்து தன்னை வளர்த்த பெரியவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த நரி, ‘ஏற்கனவே உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்கலாம். இந்த முயலை நீ அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடுயும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். பெரிய வருக்கு நீ முயலைக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் அவர் உன்னைப் பிடிக்க வரப்போவதில்லை. எதற்காக  அப்படிச் செய்தாய்’ என கழுகைப் பார்த்துக் கேட்டது.

“அது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை வலைவிரித்துப் பிடிக்கலாம். ஆனால், நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் பெரியவர் காப்பாற்றியுள்ளார். அவரிடம் நான் கொண்டுள்ள நன்றியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தவே முயலைக் காணிக்கையாகச் செலுத்தினேன். உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்” எனப் பதில் கூறியது கழுகு.

கதையின் நீதி: ஆபத்துக் காலங்களில் உதவி செய்தவர்களை மறக்காமல் நன்றியோடு இருப்பது தான் நல்லவர்களுக்கு அழகு.

நாளைய உணவு

சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேயந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது.

அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்” என்றது காட்டமாய்.

இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள்...என நொந்தபடியே தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது வெள்ளாடு.

சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில்  ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன.

வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.

‘அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?’ என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன.

‘இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம்’ என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.


பேராசை பெருநஷ்டம்!!!

ராமு, சோமு. அம்மு, பொம்மு என்று 4 குறங்குகள் இருந்தன. அவை ஒருநாள்  அருகிலுள்ள பழத்தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே பறித்து வைத்திருந்த பழங்களை கூடையோடு தூக்கிக் கொண்டு தங்கள் வசிப்பிடத்திற்கு சென்றன.

அவைகள் திருடிய பழக்கூடையை. ஆளுக்கு கொஞ்ச நேரமாக தலையில் சுமந்தபடி வந்து கொணடிருந்தன. அந்த வழியில் ஒரு மரத்தடியில் பஞ்சுமிட்டாய் விற்பவன் படுத்து இருந்தான். அவன் தலைக்குப் பக்கத்தில் கூடை நிறைய பஞ்சுமிட்டாய் இருந்தது. பஞ்சுமிட்டாய் வியாபாரி பயணக்களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.

பழக்கூடையைத் தூக்கிவந்த குரங்களுக்கு பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்ததது.

“அந்தப் பஞ்சுமிட்டாய் ரொம்ப இனிப்பாக இருக்கும். எனக்கு அதைச் சாப்பிட ஆசையாக இருக்கு” என்றது ராமு குரங்கு.

‘ஆமாம், ஆமாம்... எத்தனை நாளைக்குதான் பழங்களையே தின்பது, இன்று பஞ்சுமிட்டாய் சாப்பிடுவோம்” என்றது சோமு.

“அந்த பஞ்சுமிட்டாய் விற்பவன் நன்றாகத் தூங்குகிறான், அவைகளை கூடையோடு தூக்கிச் சென்றுவிடலாம்” என்றது அம்மு.

“நாம் முதலில் இந்தப் பழங்களை நம் இருப்பிடம் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு வாய்ப்பு கிடைத்தால் பஞ்சுமிட்டாயை திருடலாம். அவன் அருகிலேயே படுத்து இருக்கிறான். நாம் பிடிபட்டால் தொலைத்துவிடுவான்.” என்றது பொம்மு குரங்கு.

“பொம்மு சொல்வதும் சரிதான். நாம் பழங்களை வீட்டில் வைத்துவிட்டு வருவோம்” என்றது அம்மு.

“இல்லை...இல்லை... அவன் நன்றாக தூங்குகிறான். இப்போத பஞ்சு மிட்டாயை எடுத்துவிட வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தன, ராமுவும் சோமுவும். 

அவை இரண்டும், பஞ்சுமிட்டாய்  கூடையை நெருங்கி  அவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடின.

அம்முவும், பொம்முவும் பழக்கூடையை சுமந்து கொண்டு சென்றன.
சில நிமிடங்களில் கண்விழித்த பஞ்சுமிட்டாய் வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். பதற்றத்தில்  பஞ்சுமிட்டாயைத் தேடி அங்கும் இங்கும் ஓடினான், தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையை கொண்டு செல்வதைக் கண்டான்.

‘ஏய் திருட்டுக் குரங்குகளா, என் பஞ்சுமிட்டாயையா திருடிச் செல்கிறீர்கள், உங்கள் மண்டையை உடைக்கிறேன் பாருங்கள்’ என்று கற்களை எடுத்து அவைகள் மீது வீசி எறிந்தான்.

கல்லடிபட்ட குரங்குகள் இரு கூடைகளையும் போட்டுவிட்டு பிழைத்தால் போது மென்று அலறிக் கொண்டே ஓடின. பஞ்சுமிட்டாய் வியாபாரி, ‘குரங்குகளால் எனக்கு ஒரு கூடை பழம் லாபம்’ என்று பஞ்சுமிட்டாயுடன் பழக்கூடையையும் தூக்கிச் சென்றான்.

“நான் அப்பவே சொன்னேன். இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு, இப்போ நாம் கொண்டு வந்த பழக்கூடையும் போச்சா” என்றது பொம்மு குரங்கு.

“சரிதான் நாம் பேராசைப் பட்டோம், பெருநஷ்டம் அடைந்தோம்” என்றன மற்ற குறங்குகள்.வியாழன், 11 ஏப்ரல், 2013

தொல்லை?


பசுமையைன புல்வெளி. நிரைய பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் அவற்றின் அருகே நின்று பறக்கும் பூச்சிகளை பிடித்து தின்றன.

கொக்குகள் அவ்வப்போது மாடுகளின் முதுகில் ஏறும். வாய் அருகில் செல்லும். இது மாடுகளுக்கு தொந்தரவாக இருக்கும். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பசுவிற்கு கொக்குகளின் இந்த செயல் பிடிக்க வில்லை.

ஒருநாள்  அந்த பசு கொக்குகளை கண்டித்தது. “நான் புற்களை கடிக்கும் இடத்தில் நீங்கள் நின்றுகொண்டு எனக்கு தொந்தரவு செய்யக்கூடாது” என்று எச்சரித்தது.

‘இல்லை நண்பா!, எங்களை விரட்டாதீர்கள். புற்களின் அடியில் பூச்சிகள் மறைந்துகொள்ளும் எங்களால் அவைகளை எளிதாக பிடிக்க முடியாது. ஆனால் நீங்கள் புற்களை மேயும்போது உங்கள் மூச்சுக்காற்று பட்டு புற்கள் அசையும். அப்பொழுது மறைந்திருக்கும் பூச்சிகள் அங்குமிங்கும் ஓடும். அதை நாங்கள் எளிதாகப் பிடித்து உண்டு எங்கள் பசியாற்றிக் கொள்வோம். உங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கமாட்டோம்’ என்று கொக்கு பணிவுடன் சொன்னது.

“அப்படியானால் நீங்கள் பூச்சி பிடித்து உண்ண நாங்கள் உதவணுமா? முடியவே முடியாது. எனக்கு இடையூறாக இருக்கும் எதையும் நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கடைசியாக நான் உங்கள் கொக்கு கூட்டத்தையே எச்சரிக்கிறேன். என் பக்கம் யாருமே வரக்கூடாது.  மீறி வந்தீர்களென்றால் என் கால்களால் உங்களை மிதித்து நாசம் செய்துவிடுவேன். ஜாக்கிரதை” என்று கடும் கோபத்தோடு பசு கொக்குகளை விரட்டியடிக்க, பயந்தோடியது கொக்குகள்.

 அன்றிலிருந்து அந்தப் பசு புல்மேயும் இடத்திற்கு எந்த கொக்கும் செல்லவில்லை. அந்தப் பசு ஒரு முறை தன்னுடன் மேய்ந்து கொண்டிருந்த இன்னொரு பசுவிடம், “பார்த்தாயா நண்பா, என்பக்கம் எந்த கொக்கும் வருவதில்லை. எந்த தொந்தரவும் தருவதில்லை. டென்ஷன் இல்லாமல் புல் மேய்கிறேன். உனக்கு அந்தக் கொக்குகளை விரட்ட தைரியமில்லை. அதனால்தான் உன்னிடம் அவைகள் வாலாட்டுகின்றன” என்றது.

“நீ சொல்லுவதுபோல் கொக்குகளால் எனக்கு எந்த இடைஞ்சலும் இல்ல” என்றது மற்றொரு பசு.

“சரி உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு இந்தப் பசு மேயத் தொடங்கியது.

சில நாட்கள் கழித்து, கொக்கு நெருங்காத பசு மிகுந்த பசியுடன் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அதன் மூக்கினுள் ஒரு விட்டில் பூச்சி நுழைந்தது. உடனே பசு மூச்சுவிட முடியாமலும் பங்கர வலியாலும் அலறித் துடித்தது.

அருகில் அமர்ந்து இரை தேடிக் கொண்டிருந்த கொக்கு ஒன்று பறந்து வந்து. ‘பசு நண்பா எதற்காக இப்படி கத்துகிறாய்’ என்றது.

‘என் மூக்கினுள் ஏதோ பூச்சி நுழைந்துவிட்டது. வலி தாங்க முடியவில்லை’ என்றது.

“கவலைப்படாதே நண்பா, கிழே படுத்துக்கொள் நான் பார்க்கிறேன்’ என்றது கொக்கு.

பசு சாய்ந்து படுத்ததும், பசுவின் மூக்கைப் பார்த்த கொக்கு, “ஒன்றுமில்லை நண்பா, பூச்சி உள்ளே தள்ளி செல்லாமல் ஓரமாகத்தான் இருக்கிறது. இதோ எடுத்துவிடுகிறேன்” என்ற கொக்கு தனது நீண்ட அலகால், மூக்கினுள் நுழைந்த பூச்சியை எடுத்து வெளியே போட்டது.

பசு வேதனை குறைந்து நிம்மதி அடைந்தது. “நண்பா உன் உதவிக்கு நன்றி. உங்களை என்னருகே சேர்க்காதபோதும், ஆபத்து என்று வந்தபோது எனக்கு உதவி செய்துவிட்டீர்கள். பூச்சிகள் எங்கள் மூக்கினுள் புகுந்துவிடக்கூடாது என்ற இயற்கை ஏற்பட்டால்தான் நீங்கள் எங்களுடன் அமர்ந்து இரை தேட அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்கள் இனத்தினர் என்னுடன் அமர்ந்து இரை தேட வேண்டும்” என்றது பசு.

கொக்குகளும், பசுவுடன் அமர்ந்து இரைதேட புல்வெளி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கதையின் நீதி: எல்லாமே நன்மைக்காதான் என்று செயல் பட்டால் தீவினைகள் அதிகம் ஏற்படாது.

கதை சொல்லும் முறை

ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கதை சொல்லும் முறை


(i)    குழந்தைகளைப் பார்த்து கதைகளை நல்ல உணர்ச்சியுடன் சொல்ல வேண்டும். அவற்றைப் படித்தல் கூடாது.
(ii)    குழந்தைகள் உற்சாகம் கொள்ளுமாறு ஆர்வத்துடன் சொல்ல வேண்டும்.
(iii)    குழந்தைகள் எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய கதைகளைச் சொல்ல வேண்டும்.
(iv)    கதை நிகழ்ச்சிக்குத் தக்கபடி முகபாவம், குரல் முதலிய வற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
(v)    அளவுக்கு மீறிய உடல் அசைவுகள் நன்மைக்குப் பதிலாக கேடுவிளைவிக்கும் - குழந்தைகளின் கவனத்தைச் சிதற அடிக்கும். எனவே, மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
(vi)    குழந்தைகளின் அறிவு நிலைக்கு ஏற்ற கதைகளைச் சொல்லுதல் வேண்டும்.
(vii)    கதையைச் சொந்த நடையில் சொல்ல வேண்டும். படிப்பது போலச் சொல்லக்கூடாது.
(viii)    கதையில் பொதிந்துள்ள நீதியைக் குழந்தைகள் உணருமாறு செய்ய வேண்டும். வெளிப்படையாகக் கூறுதல் விரும்பத்தக்கதன்று.
(ix)    கதை சொல்ல நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. குழந்தைகளுக்குச் சீக்கிரம் களைப்பு உண்டாகும்.
(x)    படங்களைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை விளக்கிக் கதைகள் கூறுதல் நன்று.

குழந்தைகள் அல்லது மாணாக்கர் கதை சொல்லும் முறை


(i)    ஆசிரியர் சொன்ன கதையைக் குழந்தைகள் திரும்பத் தம் சொந்த நடையில் கூறச்செய்ய வேண்டும்.
(ii)    இதனை ஒரு மாணவன் வகுப்பு முழுவதும் சொல்லலாம் அல்லது பலர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அதனைத் தங்கள் குழுவில் கூறலாம்.
(iii)    பலருக்கும் ஒரே வேளையில் பயிற்சி கிடைக்கும்.
(iv)    ஆசிரியர் சொன்னதைப் போன்ற வேறு ஒரு கதையைக் குழந்தைகள் கூறலாம்.
(v)    ஒரு கதையின் முக்கிய நிகழ்ச்சிகளைக் கரும்பலகையில் எழுதி முழுக்கதையையும் குழந்தைகளைக் கூறச் செய்யலாம்.
(vi)    கதையின் முடிவை மட்டும் கொடுத்து கதையைக் கூறச் செய்யலாம். கதையின் தொடக்கத்தை மட்டும் கூறி, அல்லது பாதிக் கதையைக் கூறி மீதியைக் குழந்தைகள் கூறுமாறு செய்யலாம்.
(vii)    கதையின் உயிர் நாடியான சொல்லையோ, சொற்றொடரையோ, கூறிக் குழந்தைகளைக் கதையை உருவாக்கச் செய்யலாம்.
(viii)     கதையின் முடிவைக் கொடுத்துக் கதையைக் கூறச் செய்யலாம்.
இவ்வாறு பல் வகைகளில் கதைகளைப் பயன்படுத்தி மாணாக்கர் மொழிதிறனையும் குழந்தைகளின் மொழிதிறனையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சேர்ந்து ஒரே மாதிரியான கற்றிப்பிக்கும் முறையை பயன்படுத்த வேண்டும்.