பிரயாணக் கதைகள்

பாதையை மாற்றிய பயணச்சீட்டுசுமன் எப்போதும் அந்த தனியார் பஸ்ஸில் பள்ளிக்கு செல்லவே விரும்புவான். காரணம் அது எப்போதும் பெரும் கூட்டமாக இருக்கும். அரசுப் பேருந்தில் செல்ல இலவச பஸ் பாஸ் இருந்தாலும், பள்ளி துவங்கும் நேரத்துக்குச் செல்ல தனியார் பேருந்தே ஒத்து வந்ததால் அதிலேயே சென்று வந்தான்.

வீட்டில் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தினமும் டிக்கெட்டுக்காக பணம் கொடுத்து விடுவார்கள். அதுதவிர, அவன் அவ்வப்போது கேட்கும் பணமும் மகம் சுளிக்காமல் கொடுக்கப்படும். காரணம், அவன் எண்ணம் முழுவதும் படிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும், தங்கள் மகன் வருங்கலாத்தில் ஒரு பெரிய கல்விமானாக வரவேண்டும் என்றும் பெற்றவர்கள் விரும்பினார்கள்.

ஒவ்வொரு ஸ்டாபிங்கிலும் பஸ் நிற்கும்போது இறங்கிவிடுவான். நடத்துனரின் விசில் சத்தம் கேட்டு பஸ் கிளம்பும்போது வேகமாக ஓடி படியில் நின்று பயணிப்பான்.
நடத்துநர் திட்டுவதைக் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டான். ஆனால் எப்போதும் பயணச்சீட்டு வாங்கியதே இல்லை. கூட்டமாக இருப்பதால் நடத்துநராலும் யார் யார் டிகெட் எடுத்தார்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. எப்போதாவது அவனைப் பார்த்து டிக்கெட் கேட்டால் ஏற்கனவே வாங்கி விட்டேனே என்று கூறி விடுவான்.

இப்படியாக பஸ்சில் டிக்கெட் எடுக்காமலும், பெற்றவர்களிடம் செலவுக்காக கேட்டு வாங்கும் பணத்திலும் பள்ளிக்கு செல்லாமல் கட் செய்துவிட்டு நண்பர்களோடு சினிமாவுக்கு சென்று விடுவான். தவறான பழக்கங்களுக்கும் அடிமை ஆனான். இப்படிப் பெற்றவர்களின் ஆசைக்கு நேர் விரோதமாக இருந்ததோடு, நல்லொழுக்கம் போதிக்கும் கல்விக்கே அவன் ஒரு களங்கமாக விளங்கினான். இப்படியாக அவனுடைய பொழுது ஜாலியாகக் கழித்து கொண்டிருந்தது.

அன்றும் வழக்கம்போல் பயணம் தொடர்ந்தது. அப்போது வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் ஏறினார். சுமன் படியில் நின்று கொண்டிருந்தான். ஒரே கூட்டம். நடந்துனர் டிக்கெட்...டிக்கெட்...என்று கேட்டுத் தொந்தரவு செய்யவே, அன்று ஏமாற்ற வோண்டாம் என்று நினைத்த சுமன் மூன்று ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டான்.

அப்போது அந்த பெரியவர் டிக்கெட்டுக்கான பணத்தை நீட்டினார். நடத்துனர் அவன் அருகில் இருந்ததால் பெரியவரின் அருகில் இருந்தவர்கள் ஒருவர் கை ஒருவர் மாற்றி கடைசியில் பணத்தை வாங்கி சுமனிடம் கொடுத்து, “தம்பி, பெரியவருக்கு மூன்று ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொடுப்பா” என்றார்.

நடத்துனர் முன்புறம் பார்த்து டிக்கெட் கேட்பதில் ஈடுபட்டிருந்தார். அதற்குள் அவன் இறங்க வேண்டிய இடமும் வந்தது. சட்டென தன்னிடம் இருந்த மூன்று ரூபாய் டிக்கெட்டை எடுத்து பெரியவரிடம் கொடுத்துவிட்டு, அந்தப் பணத்தை பெருமையுடன் தன் பையினுள் நுழைத்தான், ‘ஆகா, இன்னிக்கு நாம முழிச்சது நரி முகத்துல போல இருக்கு... இல்லாட்டி நாம டிக்கெட் வாங்கினாலும் ஏன் அனாவசியமா செலவு செய்றதேன்னு சொல்லாம சொல்லி அந்த டிக்கொட்டுக்கான பணத்தை பெரியவர் மூலமாக கடவுள் நமக்கு கிடைக்க வெச்சிருப்பாரா...’
என்று நினைத்துக் கொண்டு அவன் ஸ்டாப்பில் இறங்கவும், டிக்கெட் பரிசோதகர் வரவும் சரியாக இருந்தது.

“தம்பி, உன் டிக்கெட்டைக் கொடு?”
“சார் வந்து...” என்று சொல்லியபடி பையினுள் கையைவிட்டு பாசாங்கு செய்தான்.

“என்ன கிடைச்சுதா?”

“இல்ல சார், கூட்டத்துல எங்காச்சும் விழுந்திருக்கு மோன்னு நினைக்கிறேன்...”

“இத்தனை பேரும் கூட்டத்துலதானே நின்னுகிட்டு வந்தாங்க. உன்னோட டிக்கெட் மட்டும் எப்படி காணாமப் போச்சு?”

“இல்ல சார், உண்மையிலேயே நான் டிக்கெட் வாங்கினேன்”

“அப்படின்னா டிக்கெட்க் காட்டு, இல்லாட்டி 500 ரூபாய் அபராதம் கட்டிட்டு போ’

“சார்...சார்...அவ்வளவு பணம் இல்லீங்க. வேணும்னா டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துடறேன் சார்” என்று கெஞ்சினான் சுமன்.

“அது ஒத்து வராது தம்பி, 500 ரூபாய் பைன் கட்டு. இல்ல போலீசுக்கிட்ட ஒப்பட்ச்சுடுவோம். என்ன சொல்ற...?

அவன் தலையைக் குனிந்து கொண்டான்.

“எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற?”

பள்ளியின் பெயரைச் சொன்னான் சுமன்.

“ஏம்பா, இதைத்தான் பள்ளியில சொல்லி கொடுத்திருக்காங்களா?” செக்கிங் கோபமாகக் கேட்டார்.

அப்போது பஸ்சிலிருந்து இறங்கிய சுமனின் ஆசிரியர் வேகமாக செக்கிங்கை நோக்கி வந்தார்.

“அய்யா வணக்கமுங்க. நான் தமிழ் ஆசிரியர், வகுப்பு ஆசிரியரும் கூட. நாங்க நல்லொழுக்கத்தைத்தான் போதிக்கிறோம். பயணிக்கும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டாமென்றே. சாப்பிடும் சிற்றுண்டிக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றோ போதிப்பதில்லை. உங்களிடம் மாட்டிக்கொண்ட இந்தப் பையன் ஒழுங்கீனமானவன். பள்ளிக்கு பல நாட்கள் கட்அடித்து, தகாத நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிபவன். இவனுக்கு நாங்கள் கூறிய புத்திமதிகள் அனைத்தும் கடலில் பெய்த மழை போல வீணாயிற்று. இது ஆசிரியரின் குற்றமோ, பள்ளியின் குற்றமோ இல்லை. இருந்தாலும் இவன் என் மாணவன் என்பதால் இவன் செயலுக்கு வெட்கப்பட்டு, தாங்கள் கேட்கும் அபராதத்தை நானே கட்டி விடுகிறேன்” என்று கூறி தன் பர்சிலிருந்த பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தார்.

நல்லொழுக்கம் போதிக்கும் அசிரியருக்கும், நற்பண்புகள் வளர்க்கும் கல்விக்கூடத்துக்கும் தன்னுடைய செயலால் கெட்ட பெயர் உண்டானதற்காக மனம் வருந்தி அழுது ஆசிரியரின் கால்களில் விழுந்தான் சுமன். அன்று மாலையே தன் பெற்றவர்களிடம் நடந்ததை மறைக்காமல் கூறி அவர்களிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அத்துடன் நிற்காமல் தன் தந்தையை விட்டே தமிழ் ஆசிரியர்  அபராதமாகச் செலுத்திய 500 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இப்போது பஸ்சில் ஏறிய உடனே முதல் ஆளாக டிக்கெட் எடுப்பதுடன், படியில் நின்று பயணிப்பதையும் விட்டு விட்டான் சுமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக