வெள்ளி, 12 ஏப்ரல், 2013

பிடிவாதம்

ரேவதி நன்றாகப் படிக்கும் மாணவி, பிறர் தன்னிடம் ஒப்படைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைசாலி சிறுமி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள்.

ஆனால் ரேவதியின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. ரேவதியின் அம்மா, அப்பாவிற்கு அவளது பிடிவாதம் பெரிய தலைவலியாக இருந்தது. உடை, பொம்மை, பரிசுப் பொருள் எது கேட்டாலும் உடனே வாங்கி தரவேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.

நாளைய தினம் ரேவதியின் பிறந்தநாள். வெகு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரவேண்டும் என்று அடம்பிடித்தாள்.

ரேவதியின் அம்மாவும், அப்பாவும் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் இங்கே இருக்கணும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு’ என்று கட்டளையிடுவதுபோல் கூறிவிட்டுச் சென்றாள்.

ரேவதியின் பெற்றோர் என்ன சய்வதென்று தெரியாமல் விழித்தனர்.

மாலையில் பள்ளி முடிந்ததும் ரேவதி  வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க?” என்றாள்.

“நீதான், எல்லாரும் டூர் போறாங்க... என்னை அனுப்ப மாட்டீங்களான்னு கேட்ட இல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும்.’ என்றார்.

“இல்லேப்பா நான் டூர் போகலை. அடுத்தவாட்டி போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா” என்றாள் அந்த வீட்டுச் சிறுமி.

“இல்லைங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். பண்ணைக்காரர் தோடத்திலே வேளைக்கு ஆள் கூப்பிட்டிருக்காங்க. நான் ஒருவாரம் வேலைக்குப்போறேன். கிடைக்கிற பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சிரியாக இருக்கும்” என்றாள் அந்த சிறுமியின் அம்மா.

இதை பார்த்துக் கொண்டிருந்த ரேவதி ஆச்சிரியப்பட்டாள். ‘ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கிறாள். ஒரு அம்மா, தன் குழந்தைக்காகவும், கணவருக்காகவும் வேலைக்குப் போகிறேன் என்கிறார். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதால் அவர்கள் குடிசையில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது’ என்று எண்ணினாள்.

ரேவதி வீட்டிற்குச் சென்றதும் அவளது பெற்றோர் என்ன சொல்லப்போகிறாளோ என்று தயங்கிக் கொண்டிருந்தனர். “ரேவதி...” என்று அவர்கள் வாயெடுக்க, “அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா அடுத்த பொறந்த நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று கூறியவளைப் பார்த்து வியப்படைந்தனர் அவளது பெற்றோர்.

தனது பிடிவாத குணத்தை அழித்த மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் ரேவதி.

கழுகும், நரியும்

வேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால்  கட்டிப் போட்டிருந்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி, தன் வீட்டிற்குக் கொண்டு சென்று அன்புடன் வளர்த்தார்.

இறக்கைகள் நன்கு வளர்ந்ததும் அதைப் பறந்துபோக அனுமதித்தார். கழுகு பறந்து செல்லும் போது. அதன் பார்வையில் ஒரு முயல் தென்பட்டது. அதை அப்படியே தூக்கி வந்து தன்னை வளர்த்த பெரியவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த நரி, ‘ஏற்கனவே உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்கலாம். இந்த முயலை நீ அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடுயும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். பெரிய வருக்கு நீ முயலைக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் அவர் உன்னைப் பிடிக்க வரப்போவதில்லை. எதற்காக  அப்படிச் செய்தாய்’ என கழுகைப் பார்த்துக் கேட்டது.

“அது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை வலைவிரித்துப் பிடிக்கலாம். ஆனால், நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் பெரியவர் காப்பாற்றியுள்ளார். அவரிடம் நான் கொண்டுள்ள நன்றியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தவே முயலைக் காணிக்கையாகச் செலுத்தினேன். உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்” எனப் பதில் கூறியது கழுகு.

கதையின் நீதி: ஆபத்துக் காலங்களில் உதவி செய்தவர்களை மறக்காமல் நன்றியோடு இருப்பது தான் நல்லவர்களுக்கு அழகு.

நாளைய உணவு

சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேயந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது.

அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்” என்றது காட்டமாய்.

இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள்...என நொந்தபடியே தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது வெள்ளாடு.

சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில்  ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன.

வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.

‘அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?’ என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன.

‘இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம்’ என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.


பேராசை பெருநஷ்டம்!!!

ராமு, சோமு. அம்மு, பொம்மு என்று 4 குறங்குகள் இருந்தன. அவை ஒருநாள்  அருகிலுள்ள பழத்தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே பறித்து வைத்திருந்த பழங்களை கூடையோடு தூக்கிக் கொண்டு தங்கள் வசிப்பிடத்திற்கு சென்றன.

அவைகள் திருடிய பழக்கூடையை. ஆளுக்கு கொஞ்ச நேரமாக தலையில் சுமந்தபடி வந்து கொணடிருந்தன. அந்த வழியில் ஒரு மரத்தடியில் பஞ்சுமிட்டாய் விற்பவன் படுத்து இருந்தான். அவன் தலைக்குப் பக்கத்தில் கூடை நிறைய பஞ்சுமிட்டாய் இருந்தது. பஞ்சுமிட்டாய் வியாபாரி பயணக்களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.

பழக்கூடையைத் தூக்கிவந்த குரங்களுக்கு பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்ததது.

“அந்தப் பஞ்சுமிட்டாய் ரொம்ப இனிப்பாக இருக்கும். எனக்கு அதைச் சாப்பிட ஆசையாக இருக்கு” என்றது ராமு குரங்கு.

‘ஆமாம், ஆமாம்... எத்தனை நாளைக்குதான் பழங்களையே தின்பது, இன்று பஞ்சுமிட்டாய் சாப்பிடுவோம்” என்றது சோமு.

“அந்த பஞ்சுமிட்டாய் விற்பவன் நன்றாகத் தூங்குகிறான், அவைகளை கூடையோடு தூக்கிச் சென்றுவிடலாம்” என்றது அம்மு.

“நாம் முதலில் இந்தப் பழங்களை நம் இருப்பிடம் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு வாய்ப்பு கிடைத்தால் பஞ்சுமிட்டாயை திருடலாம். அவன் அருகிலேயே படுத்து இருக்கிறான். நாம் பிடிபட்டால் தொலைத்துவிடுவான்.” என்றது பொம்மு குரங்கு.

“பொம்மு சொல்வதும் சரிதான். நாம் பழங்களை வீட்டில் வைத்துவிட்டு வருவோம்” என்றது அம்மு.

“இல்லை...இல்லை... அவன் நன்றாக தூங்குகிறான். இப்போத பஞ்சு மிட்டாயை எடுத்துவிட வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தன, ராமுவும் சோமுவும். 

அவை இரண்டும், பஞ்சுமிட்டாய்  கூடையை நெருங்கி  அவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடின.

அம்முவும், பொம்முவும் பழக்கூடையை சுமந்து கொண்டு சென்றன.
சில நிமிடங்களில் கண்விழித்த பஞ்சுமிட்டாய் வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். பதற்றத்தில்  பஞ்சுமிட்டாயைத் தேடி அங்கும் இங்கும் ஓடினான், தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையை கொண்டு செல்வதைக் கண்டான்.

‘ஏய் திருட்டுக் குரங்குகளா, என் பஞ்சுமிட்டாயையா திருடிச் செல்கிறீர்கள், உங்கள் மண்டையை உடைக்கிறேன் பாருங்கள்’ என்று கற்களை எடுத்து அவைகள் மீது வீசி எறிந்தான்.

கல்லடிபட்ட குரங்குகள் இரு கூடைகளையும் போட்டுவிட்டு பிழைத்தால் போது மென்று அலறிக் கொண்டே ஓடின. பஞ்சுமிட்டாய் வியாபாரி, ‘குரங்குகளால் எனக்கு ஒரு கூடை பழம் லாபம்’ என்று பஞ்சுமிட்டாயுடன் பழக்கூடையையும் தூக்கிச் சென்றான்.

“நான் அப்பவே சொன்னேன். இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு, இப்போ நாம் கொண்டு வந்த பழக்கூடையும் போச்சா” என்றது பொம்மு குரங்கு.

“சரிதான் நாம் பேராசைப் பட்டோம், பெருநஷ்டம் அடைந்தோம்” என்றன மற்ற குறங்குகள்.



வியாழன், 11 ஏப்ரல், 2013

தொல்லை?


பசுமையைன புல்வெளி. நிரைய பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் அவற்றின் அருகே நின்று பறக்கும் பூச்சிகளை பிடித்து தின்றன.

கொக்குகள் அவ்வப்போது மாடுகளின் முதுகில் ஏறும். வாய் அருகில் செல்லும். இது மாடுகளுக்கு தொந்தரவாக இருக்கும். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பசுவிற்கு கொக்குகளின் இந்த செயல் பிடிக்க வில்லை.

ஒருநாள்  அந்த பசு கொக்குகளை கண்டித்தது. “நான் புற்களை கடிக்கும் இடத்தில் நீங்கள் நின்றுகொண்டு எனக்கு தொந்தரவு செய்யக்கூடாது” என்று எச்சரித்தது.

‘இல்லை நண்பா!, எங்களை விரட்டாதீர்கள். புற்களின் அடியில் பூச்சிகள் மறைந்துகொள்ளும் எங்களால் அவைகளை எளிதாக பிடிக்க முடியாது. ஆனால் நீங்கள் புற்களை மேயும்போது உங்கள் மூச்சுக்காற்று பட்டு புற்கள் அசையும். அப்பொழுது மறைந்திருக்கும் பூச்சிகள் அங்குமிங்கும் ஓடும். அதை நாங்கள் எளிதாகப் பிடித்து உண்டு எங்கள் பசியாற்றிக் கொள்வோம். உங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கமாட்டோம்’ என்று கொக்கு பணிவுடன் சொன்னது.

“அப்படியானால் நீங்கள் பூச்சி பிடித்து உண்ண நாங்கள் உதவணுமா? முடியவே முடியாது. எனக்கு இடையூறாக இருக்கும் எதையும் நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கடைசியாக நான் உங்கள் கொக்கு கூட்டத்தையே எச்சரிக்கிறேன். என் பக்கம் யாருமே வரக்கூடாது.  மீறி வந்தீர்களென்றால் என் கால்களால் உங்களை மிதித்து நாசம் செய்துவிடுவேன். ஜாக்கிரதை” என்று கடும் கோபத்தோடு பசு கொக்குகளை விரட்டியடிக்க, பயந்தோடியது கொக்குகள்.

 அன்றிலிருந்து அந்தப் பசு புல்மேயும் இடத்திற்கு எந்த கொக்கும் செல்லவில்லை. அந்தப் பசு ஒரு முறை தன்னுடன் மேய்ந்து கொண்டிருந்த இன்னொரு பசுவிடம், “பார்த்தாயா நண்பா, என்பக்கம் எந்த கொக்கும் வருவதில்லை. எந்த தொந்தரவும் தருவதில்லை. டென்ஷன் இல்லாமல் புல் மேய்கிறேன். உனக்கு அந்தக் கொக்குகளை விரட்ட தைரியமில்லை. அதனால்தான் உன்னிடம் அவைகள் வாலாட்டுகின்றன” என்றது.

“நீ சொல்லுவதுபோல் கொக்குகளால் எனக்கு எந்த இடைஞ்சலும் இல்ல” என்றது மற்றொரு பசு.

“சரி உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு இந்தப் பசு மேயத் தொடங்கியது.

சில நாட்கள் கழித்து, கொக்கு நெருங்காத பசு மிகுந்த பசியுடன் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அதன் மூக்கினுள் ஒரு விட்டில் பூச்சி நுழைந்தது. உடனே பசு மூச்சுவிட முடியாமலும் பங்கர வலியாலும் அலறித் துடித்தது.

அருகில் அமர்ந்து இரை தேடிக் கொண்டிருந்த கொக்கு ஒன்று பறந்து வந்து. ‘பசு நண்பா எதற்காக இப்படி கத்துகிறாய்’ என்றது.

‘என் மூக்கினுள் ஏதோ பூச்சி நுழைந்துவிட்டது. வலி தாங்க முடியவில்லை’ என்றது.

“கவலைப்படாதே நண்பா, கிழே படுத்துக்கொள் நான் பார்க்கிறேன்’ என்றது கொக்கு.

பசு சாய்ந்து படுத்ததும், பசுவின் மூக்கைப் பார்த்த கொக்கு, “ஒன்றுமில்லை நண்பா, பூச்சி உள்ளே தள்ளி செல்லாமல் ஓரமாகத்தான் இருக்கிறது. இதோ எடுத்துவிடுகிறேன்” என்ற கொக்கு தனது நீண்ட அலகால், மூக்கினுள் நுழைந்த பூச்சியை எடுத்து வெளியே போட்டது.

பசு வேதனை குறைந்து நிம்மதி அடைந்தது. “நண்பா உன் உதவிக்கு நன்றி. உங்களை என்னருகே சேர்க்காதபோதும், ஆபத்து என்று வந்தபோது எனக்கு உதவி செய்துவிட்டீர்கள். பூச்சிகள் எங்கள் மூக்கினுள் புகுந்துவிடக்கூடாது என்ற இயற்கை ஏற்பட்டால்தான் நீங்கள் எங்களுடன் அமர்ந்து இரை தேட அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்கள் இனத்தினர் என்னுடன் அமர்ந்து இரை தேட வேண்டும்” என்றது பசு.

கொக்குகளும், பசுவுடன் அமர்ந்து இரைதேட புல்வெளி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கதையின் நீதி: எல்லாமே நன்மைக்காதான் என்று செயல் பட்டால் தீவினைகள் அதிகம் ஏற்படாது.

கதை சொல்லும் முறை

ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கதை சொல்லும் முறை


(i)    குழந்தைகளைப் பார்த்து கதைகளை நல்ல உணர்ச்சியுடன் சொல்ல வேண்டும். அவற்றைப் படித்தல் கூடாது.
(ii)    குழந்தைகள் உற்சாகம் கொள்ளுமாறு ஆர்வத்துடன் சொல்ல வேண்டும்.
(iii)    குழந்தைகள் எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய கதைகளைச் சொல்ல வேண்டும்.
(iv)    கதை நிகழ்ச்சிக்குத் தக்கபடி முகபாவம், குரல் முதலிய வற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
(v)    அளவுக்கு மீறிய உடல் அசைவுகள் நன்மைக்குப் பதிலாக கேடுவிளைவிக்கும் - குழந்தைகளின் கவனத்தைச் சிதற அடிக்கும். எனவே, மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
(vi)    குழந்தைகளின் அறிவு நிலைக்கு ஏற்ற கதைகளைச் சொல்லுதல் வேண்டும்.
(vii)    கதையைச் சொந்த நடையில் சொல்ல வேண்டும். படிப்பது போலச் சொல்லக்கூடாது.
(viii)    கதையில் பொதிந்துள்ள நீதியைக் குழந்தைகள் உணருமாறு செய்ய வேண்டும். வெளிப்படையாகக் கூறுதல் விரும்பத்தக்கதன்று.
(ix)    கதை சொல்ல நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. குழந்தைகளுக்குச் சீக்கிரம் களைப்பு உண்டாகும்.
(x)    படங்களைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகளை விளக்கிக் கதைகள் கூறுதல் நன்று.

குழந்தைகள் அல்லது மாணாக்கர் கதை சொல்லும் முறை


(i)    ஆசிரியர் சொன்ன கதையைக் குழந்தைகள் திரும்பத் தம் சொந்த நடையில் கூறச்செய்ய வேண்டும்.
(ii)    இதனை ஒரு மாணவன் வகுப்பு முழுவதும் சொல்லலாம் அல்லது பலர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அதனைத் தங்கள் குழுவில் கூறலாம்.
(iii)    பலருக்கும் ஒரே வேளையில் பயிற்சி கிடைக்கும்.
(iv)    ஆசிரியர் சொன்னதைப் போன்ற வேறு ஒரு கதையைக் குழந்தைகள் கூறலாம்.
(v)    ஒரு கதையின் முக்கிய நிகழ்ச்சிகளைக் கரும்பலகையில் எழுதி முழுக்கதையையும் குழந்தைகளைக் கூறச் செய்யலாம்.
(vi)    கதையின் முடிவை மட்டும் கொடுத்து கதையைக் கூறச் செய்யலாம். கதையின் தொடக்கத்தை மட்டும் கூறி, அல்லது பாதிக் கதையைக் கூறி மீதியைக் குழந்தைகள் கூறுமாறு செய்யலாம்.
(vii)    கதையின் உயிர் நாடியான சொல்லையோ, சொற்றொடரையோ, கூறிக் குழந்தைகளைக் கதையை உருவாக்கச் செய்யலாம்.
(viii)     கதையின் முடிவைக் கொடுத்துக் கதையைக் கூறச் செய்யலாம்.
இவ்வாறு பல் வகைகளில் கதைகளைப் பயன்படுத்தி மாணாக்கர் மொழிதிறனையும் குழந்தைகளின் மொழிதிறனையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சேர்ந்து ஒரே மாதிரியான கற்றிப்பிக்கும் முறையை பயன்படுத்த வேண்டும்.

கதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை

1.    காட்சிப் பொருள்கள்

கருத்துப் பொருள்களைவிடக் காட்சிப் பொருள்களே எல்லா வயது பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்க வல்லன. எனவே குழந்தைகளின் அறிவு நிலைக்கும் வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வாழ்க்கையோடு ஒட்டி அமைந்துள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பள்ளி மாணவர்கள் தம் சூழ்நிலையிலுள்ள விலங்குகள், பறவைகள், காட்சிகள், பற்றிய கதைகளைப் பெரிதும் விரும்புவார்கள்.

2.    கதையின் நீளம்

 மிக நீண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்தல் கூடாது. அதிகமான வர்ணனைகளால் கதை நீண்டு வளரும். அவ்வித வருணனைகளும், வேண்டாத செய்திகளும் உள்ள கதைகளைத் தவிர்த்தல் வேண்டும். ஒரு கதையில் உட்கதை, உட்கதையாக வந்தால் மாணாக்கர் அவற்றையறிந்துகொள்ள சிரமப்படுவர். அவற்றையும் நீக்குதல் வேண்டும். சுருக்கமாக எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய அதிக நீளம் இல்லாத கதைகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

3.    அச்சமூட்டும் கதைகள்

 பெரிதும் துன்பம் தருகின்ற பேய், பிசாசுக் கதைகள், திடீர் நிகழ்ச்சிகள், அடங்கிய கதைகள் குழந்தைகளுக்கு அச்சம் ஊட்டுவனவாம். அவ்வகைக் கதைகளைத் தவிர்த்தல் நன்று.

4.    சோகக் கதைகள்

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக விளையாடி இன்பமாகப் பொழுதுபோக்க விரும்புவர்கள், அவர்களுக்குத் துயரம் தரும் துன்ப நிகழ்ச்சிகள் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்தல் கூடாது. எனவே சோக நிகழ்ச்சிகள், துன்ப முடிவுகள் உள்ள கதைகளைத் தவிர்த்தல் நன்று.

5.    ஆட்டத்திற்கு இடம்

குழந்தைகள் இயல்பாகவே கை, கால், உறுப்புகளை அசைத்தும், முகத்தில் பல்வகை வேறுபாடுகளைக் காட்டியும், மெய்ப்பாடுகளுடன் பேசப் பெரிதும் விரும்புவர். அதற்கேற்ற வகையில் கதைகள் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

6.    சொற்பின் வரும் கதைகள்

சில கதைகளில் ஒரு தடவை வந்த தொடரோ, சொல்லோ மீண்டும் மீண்டும் வரும்படி அவை அமையும். அவ்வகைக் கதைகளை மாணாக்கர் பெரிதும் விரும்புவர். அம்மாதிரித் தொடர்கள் பலதடவை வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

7.    நகைச்சுவை

நகைச்சுவை யாவராலும் விரும்பப்படுவதொன்று. அது உடலுக்கு நலம் தருவது. குழந்தைகளும் நகைச்சுவையினைப் பெரிதும் விரும்புவர். எனவே நகைச்சுவை நிறைந்த கதைகளை அதிகமாகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

8.    பலவகைக் கதைகள்

கதைகள் பல வகைப்படும். அவையாவன: (அ) இயற்கைக் கதைகள், (ஆ) பிராணிகள், பறவைகள், மரஞ்செடிகள், பேசும் வகையில் அமைந்த கதைகள் (உதாரணம்: பஞ்ச தந்திரக் கதைகள்), (இ) மோகினி அல்லது மாயா விநோதக் கதைகள் ( உதாரணம்: அலாவுதீனும் அற்புத விளக்கும்), (ஈ) நாடோடிக் கதைகள் (உதாரணம்: தேசிங்குராஜன் கதை) (உ) புராணக் கதைகள் (உதாரணம்: பாரதம், இராமாயணம்) (ஊ) வரலாற்றுக் கதைகள் (உதாரணம்: கட்டபொம்மன் மருது பாண்டியர் கதைகள்), (எ) வாழ்க்கை வரலாறு (உதாரணம்: காந்திமகான் கதை, நேரு, கென்னடி வரலாறுகள்), (ஏ) பிரயாணக் கதை (உதாரணம்: கல்லிவரின் பயணம்), (ஐ) விஞ்ஞானத்தின் கதை (உதாரணம்: இரயில் கண்டுபிடித்த வரலாறு, ஆகாய விமானம் கண்ட முறை), (ஒ) விநோதக் கதைகள் (உதாரணம்: தெனாலிராமன் கதை), (ஓ) சங்கிலித் தொடர் கதைகள் (உதாரணம்: விக்கிரமாதித்தன் கதை), (ஔ) சாகசக் கதைகள் (உதாரணம்: சிவாஜி யின் கதை)

கதை சொல்லும் ஆசிரியர் அல்லது பெற்றோர் மாணாக்கரின் மற்றும் குழந்தைகளின் சிந்தனைதிறன் தன்மையை பொறுத்து கதைகளைத் தேர்ந்தெடுத்து நன்கு கதையின் கருத்தைப் புரிந்துகொண்டு பிறகு கதை சொல்லுதல் அவசியமாகும்.

 

கதைகளின் பொது நோக்கங்கள்

1.    மகிழ்ச்சியூட்டல்

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டுதலே கதை கூறுதலின் தலையாய நோக்கமாகும். குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகளை வலைதளத்தில் இருந்து எடுத்து ஆசிரியர் அல்லது பெற்றோர்கள் கூறச் செய்து பிள்ளைகளை பகிழ்ச்சியூட்டலாம். வேடிக்கை கதைகளையும், நகைச்சுவைக் கதைகளையும் தேர்ந்தெடுத்துக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி யூட்டுதல்வேண்டும்.

2.    அன்பை வளர்த்தல்


   கதை கேட்பதில் உள்ள ஆர்வத்தால் கதை கூறுபவர்பால்
   குழந்தைகளுக்கு அன்பு ஏற்படும். மாணாக்கர் அன்போடு
   பழகுவதால், ஆசிரியருக்கு அவர்கள் மீது அன்பு ஏற்படும்.
   குழந்தைகள் அன்போடு பழகுவதால் வீட்டில் அன்பு   மலரும். இவ்வாறு ஒருவருக்கொருவரிடையே அன்பை வளர்த்தல் கதைகூறுபவர்களின் மற்றும் கதை வெளியிடுபவர்களின் நோக்கமாகும்.

3.    உணர்ச்சி வெளியீடு

மாணாக்கரிடத்து உணர்ச்சி வெளியீட்டினைத் தோற்றுவிக்கவும் கதைகள் பயன்படும். ஆசிரியர் கதை கூறும்போது. அவை உண்மையாக நிகழ்ந்தன போன்று ஒர் உணர்ச்சியைத் தூண்டுதல் வேண்டும். இன்பம், துன்பம், மகிழ்ச்சி, அச்சம், கோபம் போன்ற உணர்ச்சிகள் பொங்குமாறு கதைகள் அமைந்தால் மாணாக்கர் உணர்ச்சி வயப்படுவர். கருத்துகள் நிலைத்து நிற்கும், எனவே உணர்ச்சிகளைத் தூண்டி வெளியிடச் செய்தல் கதை கூறுதலின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

4.    கவனிக்கும் திறன்

மாணவர்களிடம் கவனிக்கும் திறனை வளர்ப்பது கல்வி கற்பித்தலின் நோக்கங்களுள் ஒன்று. அதற்குக் கதைகள் பெரிதும் உதவுவனவாகும். கதை கூறும்பொழுது சொற்களைச் செவி கேட்க, மனமும் ஒன்றுகின்ற நிலையை நாம் காணலாம். மனமும் கருத்தும் ஒன்றுபட்டுக் கதைப் போக்கில்  ஈடுபடுவதால் கவனிக்கும் திறன் உண்டாகிறது. ஆசிரியர் அல்லது குழந்தைகளின் உறவினர்கள் கதைகள் கூறும்போது அனைத்துச் சொற்களையும் குழந்தைகள் சிறிதுவிடாது கேட்கின்றனர். கற்றுக் கொள்கின்றனர். இதன் காரணமாய்க் கவனிக்கும் திறன் மாணாக்கர்க்கு அதிகமாக உண்டாகின்றது. இவ்வாறு கவனிக்கும் திறன் வளர்ப்பது கதைகளின் தலைசிறந்த பயன்பாடுகளின் ஒன்று.

5.    பள்ளியின்பால் பற்று

கதை வகுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதால் மாணாக்கர் விருப்பத்தோடு பள்ளிக்கு வருவர். பள்ளியின்பால் பற்று ஏற்படுகிறது. இது பொது நோக்கங்களுள் ஒன்றாகும்.

6.    நற்குணப் பயிற்சி

சிறந்த நல்லொழுக்கமுடைய கதை மாந்தர்களைக் கேட்டுத் தாமும் அவ்வாறு நற்குணம் உடையவராய் விளங்க வேண்டும் என்னும் ஆர்வம் இயல்பாய் எழும். அரிச்சந்திரன் கதையைக் கேட்டுத் தாமும் உண்மையே பேச வேண்டும் என்ற என்னம் எழும். நள தமயந்தியின் கதைகளை கேட்டு நாமும் அவ்வாறு ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்ற என்னம் உண்டாகும்.

7.    வாய்மொழிப் பயிற்சி

கதைகளைக் குழந்தைகளே கூறும்பொழுது கதையின் வரும் தொடர்களைப் பிழையின்றிக் கூறுதல் கதையை முறையாகக் கூறுதல் ஆகியவற்றின் மூலம் வாய்மொழிப் பயிற்சி பெறுகின்றனர்.

சிறப்பு நோக்கம்


ஒவ்வொரு கதைக்கும், சிறப்பு நோக்கம் அக்கதைக்கு ஏற்ப அமையும் எனினும் கீழ்க்கண்டவற்றைச் சிறப்பு நோக்கங்களாகக் கொண்ட கதைகளைப் பள்ளி மாணவர்களுக்காக தேர்ந்தெடுத்தல் நன்று.

1.    அறிவு – பண்பாட்டு வளர்ச்சி

கதைகளில் வரும் செய்திகளும், கதை மாந்தரால் கூறப்படும் கருத்துகளும் மாணாக்கரது அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவனவாம். மற்றும் கதை மாந்தரது பழக்க வழக்கங்களையும், அவர்கள் ஒருவரோடு ஒருவர்  பழகும் பான்மையினையும் படிக்கும்பொழுது மாணாக்கர் பயன்பாடுகளை அறிகின்றனர். அது அவர்கள் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். பல துறை அறிவினை வழங்குகின்ற கதைகளையும், நல்ல பண்பாட்டுடன் விளங்கும் கதை மாந்தர் கதைகளையும் இணையத்தில் இருந்தோ அல்லது கதைகள் மொழிப்பாடத்தில் இருந்தோ தேர்ந்தெடுத்து மாணாக்கருக்குக் கூறுதல் வேண்டும்.

2.    இறையுணர்வு ஊட்டல்

இறைவனை வழிபட்டுச் சிறந்த அடியாளர்களைப் பற்றிக் கூறும் பக்திக் கதைகள் இறையுணர்வினையூட்டும். எம்மதமும் சம்மதமே என்றும், இறைவன் ஒருவனே என்றும் கருத்துகள் அமையுமாறு கதைகள் கூறப்படுதல் நன்று. ஏனெனில் வகுப்பில் பல சமயத்தைச் சார்ந்தவர்  இருப்பர், சமுதாயத்தில் சிறுவர்கள் பல சமயத்து மக்களின் குழந்தைகளோடு பழகுவார்கள் ஆகையால் தனிப்பான்மை ஏற்படாத வன்னம் அனைத்து மதச் சார்பாகவும் ஒவ்வொரு கதை கூறி மாணவர்களுக்கு இறையுணர்வினை ஊட்டலாம். மற்றும் ஒழுக்க நெறியில் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டு செய்து உயர்வு எய்திய சான்றோரைப் பற்றிய கதைகளைக் கூறுதலும் நலம் பயக்கும்.

3.    படைப்பாற்றலை வளர்த்தல்

கதைகளைக் கேட்கும் மாணக்கர் தாமே கதை புனையும் விருப்பம் கொள்வர். ஆசிரியர் தொடங்க நிலையில் சிறுகதையைப் பாதியளவு கூறி மாணாக்கரை முடிக்கச் செய்யலாம். பின்னர், இரண்டொரு தொடர்கள் குறித்து கதையை அவர்களே எழுதச் செய்யலாம். இவ்வாறு மாணாக்கரது படைப்பாற்றலைக் கதைகள் எழுதச் செய்வதன்மூலம் வளர்க்கலாம்.

4.    நினைவாற்றலும் நடிப்பாற்றலும்

மாணக்கரது நினைவாற்றலை வளர்த்தலை ஒரு சிறப்பு நோக்கமாகக் கொண்டு ஆசிரியர் கதைகளைக் கூறுதல் வேண்டும். முதலில் வகுப்பில் கூறிய கதைகளை மீண்டும் சொல்லுதல் வேண்டும். இடையில் நிறுத்தி மாணாக்கரைத் தொடர்ந்து கூறச் செய்யலாம். இரண்டு அல்லது மூன்று முறை கதைகளைக் கூறி மாணாக்கரைக் திரும்பக் கூறச் செய்தல் அவர்களது நினைவாற்றலை வளர்க்கும்.
சிறுகதைகளை மாணாக்கரை வீட்டில் படிக்கச் செய்து வகுப்பில் அவற்றை கூறச் செய்வதன் மூலம் அவர்களது நினைவாற்றலை வளர்க்கலாம்.
குழந்தைகள் கதைகளைக் கூறும் கதை மாந்தரின் பேச்சை உணர்ச்சியுடன் வெளியிடும்பொழுதும், இடங்களையும் நிகழ்ச்சிகளையும் வருணிக்க மெய்ப்பாடுகளைப் பயன்படுத்தும் பொழுதும், அவர்களது நடிப்பாற்றல் வெளிப்படும். இவ்வாறு நினைவாற்றலும் நடிப்பாற்றலும் சிறந்து வளரக் கதைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது.

5.    கற்பனையாற்றலை வளர்த்தல்

கதைகளைப் படிக்கும்பொழுது கதை ஆசிரியரின் கற்பனை மாணாக்கர் தம் உள்ளத்தைக் கவர்கிறது. கதை மாந்தர் வேறு எப்படிச் செயல்பட்டிருக்கலாம் என்று கேட்கும்பொழுது மாணாக்கர் கற்பனையாற்றல் வெளிப்படும். சில வேளைகளில் படித்த, கேட்ட கதைகளைத் திரும்பக்கூறும்பொழுது கதை நிகழ்ச்சியை மாற்றியும், ஒரு சில சொற்களைச் சேர்த்தும் கூறுவர். இவ்வாறு உருவாவதுதான் கற்பனை, இக்கற்பனையாற்றலை வளர்க்க  ஆசிரியர் கதைகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.

6.    சொற்களஞ்சியப் பெருக்கம்

கதைகளில் வரும் நிகழ்ச்சிகளை வருணிக்கும்பொழுதும், இடங்களை வருணிக்கும் பொழுதும் புதிய சொற்கள் இடம்பெறும். மற்றும் கதை மாந்தர் வெவ்வேறு துறைகளைப் பற்றிப் போசும்பொழுதும் புதிய சொற்கள் பயன்படுத்தப்படும். இவ்விதமான கதைகளைப் படிக்கும், கேட்கும் மாணாக்கரது சொற்களஞ்சியம் பெருகும். சொற்களஞ்சியம் பெருக்குதல் ஒரு சிறப்பு நோக்கமாக அமைகிறது.

7.    நாட்டுப் பற்றினை வளர்த்தல்

நாட்டின் மீது பற்றுக்கொண்டு, அதற்காகத் தம் உடல், பொருள் உயிர் அத்தனையும் கொடுத்த வீரர் தம் வரலாற்றைப் படிக்கும்பொழுது மாணாக்கர் உள்ளத்தில் நாட்டுப்பற்று எழும். நாட்டுப் பற்றினை வளர்க்கக் கதைகள் பெருமளவு உதவும். நாடு அடிமைப்பட்டிருந்த காலத்து நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட வீரர்கள், சிறந்த இலக்கியங்களைப் படைத்துத் தந்த கவிஞர்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்த தன்னலமற்ற சமூகத் தொண்டர்கள் ஆகியோரின் வரலாறுகள் நாட்டுப் பற்றினை வளர்ப்பனவாம். மற்றும் நம்நாட்டின் இயற்கையமைப்புச் சிறப்பு, பண்பாட்டுச் சிறப்பு பற்றிக் கூறும் கதைகளும் நாட்டுப் பற்றினை வளர்ப்பனவாம். நாட்டுப் பற்றினை வளர்த்தலை ஒரு  சிறப்பு நோக்கமாகக் கொண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

வெற்றியின் முதற்படி

“அம்மா! இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. நான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன். எனக்குத்தான் முதற்பரிசு கிடைக்கும். அதற்காகப் பல நாளாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்” என்றான் செந்தில்.

“மகனே! உனக்குத்தான் பரிசு. உன்னை வெல்ல எவர் இருக்கிறார்! நம்பிக்கையுடன் முயற்சிசெய்” என வாழ்த்தினார், அவன் தாய்.

எதிர்பார்த்தபடியே செந்திலுக்கு முதற்பரிசு கிடைத்தது. அவன் வெற்றிக் கோப்பையுடன் வீட்டுக்கு வந்தான். அம்மா விருந்து சமைத்துக்கொண்டு இருந்தார். தான் வெற்றி பெற்ற செய்தியை யாரோ அம்மாவிற்கு முன்னதாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனைக் கொண்டாடத்தான் அம்மா விருந்து செய்கிறார் என நினைத்தான்.

தாயை அனைத்துக் கொண்ட செந்தில், “அம்மா! நான் வெற்றி பெற்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக்கேட்டான். “மகனே! நீ வெற்றி பெறுவாய் என எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த அட்டையைப் பார்” என்றார், அம்மா.

“மகனே! உன் வெற்றிக்கு வாழ்த்துகள். அதற்காகத்தான் இந்த விருந்து’ என அதில் எழுதியிருந்தது. குடும்பத்தினருடன் செந்தில் விருந்தை மிக மகிழ்ச்சியுடன் சுவைத்துச் சாப்பிட்டான்.

சிறிது நேரத்திற்குப்பின் அம்மா கொடுத்த அந்த அட்டையைச் செந்தில் கையில் எடுத்தான்; பின்பக்கமும் ஏதோ எழுதி இருப்பதுபோலத் தெரிந்தது; திருப்பிப் பார்த்தான்.

அதில், ‘அன்பு மகனே! தோல்வி, வெற்றி  இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்கவேண்டும். வெற்றி ஏற்பட்டுவிட்டது என்று தற்பெருமைக்கொள்ளக்கூடாது தோல்வி ஏற்பட்டுவிட்டது என்பதற்காக மனம் உடைந்துபோகக் கூடாது.
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் மனிதருக்கு அடிக்கடி நடக்கக் கூடிய சம்பவங்கள். ஆகையால் முயற்சி செய் பலனை அதிகம் எதிர்பார்காதே. நம்பிக்கையோடு இரு. என்று எழுதப்பட்டு இருந்தது. செந்தில் மகிழ்ச்சியோடு தன் அம்மாவைப் திரும்பிப் பார்த்தான்.

தன் அம்மாவின் கருத்தை பள்ளிக்கு போனதும் தன் சக நண்பர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று நினைத்து தனது சட்டைப் பையில் அந்த அட்டையைப் போட்டுக் கொண்டான்.

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஜராசந்தன் ஏமாறுதல் - கண்ணன் கதைகள்.

காலயவனன் மதுரா நகரை முற்றுகையிட்டான். அவனுக்குப் பயந்தவன் போல கிருஷ்ணன் போக்குக் காட்டி ஒரு குகைக்குள் ஒடினான்.

கிருஷ்ணனைத் துரத்திக்கொண்டு ஓடிய காலயவனன் குகைக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த ஒரு மனிதர் தன் பார்வையாலேயே  காலயவனனை எரித்து விட்டார்.

காலயவனனை எரித்த அந்த மனிதர் யார்? அது ஒரு தனிக்கதை.

அந்த மனிதரின் பெயர் ராஜா முசுகுந்தர். அவர் ஒரு பெரிய அரசர். அதே சமயத்தில் மிகுந்த பக்திமானும்கூட. வேதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர். அவர் மிகுந்த பலசாலியாக இருந்ததனால், ஒரு சமயம், தமக்கும் மற்ற தேவர்களுக்கும் உதவும்படி இந்திரன் அவரைக் கேட்டுக்கொண்டான். முசுகுந்தர் சரி என்று ஒப்புக்கொண்டு, வெகு காலம் தேவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றினார்.

பிறகு சிவகுமாரனான முருகப்பெருமான் தேவர்களின் சேனைத் தலைவர் ஆக்கப்பட்டார். பிறகு இந்திரனும் மற்றத் தேவர்களும் முசுகுந்தரை அணுகி, “நண்பரே! தாங்கள் இத்தனை காலமும் எங்களை அசுரர்களிடமிருந்து காப்பற்றினீர்கள். எங்களுக்காகத் தாங்கள் அரசு, உற்றார் உறவினர் எல்லா வற்றையும் தியாகம் செய்துவிட்டு வந்தீர்கள். மனித வாழ்க்கை அநித்தியமானதால் தங்கள் குடும்பம், குழந்தைகள், உற்றார், உறவினர் யாரையும் அங்கே காணமாட்டீர்கள். ஆகவே எங்களிடம் ஏதேனும் வரம் கேளுங்கள்” என்று சொன்னார்கள்.

காலம் தன் உற்றார்  உறவினர் எல்லாவற்றையும் அழித்துவிட்டது என்று கேட்டதும் அவர் திடுக்கிட்டார்! நாம் அத்தனை காலமா தேவர்களுடன் தங்கிவிட்டோம் என்று நினைத்தார். ஆகவே பூமிக்குத் திரும்ப அவருக்கு ஆசையில்லை. ஓய்வு ஒழிவின்றி அவர் அசுரர்களோடு போரிட்டிருக்கிறார். இப்பொழுது மிகவும் அசதியாக இருந்தார். அவருக்கு இப்பொழுது தேவைப்பட்டதெல்லாம் நல்ல உறக்கம்தான்.

ஆகவே அவர், “இதோ பாருங்கள். எனக்கு இப்பொழுது வேண்டிய தெல்லாம் நல்ல தூக்கம்தான். யாருடைய தொந்தரவும் இல்லாமல் நான் நீண்டகாலம் தூங்க வேண்டும் என்று அருள் புரியுங்கள். அதோடு எவன் என் தூக்கத்தைக் கெடுத்து என்னை எழுப்புகிறானோ அவன் உடனே எரிந்து சாம்பலாக வேண்டும் என்றும் அருள் புரியுங்கள்.” என்றார்.

தேவர்கள் இந்த வரத்தை அளித்ததும் ராஜா முசுகுந்தர் இந்த மலைக்குகைக்கு வந்து தூங்க ஆரம்பித்தார். காலயவனன் அவர் தூக்கத்தைக் கெடுத்து எழுப்பிய தால், தேவர்களின் வரத்தின்படி அவன் எரிந்து சாம்பலானான்.

முசுகுந்தர் இப்பொழுது நன்கு விழித்துக் கொண்டுவிட்டார். சிரித்த முகத்துடன் எதிரே கிருஷ்ணன் நிற்பதைப் பார்த்தார். கிருஷ்ணனின் இடுப்பில் இருந்த பீதாம்பரம், மார்பில் இருந்த, ஸ்ரீவத்ச அடையாளம், கழுத்தில் இருந்த கௌஸ்துபமணி, இரு காதுகளிலும் தொங்கிய குண்டலங்கள் இவை எல்லாவற்றையும் பார்த்தார்.

கிருஷ்ணன் இப்பொழுது நான்கு கைகளுடனும், முழுங்கால் வரை தொங்கிய துளசிமாலையுடனும் ஸ்ரீமகாவிஷ்ணுவாக அவருக்கு காட்சியளித்தான்.

அந்த அழகைக் கண்டு ராஜா பிரமித்தார் இது யாராக இருக்க முடியும்?

உடனே அவர் கிருஷ்ணனைப் பார்த்து, “தாங்கள் உலக நாயகன் என்று நான் நினைக்கிறேன். ஆ! எனக்கு இப்பொழுது புரிந்துவிட்டது. தாங்கள் ஸ்ரீமந்நாரயணன். நான் ஒரு சாதாரண மனிதன். தேவர்களுக்குச் சொற்ப உதவி புரிந்தேன். நான் மிகவும் அசதியாக இருந்தேன். தேவர்கள் நான் இஷ்டப்பட்ட வரை என்னைத் தூங்க அனுமதித்தார்கள். நான் முன்பின் அறியாத ஒருவனால் எழுப்பப் பட்டேன். அவன் உடனே எரிந்து சாம்பலாகிவிட்டான். அவன் செய்த பாவம் தான் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். பிறகு என் கண்கள் தங்கள்  தெய்விகத் தரிசனத்தைக் கண்டன. தங்களுக்கு என் நமஸ்காரம்” என்று சொன்னார்.

முசுகுந்தரின் பக்தியைக் கிருஷ்ணன் மெச்சினான். அவன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்.

“நான் யார், என் பெயர் என்ன என்று நீர் தெரிந்துகொள்ள விரும்புகிறீர். என்னுடைய பெயர்கள், நான் எடுத்த பிறவிகள், நான் செய்த காரியங்கள் எத்தனையோ கோடியாகும். அவற்றுக்குத் தொடக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. இந்தப் பிறவியில் என் பெயர் கிருஷ்ணன். நான் கம்சனையும் இன்னும் பல அசுரர்களையும் கொன்றேன். உம் விழிகளால் நீர் ஒரு மனிதனை எரித்தீரே, அவன் காலயவனன் என்னும் கொடியவனும் பாவியுமான அரசன். நீர் இங்கே இருப்பது தெரிந்து தான் நான் இந்தக் குகைக்கு வந்தேன். நீர் என்றுமே என் பக்தராக இருந்திருக்கிறீர். நீர் வேண்டியதைப் பெறும் காலம் வந்துவிட்டது. நீர் கேட்கும் எதையும் நான் கொடுப்பேன். என் பக்தர்கள் ஒரு நாளும் கஷ்டப்படக்கூடாது” என்று சொன்னான்.

முசுகுந்தரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து அவர் தழுதழத்த குரலில், “என் பிரபுவே! உலகம் அநித்தியம் என்பதை நான் அறிவேன். இது ஒரு கதையை எனக்கு நினைவுபடுத்துகிறது. அடுப்பங்கரையில் உத்தரத்திலிருந்து ஒரு வெண்ணெய்த் சட்டி தொங்கிக்கொண்டிருக்கிறது. வெண்ணெயை ருசி பார்க்க விரும்பும் ஓர் எலி, பானையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கயிற்றின் நுனிக்குச் சென்று, அங்கிருந்து மெல்லக் கிழே இறங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஒரு பாம்பு எலியைத் தின்பதற்காக, அதன்மீது பாயக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த விஷயம் எலிக்கு தெரியாது. இது போலவே உலக விஷயங்களிலிருந்து இன்பத்தை நாடும் மனிதனையும் அவனுடைய ஆசைகளையும் அழிக்கக் காலம் காத்துக் கிடக்கிறது என்பதை மனிதன் அறியாமல் இருக்கிறான். நான் கேட்கும் வரமெல்லாம் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டும், தங்கள் பாதகமலங்களுக்கு  அடியில் என்றும் இருக்க வேண்டும் என்பதுதான். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்” என்றார்.

அதற்குக் கிருஷ்ணன், “உமது பக்தியை மெச்சினேன். நீர் உலக ஆசை இல்லாமல் இருக்கிறீர். அதனால் என்  ஞாபகம் உமக்கு என்றும் இருக்கும். கடைசியில் நீர் என்னை வந்து அடைவீர்” என்றான்.

கிருஷ்ணர் மதுரா திரும்பினார். பலராமரும் கிருஷ்ணரும் சேர்ந்து காலயவனனின் படைகளை அழித்தனர். காலயவனன் கொள்ளையடித்த பொருள்களையெல்லாம் அவர்கள் பறித்து, அதைத் துவாரகைக்குக் கொண்டு வந்தனர்.

வழியில் ஒரு பெரிய சேனையுடன் ஜராசந்தன் அவர்களைத் தடுத்தான். உடனே தங்கள் உயிருக்குப் பயந்தவர்களைப் போல இருவரும் ஓட ஆரம்பித்தனர். இதைக் கண்டு ஜராசந்தன் ஆச்சிரியப்பட்டான்.

அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்பதை அவன் கண்டான். ஆகவே தன்னுடைய சேனை பின்தொடர, அவன் அவர்களைத் தன் ரதத்தில் இருந்தபடியே பின்தொடர்ந்தான்.

வெகுநேரம் அவன் அவர்களைப் பின் தொடர்ந்தான். பலராமரும் கிருஷ்ணரும் பிரவர்ஷணம் என்ற மலையில் அடிவாரத்தை அடைந்தார்கள். இருவரும் ஓடி மலையுச்சியை அடைந்தார்கள்.

இருவரும் மலைக்குள் எங்கோ ஒளிந்து கொண்டுவிட்டார்கள் என்று ஜராசந்தன் நினைத்து, மலையைச் சுற்றி விறகுகளை அடுக்கி அவற்றுக்கு தீ வைத்தான். தீ பாதி மலைக்குப் பரவியதும் பலராமரும் கிருஷ்ணரும் மலையுச்சியிலிருந்து கீழே குதித்தார்கள். ஜராசந்தன் அதைக் கவனிக்கவில்லை. அந்தத் தீயில் அந்த இருவரும் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவன் தன் பெரிய சேனையுடன். தனது மகதநாட்டுத் தலை நகரை அடைந்தான்.

சனி, 6 ஏப்ரல், 2013

மகிழ்ச்சிக்கு வழி!

இந்த உலகில் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாத விஷயம்.

அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

புற உலகில் நமது வாழ்க்கைப் பிறரைச் சார்ந்திருப்பது போலவே, அகவாழ்விலும் நமது வாழ்க்கை பிறரைச் சார்ந்தே இருக்கிறது.

இதைப் புரிந்துகொள்ள உதவுவதுதான். இந்த காதை.

முன்னொரு காலத்தில் ராஜ்யவர்த்னன் என்ற ஒர் அரசர் இருந்தார். அவர் ஏழாயிரம் ஆண்டுகள் தன்னுடைய நாட்டை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.

(ஏழாயிரம் ஆண்டுகள் எப்படி ஒருவர் உயிருடன் இருந்திருக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம். இது புராணக்கதை. கதைகளில் சொல்லப்படும் பல நிகழ்ச்சிகள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாதுதான். ‘ஏழாயிரம் ஆண்டுகள்’ என்றால் நீண்ட காலம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், புராணக் கதைகள் மூலம் சொல்லப்படும் கருத்தைத்தான் நாம் முக்கியமாகவும் சாரமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.)

அரசாட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றதால் மக்களுக்கு அரசன்மீது மிகுந்த மரியாதை இருந்தது.

ஒரு நாள்—
  
     ராணி, அரசனுக்குத் தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அரசியின் கண் கலங்கியது!

இதைப் பார்த்த அரசர், அரசியிடம் அவள் கலங்குவதற்குரிய காரணத்தை விசாரித்தார்.

“உங்கள் தலையில் ஒரு முடி நரைத்திருக்கிறது! அப்படியென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது என்றுதானே அர்த்தம்? அதனால்தான் நான் கண் கலங்கினேன்!” என்று அரசி வருத்தத்துடன் கூறினாள்.

“இதற்குப்போய் யாராவது அழுவார்களா? இது காலன் எனக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை! எனவே நான் உடனே காட்டிற்குச் சென்று எஞ்சியுள்ள காலத்தை தவத்தில் கழிக்க வேண்டும்” என்றார் அரசர்.

“அப்படியானால் நானும் உங்களுடன் வருவேன்” என்றாள் அரசி.

அரசனும் அரசியும் காட்டிற்குப் போய்விட்டால் அரசாங்கம் என்ன ஆவது?

பொதுமக்கள் பார்த்தார்கள். அவர்கள் அரசனிடம் சென்று, “நீங்கள் இருவருமே காட்டுக்கு போக வேண்டாம். கொஞ்சம்  பொறுங்கள். நாங்கள் சிறிது காலம் கழித்து உங்களிடம் வந்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று கூறுகிறோம்” என்று சொல்லிவிட்டு, வெகு தொலைவில் இருந்த சூரியனின் ஆலயத்திற்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்கள்.

மூன்று மாதம் கழித்து.

சூரிய பகவான் அவர்களுக்குக் காட்சியளித்து, “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

“எங்கள்  அரசர் இன்னும் 10,000 ஆண்டுகள் எந்த நோய் நொடியும் இல்லாமல் இளமையோடு இருந்து எங்கள் நாட்டை நன்றாக ஆட்சி செய்ய வேண்டும்” என்று மக்கள் வரம் கேட்டார்கள்.

சூரிய மகவானும் அவர்கள் விரும்பிய படியே வரம் கொடுத்து மறைந்தார்.

அரசனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அவர் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக வருத்தப்பட்டார்.

இதைக் கண்ட அரசி, “ இந்தச் செய்தியினால் மகிழ்ச்சியடைவதற்குப் பதில் வருத்தப்படுகிறீர்களே, ஏன்?” என்று வினவினாள்.

“இந்த வரத்தினால் நான் எப்படி சந்தோஷப்பட முடியும்? நான் பத்தாயிரம் வருடங்கள் உயிரோடு இருக்கலாம். ஆனால் நீயும், இந்த வரத்தைப் பெற்றுத் தந்த நம்முடைய நாட்டு மக்களும் உயிரோடு இருக்க மாட்டீர்களே! என்னுடைய ராணியாகிய நீயும், என் அன்பிற்குரிய  இந்த ஜனங்களும் இல்லாமல் நான் மட்டும் எப்படி பத்தாயிரம் ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க முடியும்?” என்றார்  அரசர்.

பின்பு அரசனும் அரசியும், அதே சூரியனின் ஆலயத்திற்குச் சென்று தவம் புரிந்தார்கள்.

சூரிய பகவான் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து அவர்களுக்கு தரிசனம் தந்தார்.

அப்போது அரசனும் அரசியும், “நாட்டில்  இப்போதிருக்கும் எல்லோருமே பத்தாயிரம் ஆண்டுகள் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்“ என்ற வரத்தை சூரிய பகவானிடம் வேண்டிப் பெற்றார்கள்.

இந்தக் கதை மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேயர் சொல்வதாக அமைந்துள்ளது.

கதையின் நீதி:  நம்முடைய மகிழ்ச்சியில் மற்றவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது; மற்றவர்களின் மகிழ்ச்சியில் நம்முடைய மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. இதைத்தான் இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.



வெள்ளி, 5 ஏப்ரல், 2013

விடியல்

அது ஒரு ஊரின் ஒதுக்குப்புறமான பகுதி அந்த பகுதியில் மரம் ஒன்று அடர்ந்து செழித்து இருந்தது. அந்த மரத்திலே நிறைய காகங்கள் கூடு கட்டி வசித்தன. அந்த மரமும் அதில் உள்ள காகங்களும் பார்ப்பதற்கு எப்போதுமே வசந்த காலத்தின் துவக்கம் போலவே தெரியும். அந்த மரத்தின் காகங்கள் மனிதர்களை போல கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தன. அந்த காகங்களில் மூத்த காகம் ஒன்று எப்போதும் பார்ப்பதற்கு சுறுசுறுப்பாகவும் திறமைசாலியாகவும் இயங்கி வந்தது. சில தினங்களுக்கு ஒருநாள் காகங்களெல்லாம் ஒன்று கூடி அந்த மூத்த காகத்தின் சொல் கேட்டு எந்தவித ஆபத்தும் இல்லாமல் சுதந்திரமாய் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் அந்த மூத்த காகம் பறந்து திரியாமல் படுத்தே கிடந்தது. மற்ற காகங்கள் எல்லாம் சேர்ந்து அந்த மூத்த காகத்தை விசாரிக்க. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றது. மற்ற காகங்கள் உடனே ஊரில் தெரிந்த வைத்தியர் காகத்தை அழைத்து வந்தன.

வைத்தியர் காகம் வந்து பரிசோதித்துவிட்டு கவலைப்பட தேவையில்லை. என்றும் ஒரு நாளைக்கு மேல் இந்த காய்ச்சல் நிற்காது என்றும், தான் கொடுத்த மருந்தை இரண்டு நாட்கள் கொடுக்கும்படியும் உங்கள் ஒற்றுமை தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதென்றும் கூறிவிட்டு ஆனந்தமாய் பறந்து சென்றது.

அன்றும், அன்று மறுநாளும் அந்த மூத்த காகத்திற்கு உணவுக்கு உணவும் மருந்திற்கு மருந்தும் வேளை தவறாமல் தந்து மற்ற காகங்கள் பணிவிடை செய்தன. மருந்தினாலும் மற்ற காகங்களின் கவனிப்பாலும் ஒரே நாளில் உடல்நிலை தேறிவிட்ட காகத்திற்கு மறு நாளும் ஓய் வெடுக்க எண்ணம் வந்து படுத்தே கிடந்தது.

மூத்த காகம் ஒரு நாள் படுத்து கிடந்ததால் தேவையில்லாத சிந்தனை அதற்குள் வந்தது. மாலை நேரத்தில் மற்ற காகங்களை அழைத்து கம்மிய குரலில் பேசி முதல் முறையாக நடிக்க கற்றுக்கொண்டது. தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாலும் தனக்கு வயது கூடிபோனதாலும் தன்னால் வெளியில் திரிந்து உழைக்க முடியாது என்றும் தனக்கான உணவை தேடிக்கொள்ள முடியாது என்றும். இனி நீங்கள் தான் என்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி படுக்கையிலே படுத்துக்கொண்டது.

ஆனாலும் அந்த மூத்த காகத்தின் மனசாட்சி இடித்துக்கொண்டே இருந்தது. தனக்கு ஒன்றும் இல்லை என்றும் தன்னால் முன்பு போல நன்றாக இயங்க முடியும் என்றும் தெரிந்தும் தேவையற்ற ஒரு நாள் சோம்பல் ஓய்வினால் அதன் மனம் மாறிப்போனது.

மற்ற காகங்கள் அன்று தான் முதல் முறையாக தலைவன் இல்லாமல் ஒன்று கூடி முடிவெடுத்தன. ஒவ்வொரு காகமும் ஒவ்வொரு வேளையாக முறை வைத்து அந்த மூத்த காகத்திற்கு உணவு அளிப்பதென முடிவு செய்து அதன்படி செய்தும் வந்தன. ஆரம்பத்தில் இலவச உணவு வகைகள் சுவையாக இருந்தன. நாள்பட நாள்பட சுவை குன்றுவதாக தோன்றியது. அந்த மூத்த காகம், ஒவ்வொரு காகத்திடமும் குறை பேச ஆரம்பித்தது. நாளடைவில் சண்டையிடவும் ஆரம்பித்தது.

நீண்ட நாட்கள் கழித்து மற்ற காகங்கள் மீண்டும் கூட்டம் கூடி மூத்த காகத்தின் நிறை குறைகளை கூறி தங்களுடைய கஷ்டங்களையும் சொல்லிப் புலம்பின. தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உணவைத் தேடி மூத்த காதத்திற்கும் சேர்த்து உணவு தேடுவதற்குள் படும் பாட்டை கூறி அப்படித் தேடிக்கொடுத்தும் அந்த மூத்த காகத்தின் வம்பு பேச்சையும் சண்டையிடும் போக்கையும் சொல்லி மாற்றி, மாற்றி புலம்பின.

மற்ற காகங்கள் அறியாமல் இவைகளை கேட்க நேர்ந்த மூத்த காகத்திற்கு நீண்ட நாட்கள் கழித்து சுய சிந்தனை பிறந்தது. தன்னை வழிகாட்டியாக நினைத்து வாழ்ந்த காகங்கள் தான் வழி தவறி நடப்பதைப்பற்றி பேசுவதை கேட்க நேர்ந்தது தன்னைப்பற்றி சிந்தித்துக் கொண்டே தன்னை அறியாமல் சிறகடித்து வானில் நீண்ட தூரம் பறந்து திரிந்தது. அப்படியே உணவையும் தேடி உண்டது. உண்டுகளைத்து உறைவிடம் வந்து சேர்ந்தது. உறங்கியும் போனது.

மறுநாள் விடிந்ததும் அந்த மூத்த காகம் தன்னை இளங்காகமாய் உணர்ந்து அன்று வழக்கத்திற்கு மாறுதலாய் அதிகாலையிலே அனைத்து காகங்களை ஒன்றாய் வரச் செய்து தனக்கு ஏற்பட்ட சோம்பல் நிலையை வெளிப்படையாய் ஒப்புக்கொண்டது. மற்ற காகங்கள் அந்த மூத்த காகத்தின் மனமாற்ற நிலையை எண்ணி உயர்வான மதிப்பு கொணடன. மீண்டும் இயல்பு நிலைக்கு மாறின. மூத்த காகத்தால் இப்போது அந்த அடர்ந்த மரமும் அதிலே வாழும் காகங்களின் போக்குவரத்தும் அந்த ஊருக்கு முன்பைவிட அழகு சேர்த்தது.

பயத்தால் வந்த உன்மை.


25 வயது ஜார்ஜ் கார்டன் மிசிசிபி நகரில் உள்ள ஒரு வங்கியில் காசாளாராக பணியாற்றி வந்தார். தீடீரென்று ஒரு நாள் அவர், தன் வேலை பார்த்த வங்கியிலேயே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதோடு 55 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. உள்ளூர் போலீஸ் எவ்வளவோ முயன்றும் கார்டனை யார் கொலை செய்தார் என்பதையும் பணம் எங்கே போனது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் ஆலன் பிங்கெர்டன் என்னும் தனியார் துப்பறியும் துறை அதிகாரி அந்த வழக்கை சவாலாக ஏற்றுக் கொண்டு குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் இறங்கினார். ஆனால் அவருக்கும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

எனினும் கார்டனுடன் பண்புரிந்த சக ஊழியர் டிரைடேல் என்பவர் மீது பலமான சந்தேகம் இருந்தது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. டிரைடேல் தானாக ஒப்புக் கொண்டால் மட்டுமே அந்தக் கொலையைச் செய்தவர் அவர்தான் என்பதை நிரூபிக்க முடியும்.

டிரைடேலிடம் ஆலன் துருவித் துருவி விசாரித்தபோது கூட எந்த வித முன்னேற்றமும் இல்லை. விசாராணையின் ஒரு கட்டத்தில் டிரைடேல் சட்டப்படி என்னை எதுவும் செய்ய முடியாது  என்று கத்தினார். இதனால் ஆலனுக்கு சந்தேகம் வலுத்தது.

எப்படியும் டிரைடேலை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நுதான திட்டத்தை தீட்டினார். அதன்படி செயல்படவும் செய்தார்.

ஓரு நாள் இரவு டிரைடேலின் வீட்டிற்கு ஆலன் சென்றபோது தன்னுடன் ஒருவரை அழைத்துச் சென்றார். அவரை வெள்ளை நிற ஆடை அணியும் படிகூறி அழைத்துப்போனார். ஆலனுடன் வந்தவரைப் பார்த்த டிரைடேல் அய்யோ இவன் எப்படி இங்கே வந்தான்?... என்று அலறினார்.

உடனே ஆலன் யார், என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லையே என்று அமைதியாகச் சொன்னார். அந்தப் பொய்க்கு நல்ல பலன் இருந்தது.

அய்யோ... அப்படியென்றால் உங்களுடன் வந்திருப்பது ஆவியா?... அந்த ஆவி என்னை எதுவும் செய்துவிடுவதற்குள் நான் கார்டனை கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறேன் என்று கத்தினார். டிரைடேலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்தார், ஆலன்

சரி, ஆலன் என்ன தந்திரம் செய்தார்?...

இறந்து போன கார்டனைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவரை தனது திட்டத்திற்கு ஆலன் தேர்ந்தெடுத்தார். பின்னர் ஒருநாள்  அவருக்கு வெள்ளையுடை அணியச் செய்து டிரைடேலின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆலனின் திட்டப்படி யாருக்கும் தெரியாமல் திடீரென்று வெள்ளையுடை நபர் அங்கே வரவேண்டும். அப்படிச் செய்தால் டிரைடேல் பயந்து போய் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வான் என்பது துப்பறியும் அதிகாரி ஆலனின் திட்டம். அதில் சரியாக டிரைடேல் மாட்டிக் கொண்டான் என்பதே உண்மையான கதை.

ஆலன் டிரைடேல் நடத்திய நிறுவனத்திற்கு பெயர் நேஷனல் டிடெக்டிவ் ஏஜென்சி என்று பெயர். இந்த நிறுவனத்தின் சுலோகம்: நாங்கள் எப்போதும் உறங்குவதில்லை.

இதன் அடிப்படையில்தான் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் பல திறந்திருக்கும். அடையாளச் சின்னமாக அதற்கு கண்தொடர்பான பெயர்களையும் சூட்டிக் கொள்கிறார்கள்.

பண ஆசை

கந்தசாமி படு கஞ்சன். உண்ணாமல் தின்னாமல் காசு காசு என்று அடுக்கி சேர்த்து ஒரு கோணிப் பையில் போட்டு வைத்திருந்தான்.

அவனிடத்தில் கொஞ்சம் பணம் இருந்தது. அதை வட்டிக்கு விட்டான். வட்டியும் முதலையும் கறாராய் கரந்தான். இப்படி வட்டி மேல் வட்டி வாங்கி பணத்தைச் சேர்த்தான்.

கல்யாணம் ஆகாததாலே குடும்ப செலவும் இல்லை.

அவனது ஒரே குறிக்கோள் பணம், பணம், பணம், தினமும் ஒரு முறை எண்ணிப் பார்த்துக் கொள்வான். அதில் ஒரு ஆனந்தம். இரவு ஆனதும் வீட்டை நன்றாகப் பூட்டி விட்டு, விளக்கைப் போட்டு பண மூட்டையை முன்னால் வைத்து அதற்கு காவல் காப்பான். திருடு போய் விடும் என்ற பயம். அவனுக்கு அந்த பணப்பையை பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் சோறு தண்ணி ஒன்றும் வேண்டாம்.

காசை எடுத்து செலவு செய்யப் பயம். அதனால் சரியான சாப்பாடு கிடையாது. அவன் சேர்த்த பணமானது நாளடைவில் இரண்டு பையாயிற்று. அந்த பணம் வீட்டில் இருந்ததால் சரியான தூக்கம் இல்லை. சரியான சாப்பாடு இல்லை. சரியான துணிமணி இல்லை. உலக நடப்பு தெரியவில்லை செலவாகி விடுமே என்ற எண்ணத்தில் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை.

ஒரு நாள் கலெக்டரிடமிருந்து ஒரு எச்சரிக்கை வந்தது. ஊரில் பூகம்பம் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. “எந்த நேரமும் வரலாம். எனவே ஜனங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்துக்குப் போய் விடுங்கள்” என எச்சரிக்கை கொடுத்தார்.

கந்தசாமிக்குக் கவலை. பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு சாக்குப் பைகளையும் முன்னால் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.

இதற்குள் காவலர்கள் வந்து வீடுகளில் இருப்பவர்களை அவசரப்படுத்தினார்கள். கந்தசாமி இரண்டு பைகளையும் தனது தோளில் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான். ஆனால் ஓட முடியவில்லை. நடக்கவே முடியவில்லை பிறகு எங்கே ஓடுவது. அதற்குள் பூகம்பம் வந்துவிட்டது. கந்தசாமி தனது ரூபாய் மூட்டை இரண்டோடும் ஒரு குழிக்குள் விழுந்து மாய்ந்து போனான்.

கந்தசாமி பெரும் பணக்காரன்தான். அந்த பணத்தால் அவன் ஒரு பயனும் அடைய வில்லை. கடைசியில் அந்த பணமே அவன்  சாவுக்கு காரணமாயிற்று. அதற்காக மனிதனுக்கு பணமே தேவையில்லை என்று கூறவில்லை. பணத்தின் மேல் வைக்கும் ஆசை எல்லாத் தீங்கிற்கும் காரணமாய் இருக்கிறது.

பலே கில்லாடி

ஸ்டிவன்சன் ஒரு தச்சுச் தொழிலாளி கடுமையாக உழைப்பாளியும் கூட. தனது ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஊருக்கு தச்சு வேலை செய்யச் செல்வான். வாரத்தின் முதல் நாள் வேலைக்குச் சென்றால் வார இறுதி நாட்களில் தான் வீடு திரும்புவான். ஒவ்வொரு வாரமும் கூலிப் பணத்தை எடுத்துக் கொண்டு திறந்த வெளிப்பகுதியில் நடந்து ஊருக்கு வருவது அவனது வழக்கம்.

அப்படி ஒரு நாள் ஸ்டிவன்சன் தனியே நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு வழிப்பறிக் கொள்ளையன் அவனை துப்பாக்கி முனையில் மறித்தான்.

‘மறியாதையாக உன்னிடமிருக்கும் பணத்தை எடுத்துக் கொடுத்துவிடு. இல்லையென்றால் உன்னைச் சுட்டு கொன்றுவிடுவேன்’ என மிறட்டினான்.

அதைக் கேட்ட தச்சு தொழிலாளி, ‘சரி. பணத்தைத் தந்து விடுகிறேன். ஆனால் பணம் கொள்ளை போய் விட்டது என்று சொன்னால் என் மனைவி  நம்பமாட்டாள். அதனால் எனது தொப்பியை சுட்டு அதில் துவாரத்தை உருவாக்கு. அப்போதுதான் அவளிடம் நம்பிக்கை பெற முடியும்’ என்றான்.

அதற்கு கொள்ளையன் ‘நீ’ சொல்வதும் சரிதான் என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கியால் தச்சுத் தொழிலாளியின் தொப்பியைச் சுட்டுவிட்டு இப்போது பணத்தைக் கொடுத்து விடு என்றான்.

ஆனாலும் ஸ்டீவன்சன் பணத்தைக் கொடுக்கவில்லை. ‘ஒரு கொள்ளையனிடம் உங்களால் சண்டை போட முடியவில்லையா?... நீங்கள் சரியான கோழை என்று மனைவி மட்டம் தட்டுவாள். அதனால் நான் அணிந்திருக்கும் கோட்டில் நான்கைந்து தடவை சுடு. அப்போதுதான் நான் எதிர்த்து தாக்கினேன் என்பதை அவள் முற்றிலுமாக நம்புவாள்’ என்றான்.

‘நீ சொல்வதும் சரிதான்’ என்ற கொள்ளையன் தச்சு தொழிலாளியின் கோட்டை கழற்றச் சொல்லி அதை பல தடவை சுட்டான். பிறகு இப்போது பணத்தைக் கொடு என்றான்.

தச்சு தொழிலாளியோ, ‘இன்னும் சில ஓட்டைகள் இருந்தால்தான் என் மனைவியின் சந்தேகத்தைப் போக்க முடியும். அதனால் கோட் மீது இன்னும் இரண்டு தடவை சுடு’ என்றான், ஸ்டீவன்சன்.

கொள்ளையனுக்கோ எரிச்சல். ‘என்னிடம் இனி குண்டுகள் எதுவும் இல்லை. அதனால் சுட முடியாது. பணத்தைக் கொடு’ என்றான்.


உடனே தச்சுத் தொழிலாளி தன்னிடமிருந்த சிறிய ரம்பத்தை எடுத்து கொள்ளையனிடம் காண்பித்துவிட்டு ‘இதற்காகத்தான் காத்திருந்தேன். இனி உன்னால் என்னை எதுவும் செய்யமுடியாது. போசாமல் இங்கிருந்து ஓடுவிடு. இல்லையென்றால் உன்னை ஒரு வழி பண்ணிவிடுவேன்’ என்று மிரட்டினான்.

அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அந்தக் கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

கதையின் நீதி: புத்திசாலிகள் எந்த ஆபத்திலிருந்தும் தப்பித்து விடுவார்கள்.

புத்திசாலி ஆட்டுக்குட்டி


அந்த அடர்ந்த காட்டில் நரி ஓநாய் சிங்கம் கரடி என ஏராளமான மிருகங்கள் வாழ்ந்து வந்தன. எல்லா மிருகங்களும் நன்கு கொழுத்த உடலோடு நடமாடிக் கொண்டிருந்தன. அதற்கு காரணமும் உண்டு. அந்தக் காட்டை ஓட்டியுள்ள சிறுகிராமத்தில் முத்துசாமி என்ற ஏழை வாழ்ந்து வந்தான்.

அவனது ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடி மேய்ந்து கொண்டே வழி தவறி காட்டுக்குள் வந்து விடும். அவ்வளவுதான் உடனே அதை காலிசெய்து விடும் இந்த மிருகங்கள். முத்துசாமி தனது தந்தை தனக்காக சொந்தமாகக் கொடுத்த நாற்பது ஆடுகளையும் ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தான்.

இப்போது மொத்தம் பனிரென்டு ஆடுகளே மிஞ்சியிருந்தது. இதனால் முத்துசாமி மிகுந்த வேதனை அடைந்தான். சாப்பிடக் கூட மனமில்லாமல் துவண்டு போய் ஆடுகளை அடைத்து வைத்திருந்த பட்டியின் அருகில் படுத்துவிட்டான். ‘கண்ணுங்களா! நீங்களாவது என்னை விட்டு போயிடாம பத்திரமாக இருங்கப்பா. என்கண்ணைத் தப்பி வெளியே போயிடாதீங்க. அவ்வளவுதான் அந்த கொடிய மிருகங்கள் உங்க எலும்பைக் கூட விட்டுவைக்காதுங்க. அதனால பாதுகாப்பா இங்கேயே இருங்கப்பா. என்னை மேலும் மேலும் வேதனைப்பட வைக்காதீங்க’ –என்றபடியே தரையில் படுத்து சற்று நேரத்தில் தூங்கியும் விட்டான்.

அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ஆடுகள் முத்துசாமியின் நிலையைக் கண்டு மனம் வருந்தின. தங்களை வளர்த்து ஆளாக்கியவன் துன்பத்தை அவைகளால் தாங்கமுடியவில்லை. அவனுக்கு தங்களால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என வேதனைப் பட்டன.

அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஆடு ஒன்று தன் அம்மாவிடம் “அம்மா! எத்தனைநாள்தான் நாம் ஓடியாடி விளையாட முடியாமல் நம் விருப்பத்திற்கு புற்களை மேயாமல் இப்படி பட்டிக்குள்ளேயே அடைந்து கிடப்பது. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டாமா” –என்றது. தாய் ஆடு தனது பிள்ளையை பரிவோடு நக்கியது. “மகனே! உன் கவலை எனக்கு புரிகிறது. ஆனால் இது தானே நமக்கு பாதுகாப்பு வளையம். இதைத் தாண்டிப் போன நம் உறவினர்களின் நிலை என்னவாயிற்று  என்பதுதான் உனக்குத் தெரியுமே. தெரிந்தும் நீ வெளியே செல்ல ஆசைப்படலாமா. பாவம் நம் ஏஜமானர் நம்மில் பாதிக்குமேல் இழந்து தவிக்கிறார். அவருக்கு நாம் எந்த கஷ்டத்தையும் கொடுக்கக்கூடாது. நமக்குத் தேவையான உணவுதான் கிடைக்கிறதே. சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்வோம்” –என்றது தாய் ஆடு.

மறுப்பாக தலை அசைத்தது குட்டி ஆடு. “அம்மா உங்களைப் போல் என்னால் இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். அப்போதுதான்  நாம் சுதந்திரமாக நடமாடமுடியும். நம் எஜமானரும் இப்படி நமக்காக காவல் இருக்காமல் அவரது வேலையைப் பார்க்க முடியும். அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்” –என தனது திட்டத்தைக் கூறியது.

அதைக் கேட்ட மற்ற ஆடுகளுக்கு சந்தோஷம் தாளவில்லை. “டேய் கண்ணா! நீ மட்டும் இதை வெற்றிகரமா செய்து முடித்து விட்டால் நமக்கொல்லாம் இந்த சிறையிலிருந்து விடுதலை. நமது இஷ்டத்திற்கு மேய்ந்து விட்டு இரவில் வீடு திரும்பினால் போதும். நீ இதை சரியாகச் செய்து விடுவாயல்லவா” –என்றது வயது முதிர்ந்த ஆடு.

தாய் ஆடு பதறியது. “மகனே! வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. எனக்கு ஒரே மகன் நீ. உன்னை ஒருபோதும் நான் இழக்கமாட்டேன். காட்டுக்குள் போய் விட்டு திரும்பியவர் எவருமில்லை. நான் உன்னை அனுப்ப மாட்டேன்” –என்று கண்ணீர் சிந்தியது. “அம்மா அழாதே! நான் புத்திசாலி என்று நீதானே அடிக்கடி சொல்வாய். இப்போது நீயே தடை போடலாமா. நம் இனத்தை எப்படி அழித்தன அந்த மிருகங்கள். அவற்றை நம்மால் அழிக்க முடியவிட்டாலும் விரட்டியடிக்கலாமே. அம்மா தைரியமாக இரு. நான் வெற்றியோடு திரும்புவேன். பாட்டி அம்மாவுக்கு தைரியம் சொல். நான் வெற்றிச் செய்தியோடு வருகிறேன்” –என்றவாறு பட்டியின் மீதேறி தாவி வெளியில் குதித்தது உற்சாகமாக துள்ளியவாறு காட்டை நோக்கிச் சென்றது.

காட்டிற்குள் நாலைந்து நரிகள் குறுக்கும் நெடுக்குமாய் பசியோடு உலாவிக் கொண்டிருந்தது. பசி உயிரை எடுக்கிறது. ஒரு ஆடு கூட இரண்டு நாளாக கண்ணில் படவில்லையே. பட்டிக்காரன் உஷாராகி விட்டானா என தங்களுக்குள் புலம்பிக் கொண்டிருந்தன. அப்போது சற்று கரகரப்பான வித்தியாசமான குரலில் காட்டுக் கொடிகளுக்கிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அந்த கொழுத்த ஆட்டுக்குட்டி அதன் கண்ணில் பட்டது. “ஆஹா! இரண்டு நாளாய் காய்ந்து கிடந்ததற்கு இன்று நல்ல விருந்து வாருங்கள் போகலாம்” –என்றவாறு ஆட்டுக்குட்டியை நெருங்கியது.

ஆட்டுக்குட்டி அனைத்தையும் பார்த்துக் கொண்டு ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ தவம் செய்வது போல் நின்று கொண்டிருந்தது. அருகில் நரிகள் வருவதைக் கண்டதும், “வாருங்கள், வாருங்கள். எம் பொருமான் உங்களை அனுப்பி வைப்பதாக இப்போதுதான் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் வந்துவிட்டீர்களா? ம் சீக்கிரம் வந்து எனக்கு இரையாகுங்கள். எனக்கு பயங்கர பசி” –என்று உறுமலான குரலில் அதட்டியது.

நரிகளுக்கு பயங்கர அதிர்ச்சி. ஓரடி பின் வாங்கின. “என்னடா. இது? நம்மையே சாப்பிடப் போகிறதாம் இந்த ஆட்டுக்குட்டி. அதுவும் கடவுளே அனுப்பிவைத்தார் என்கிறது. இதன் குரல் கூட ஆடு குரல் போலில்லையே. நரிகள் தயங்கி நின்றன. “என்ன தயக்கம்! சீக்கிரம் வாருங்கள். உங்களை சாப்பிட்டு விட்டு இக்காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும் சாப்பிடவேண்டும். இது எம் பெருமானின் கட்டளை. முதலில் உங்கள் தலைவரான சிங்கத்தைத் தான் சாப்பிடலாம் என்றிருந்தேன். அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள். அதனாலென்ன முதலில் சிறிய விருந்து. பிறகு பெரிய விருந்து...ஹாஹா” –வென பயங்கரமாக சிரித்தது.

நரிகள் பிடரியில் கால்பட விழுந்தடித்துக் கொண்டு ஒடின “ஐயோ! நம்மை அழிக்க ஏதோ எமன் வந்துவிட்டான். ஓடுங்கள் ஓடுங்கள் எல்லோரும் ஓடுங்கள்”. என்றவாறு ஒடியது. எதிரே வந்த சிங்கம் கர்ஜித்தது. “என்ன உளறுகிறாய். நம்மை அழிக்க யாருக்கு துணிவுண்டு” –என்றது. நரிகள் தாங்கள் பார்த்ததை கூறியது.

சிங்கம் கெக்கலித்தது. “உங்களுக்கு பைத்தியமா பிடித்தருக்கிறது. ஒரு அற்ப ஆட்டுக்குட்டி நம்மை அழிப்பதா. வாருங்கள் என்னுடன். அதை ஒரு கை பார்த்து விடுகிறேன்.” –என்றவாறு புறப்பட்டது. அதற்குள் நரிகளின் கூக்குரல் கேட்டு அனைத்து மிருகங்களும் கூடிவிட்டன.

அனைவரும் படையாக புறப்பட்டு ஆட்டுக்குட்டியைத் தேடி புறப்பட்டன. தூரத்தில் இதைப்பார்த்த ஆட்டுக்குட்டிக்கு உள்ளுக்குள் பதறினாலும் சற்று தெம்பாகவே நின்றது.  மனதிற்குள் உறுதியைக் கூட்டிக்கொண்டு, கொஞ்சம் பதறினாலும் எல்லாமே வீண் என்ற நினைப்புடன் நிமிர்ந்து நின்றது. அதற்குள் மிருகக்கூட்டம் தன்னை நெருங்கிவிடவும். பரவாயில்லையே. எம்பெருமான் சொன்னார். நீ எங்கும் போகாதே. அனைவரும் உனக்கு விருந்தாக அவர்களே உன்னைத் தேடிவருவார்கள் என்று சொன்னார். அதே போல் வந்துவிட்டீர்களே. ம் முதலில் ராஜா நீர் வாரும். உம்மைத் தின்னத்தான் எனக்கு பெருத்த ஆவல். அற்புறம் அனைவரும் வரிசையாக நில்லுங்கள். ஒருவரையும் விட்டு விடமாட்டேன். உங்கள் அனைவரையும் அழித்து விட்டு இந்தக் காட்டில் காவல் தெய்வமாக என்னை இருக்கவே எம்பெருமான் உத்தரவிட்டார். “ம். ம்.. ராஜா வா. எனக்கு பசிக்கிறது.” –கூக்குரலெடுத்து அலறியது.

அவ்வளவுதான் அனைத்து விலங்குகளும் திசைக் கொண்றாக அலறிப் புடைத்து பறந்தோடின. ஆட்டுக்குட்டி ஒரு வெற்றிச் சிரிப்போடு காடு முழுவதும் சுற்றியது. எந்த ஒரு விலங்குகளும் இல்லையென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டது. ம்ஹூம். எவ்வளவு மாமிசங்கள் தின்று உடல் கொழுத்து என்ன பலன். ஒரு ஆட்டுக்குட்டிக்கு இருக்கும் மூளைகூட இந்த மிருகங்களுக்கு இல்லையே. என்றவாறு உற்சாகமாக தனது பட்டிக்குச் சென்று அனைவரிடமும் நடந்ததைக் கூறியது.

அனைத்து ஆடுகளும் அதைக் கொஞ்சி மகிழ்ந்தன. அன்றிலிருந்து அவர்கள்  அனைவரும் தங்கள் விருப்பம் போல் காடு முழுவதும் சுற்றி மேய்ந்து சந்தோஷமாக வாழ்ந்தன.

கதையின் நீதி: புத்திகூர்மையும் மனதிடமும் இருந்தால் யாரையும் வீழ்த்திவிடலாம்.

தலைவன்


மலையும், காடுகளும் நிறைந்த, நீர்வளமும் நில வளமும் கொண்ட, அந்த நாட்டை கொங்கன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அனுக்கு வீரத்திலும் தீரத்திலும், புத்திகூர்மையிலும், சிறந்த வீரத்தளபதி ஒருவர் இருந்தார். அவர் பெயர் அறிவுடையநம்பி.

அறிவுடையநம்பியின் புகழ், நாடு, நகரம் எங்கும் பரவியது. மக்கள் எல்லாம் இந்த கொங்க மன்னன் புகழுக்கு காரணமே, அறிவுடையநம்பிதான். அவரின் வீரதீரம் கண்டுதான், எதிரி நாட்டார் கொங்க நாட்டின் மீது படையெடுக்க அஞ்சுகின்றனர். என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அரசன் கொங்கனுக்கு கூட, அந்த எண்ணமிருந்தது. தன்னைவிட எல்லா விதத்திலும் சிறந்த அறிவுடையநம்பி தான் இந்த நாட்டை ஆள தகுதி வாயந்தவன், நாட்டாரும், நகரத்தாரும், அவன் அரசனானால் பெரிதும் மகிழ்வார் என எண்ணமிட்டார். இந்த விஷயம் குறித்து அறிவுடைய நம்பி மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்.

பின்பு குடுகுடுப்பைக்காரன் போல் வேடமிட்டுக் கொண்டு போய், அறிவுடையநம்பி வீட்டின் முன் நின்று கொண்டு, ராஜயோகம் வரப்போகிறது. இந்த வீட்டு ராஜாவுக்கு, நாட்டை ஆளும் எல்லாதகுதியும் இருக்கிறது. “கூடிய சீக்கிரமே இந்த நாட்டு ராஜா இவர் கையில் ராஜியத்தை ஒப்புவிக்க போகிறார்” என கூறினார்.

அதை கேட்டுக்கொண்டே வந்த அறிவுடைநம்பி மனைவி.

ஐயா, உன் பிரசங்கத்தை கொஞ்சம் நிறுத்து. நல்லவேளையாக அவர் வீட்டில் இல்லை. இருந்திருந்தால் உன் உயிருக்கு உத்திரவாதமில்லை. “இந்தா இதற்காகத்தானே, இப்படி எல்லாம் கூவினாய், வாங்கிக்கொண்டு ஓடிவிடும், என சிலபடி அரிசியை போட்டு போகச்சொன்னாள்.

“ஆகா” நம்பியின் மனைவிக்கு ஏன் இப்படி கோபம் வருகிறது. நம்பி இல்லாத சமயம் பார்த்து வந்து விட்டோமே... என புருவம் சுருக்கி மன்னர் நம்பி வீட்டின் உள்ளேதான் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு விசமம்புன்னகை புரிந்தபடியே... நம்பியின் மனைவியைப் பார்த்து “ஏனம்மா, நான் என்ன ஊரில் உள்ள அனைத்து வீட்டிற்குமா இப்படி பலன் சொல்கிறேன். உன் கணவருக்கு அரசாளும் தகுதி இருக்கிறதம்மா, அதனால்தான் சொல்கிறேன், என்றவர், ஏனம்மா உனக்கு இந்த நாட்டிற்கே ராணியாக வேண்டும் என்ற ஆசையில்லையா என்றார் நயமாய்.

“ஆகா” என் கனவருக்குத்தான் கிரகபலன் சரியில்லை என்றால் உனக்கும் சரியில்லை போலிருக்கிறது. வம்பை விலை கொடுத்து வாங்காமல் ஓடிவிடு ஐய்யா. நம்பியின் மனைவி கையை பிசைத்தபடியே படபடத்தார்.

என்ன கிரகபலன் சரியில்லை, அவரின் ஜாதகம் கொண்டுவாம்மா நான் பார்த்துச் சொல்கிறேன். என்றபடியே அவர்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து விட்டார்.

உடனே தலையில் அடித்துக்கொண்டே உள்ளே போன நம்பியின் மனைவி, புன்னகையுடன் ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்தார்.

அதை புரட்டிப் பார்த்த குடுகுடுப்பை, ஆகா இது ராஜயோக ஜாதகம், கிரகபலம் எல்லாம் நன்றாக உள்ளன, என பாராட்டியபடியே... இந்தநாட்டு ராஜா கூடியசீக்கிரமே. ஸ்தல யாத்திரை போகப்போகிறார், அதனால் உன் கணவனே... இந்நாட்டு ராஜாவாய் நாட்டை ஆளப் போகிறான் என்றார் ரகசியக் குரலில்.

அதைக்கேட்டு புன்னகைத்த நம்பியின் மனைவி, அப்படியானால்.. ரொம்ப சந்தோஷம் ஐய்யா, இது நீங்கள் நாட்டை விட்டு ஸ்தலயாத்திரை போகப் போவதாய் சொன்ன நம் அரசரின் ஜாதகம். எங்கள் அரசரின் ஜாதகம்தான். இதிலிருந்து நீர் பொய்யான குடுகுடுப்பை என தெரிகிறது. உண்மையைச் சொல். உண்மையில் நீர் யார்?! எதிரி நாட்டு ஒற்றனா...?! நம்பியின் மனைவி தன் குரலை கம்பீரமாய் உயர்த்தினார்.

‘உடனே உருவியவாளுடன் வீட்டிற்குள்ளிலிருந்து. ஒரு சிறுவன் ஓடிவந்து குடுகுடுப்பையின் மார்புக்கு நேரே வாளை நீட்டினான். அவன் நம்பியின் மகன் என்பதை அறிந்த மன்னர் அவசரமாய் தன் வேசம் களைத்தார்.

‘ஆ’ மகாராஜா என வியப்புடன் கூறியபடியே... இருவரும் அவர் காலில் விழுந்தனர்.


“அம்மா” இங்கு இத்தனை நடக்கிறது. நம்பி எங்கே இன்னும் வெளிவரவில்லையே...என்றார். ஆச்சிரியமாய் அரசர். மகாராஜா அவர் உறங்குகிறார், உறங்கும் சமயம் அவரை யாராவது கொன்று போட்டாலும் அவருக்கு தெரியாது. அப்படி தூங்கும் பழக்கம் கொண்டவர். கும்பகர்ணனின் அடுத்தவாரிசு. உறங்கும் சமயத்தில் விழித்திருக்கும் ஆற்றல் வாய்ந்தவரே... சிறந்த அரசனாக இருக்க முடியும். இப்படி தன்னை மறந்து தூங்கும் பழக்கம் உள்ளவரிடம்  நாட்டை ஒப்புவித்தால் அந்த நாடு என்னத்திற்கு ஆகும்.

ஐய்யா கூடவே வீரமும் தீரமும் கொண்ட அவருக்கு பொறுமையும், சகிப்பு தன்மையும் கிடையாது. கண்ணால் கண்டதையே உண்மை என நம்பக்கூடியவர். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு பொறுமையும், சகிப்புதன்மையும் மிக அவசியம் இல்லையா.
“அப்பொழுதுதானே... சிறந்த ஆட்சி நடக்கும்”

நீங்களே அத்தனை தகுதியும் கொண்ட சிறந்த மன்னர். உங்கள் நாட்டையே.. வேறு ஒருவருக்கு கொடுக்க சித்தமான.. உங்கள் பொருந்தன்மையே உங்கள் குலத்தின் புகழ்கூறும் என பலவாறு ராஜாவை புகழ்ந்தனர்.

இதையெல்லாம் கேட்ட அரசன் நம்பியின் இந்த குறைபாடு எனக்கு தெரியாமல் போய்விட்டது அம்மா. நல்ல சமயத்தில் என்னை விழிக்கச் செய்தாய். நான் வருகிறேன் என விடை பெற்றார்.

அவர் சென்று விட்டார் என்பதை உறுதி செய்து கொண்டபின் அறிவுடையநம்பி... எழுந்து வெளியே வந்தார். இனி நம் அரசர் எந்த உறுத்தலும் இல்லாமல், நிம்மதியாய் ஆட்சி செய்வார் இல்லையா என மனைவியை பார்த்தார்.

உங்கள் புத்திசாலித்தனமே அலாதிதான் என அறிவுடையநம்பியை பாராட்டினார், அவர் மனைவி. ஆம் தன் அரசரின் மனதிலிருந்த உறுத்தலை விரட்டான் அறிவுடையநம்பி... தன் மனைவியின் மூலம் அப்படி நாடகமாடச் சொன்னார். அதில் வெற்றியும் கண்டார்.

வியாழன், 4 ஏப்ரல், 2013

இனிப்பா? உப்பா?


ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன.

பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணமா ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். இதைப்பார்த்த அவர் நண்பர் ராமலிங்கம் ‘ என்ன பெரியநாயகம்! ஏன் கவலையாயிருக்கே என்ன சமாசரம்  என வினவினார். பெரியநாயகம் வஷயத்தைக் கூறியதும் ‘இதுக்கா கவலைப் படறே. ரேஷன் கடைகள் எதுக்கு இருக்கு அங்க தள்ளி விடு. போ, வேலையைப் பாரு என்றான் ராமலிங்கம்.

இவர்கள் பேச்சைக் கேட்டதும் சர்க்கரையும், உப்பும் இப்படி  மறியாதை இல்லாமல் பேசுகிறார்களே? அப்படியா நாம் மக்களுக்கு பயணற்று போவோம்!. என்று வருந்தி  தங்களை உற்பத்தி செய்யும் கரும்பினிடமும், கடலிடத்திலும் முறையிட்டன.

கரும்பு சொன்னது சர்கரையைப் பார்த்து நீ என்ன உப்பா கரிச்சுக் கொட்ட கல்யாணம் மற்றும் எல்லவைபவங்களுக்கும் நீ இல்லாமலா, குழந்தைகள் பிறந்தாலும் உன்னைத்தான் கொடுப்பார்கள். தெய்வப் பிரசாதமாகிய சர்கரைப் பொங்களிலும் உன் அண்ணன் வெல்லம்தான். ஒரு நல்ல செய்தி சொன்னால் அவன் வாயில் சர்க்கரைப் போடுங்கள் என்பது சொல் வழக்கம். யானைக்கு பிடித்ததும் கரும்புதான், அம்பாள் கையில் வைத்திருப்பதும் கரும்புதான். கரும்பில்லாத பொங்கல் விழாவா என்று தைரியம் கூறியது.

இதைக் கேட்ட கடல் ஆத்திரத்தில் பொங்கியது. டேய் உப்பு! என்ன யோசிக்கிரே. நீ இல்லாம ஒரு பண்டமுண்டா. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சாம்பாராகட்டும், ரசமாகட்டும், மசாலா, பொறியல் எதுவானாலும் நீ இல்லாவிட்டால் வாயில் வைப்பார்களா? ஊறுகாய்க்கும் உப்பு, உடல் அடக்கத்திற்கும் நீ தான், “உங்கள் உப்பைத் தின்னவன் உங்களுக்கு துரோகம் நினைப்பானா என்று தானே சொல்கிறார்கள்”. உப்பு சப்பில்லாத என்ன சாப்பாடு என்று சொல்லும் நம்ம ஆதரவாளராகிய சாப்பாட்டு ராமன்கள் இல்லையா? நீ பல பிராண்டுகளில் விற்பனைக்கு வந்து விட்டாய். நோய் குணமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டு உப்பு போடுகிறார்களே. தெரியாதா உனக்கென்ன குறைச்சல் என்றது கடல்.

ஒரு தினம் பெரிய நாயகம் தள்ளாடி வீட்டில் நுழைவதைப் பார்த்த அவன் மனைவி, ‘ஏங்க! என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்று கேட்டது..

என் காலில் ஒரு புண் வந்தது. அதுக்கு மருந்து போட்டும் இன்செக்ஷன் செய்தும் குணமாகலே. டாக்டர் சொல்றார். எனக்கு சக்கரை வியாதியாம். இனிப்பு சாப்பிட்டக் கூடாதாம். அப்போது தான் புன் குணமாகுமாம் என்று என்று புலம்பினான் பெறியநாயகம்.

அதனாலென்ன. இனிமே நீங்க சாப்பிடறதிலே சர்கரையை ஒதுக்கிடறேன் என்று சமாதானப்படுத்தினாள் அவன் மனைவி.

இதைக் கேட்ட உப்பிற்கு ரொம்ப குஷி. சர்கரையைப் பார்த்து இளித்தது.

அப்போது ராமலிங்கம் அங்கு வந்தார். அவரிடம் எல்லாவற்றையும் விலாவரியாக கூறினார்  பெரிய நாயகம்.

அதைக் கேட்ட ராமலிங்கம் கண்ணீர் விட்டார். உன்கதை இப்படி. என் கதை தெரியுமா. நான் திடீரென்று மயங்கி விழுந்து விட்டேன். டாக்டரிடம் எடுத்து சென்றார்கள். அவர் சோதித்துவிட்டு எனக்கு ரத்தக் கொதிப்பாம், கொழுப்பு சத்து அதிகரித்து விட்டதாம். உடன் சாப்பாட்டில் உப்பைக் குறைக்க வேண்டுமாம். அல்லது அறவே தவிர்க்க வேண்டுமாம் என வருந்தினார்.

இதை செவியுற்ற சர்க்கரை உப்பை ஏளனமாகப் பார்த்தது.

இனிப்பு உப்பைக் கூப்பிட்டு ‘நம்மைப் பற்றி நமக்கே தலை கனமேறி விட்டது. அதனால்தான் நம்மைப் படைத்த கடவுள் நம் தலையில் குட்டிப்பாடம் கற்பித்தார்  என்றது.

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான். என்பதையும் மருந்து போல் சாப்பிட்டால் விருந்து சாப்பிடலாம். விருந்து போல் சாப்பிட்டால் மருந்து தான் கதி!

விதைப்பு


பூதலிங்கம் பெரும் பணக்காரர். நூற்றி எட்டு வேலி நிலமும், 10 கிரவுண்டுக்கு வீடும் இருந்தது. மந்தை மந்தையாக ஆடுகளும், மாடுகளும் வளர்ந்தன. கஜானா அறையில் பொன்னும், பொருளும் நிரம்பி கிடந்தது.

பத்துவிரல் மோதிரம், பகட்டான ஜிப்பா, பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, தங்க கைக்கடிகாரம் என செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார் பூதலிங்கம். எடுப்பான பதாகை, கைத்தடியுடன் கம்பீரமாக நடைபோடுவது அவரது அடையாளம்.

ஊரில் திருமண விழா, காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பெயர் சூட்டு விழா, புதுமனை புகு விழா என என்னென்ன சுபகாரிய விழாக்கள் வருகிறதோ? அனைத்து விழாக்களிலும் குடும்ப சகிதமாக கலந்து கொள்வது பூதலிங்கத்தின் வழக்கம். அங்கு அவருக்கு முதல் மரியாதை வழங்கப்படும். அவரும் விழா முடியும் வரை இருந்து பொன் பொருளை அள்ளிக் கொடுத்து வாழ்த்திவிட்டு வருவார்.

ஆனால் துக்கவீடு என்றால் பூதலிங்கம் குடும்பத்தினருடன் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் இரண்டு நிமிடத்திற்கு மேல் இருப்பதில்லை. தனது கைத்தடியை அவர் வந்ததன் அடையாளமாக வைத்துவிட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீடு திரும்பி விடுவார்.

இறந்தவர் வீட்டிற்கு தான் வந்து விட்டதாக எல்லோரும் கருத வேண்டும் என எண்ணிக் கொள்வதற்காக அவர் இப்படி கைத்தடியை வைத்துவிட்டு செல்வார்.

ஒருநாள் பூதலிங்கத்திற்கு  நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத் திணறல் அதிகமானதால் டவுனில் உள்ள பெரியமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதய ஆபரேஷன் நடந்தது. ஆனால் திடீரென்று அவரது உயிரும் பிரிந்தது.

அவரது மனைவியும், மகனும் அழுது புரண்டனர். பூதலிங்கம் பெரும் தனவந்தர் என்பதால், இறப்பு செய்தி சுற்றி உள்ள அனைத்து ஊர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மாலையும், கையுமாக வந்தனர். பலர் பூதலிங்கம் தங்கள் வீட்டுதுக்க நாளில் விட்டுச் சென்ற கைத்தடியோடு வந்தனர். அதை பூதலிங்கம் உடல் அருகே வைத்துவிட்டு சில நிமிடம்கூட நிற்காமல் திரும்பிச் சென்றனர்.

இறுதிச் சடங்கு நேரம் நெருங்கியது. ஆட்கள் கூட்டம் இல்லாமல் பெரும் கைத்தடி குவியலே நிறைந்திருந்தது. பூதலிங்கத்தின் மனைவியும், மகனும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

“வாழ்வுக்கு போகலைனாலும், சாவுக்குப் போகணும்னு சொல்வாங்க. சாவுக்கு போற இடத்துல கடைசிவரை இருந்து காரியம் நிறைவேற்றிவிட்டு வரணும். ஆனால் பெரிய  மனுஷன்னு காட்டிக்கிறதுக்காக கைத்தடியை விட்டுவிட்டு வந்தாரு. இன்னிக்கு அவரது இறுதி நாளுக்கும் கைத்தடிகள் தான் வந்திருக்கு. கைத்தடிகளா காரியம் நடத்தப்போகுது?. உங்க அப்பாவுக்கு நடந்த இந்த நிலைமையை நினைத்தாவது நீ திருந்தி வாழ்.

போகும்போது பொன் பொருளை கொண்டு செல்ல முடியாது. நல்ல பெயர் சேர்த்து வைத்திருந்தால் ஊரார் நம் புகழ்பாடி தூக்கிச் செல்வார்கள். இதை மனதில் வைத்துக் கொள்” என்று தன் மகனிடம் கூறினாள் பூதலிங்கத்தின் மனைவி.

மகன் தன் தந்தையின் இறுதி சடங்கு வேலைக்கு ஆட்களுக்கு கூலி பேசி காரியத்தை நடத்தினான்.

அதுவரை தந்தையின் தடம் பற்றி நடந்தவன், அவரது இறப்பிற்குப் பிறகு விசால எண்ணம் கொண்டவனாகவும், ஏற்றத்தாழ்வு எண்ணாதவனாகவும் மாறினான். பண்ணையாரின் மகன் என்று எண்ணாமல் மக்களோடு மக்களாக வாழத் தொடங்கினான்.

கதையின் நீதி: விதைப்பதுதான் முளைக்கும்.

பொன்


பூஞ்சோலை என்ற கிராமத்தில் ராமசாமி வாழ்ந்து வந்தான். அவன் பெரிய சோம்பேறி. அவனுக்கு வேலை செய்யாமலேயே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ராமசாமி தன்னுடைய ஆசையை ஒரு சாமியாரிடம் கூறினான்.

சாமியாரும், ஆயிரம் தங்கக் காசுகளைக் கொடுத்து ‘இதை வைத்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்து’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

அன்றிரவு சாமியார் தன் சீடரில் ஒருவரை அழைத்து ராமசாமியின் வீட்டிலிருந்து அந்தப் பொற்காசுகளைத் திருடி வரச் சொன்னார்.

காலையில் ராமசாமி, புலம்பிக் கொண்டே சாமியாரிடம் வந்தான். பொற்காசுகள் தொலைந்த விஷயத்தை அழுது கொண்டே சொன்னான்.

உடனே சாமியார் ‘நான் சொல்லும் வேலைகளை நீ செய்தால் உனக்கு மீண்டும் ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்’ என்றார்.

‘என்ன வேலை செய்ய வேண்டும்?’ என்றான் ராமசாமி.

தன் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை பயணபடுத்தி நீர்பாய்ச்சச் சொன்னார் சாமியார். அதற்கு ஆயிரம் பொன் ஊதியமாக தருவதாக கூறினார். அதை முடித்ததும், நெல் விதைக்க நூறு பொன்னும், தினமும் நீர் பாய்ச்ச 10 பொன்னும் தருவதாக சாமியார் அறிவித்தார். அறுவடை செய்யும்போது அனைத்து பொற்காசுகளையும் மொத்தமாக வழங்குவதாக கூறினார்.

10 பணம் பெறும் வேலைக்கு 10 பொன் தருவதால் அவனுக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தது. சாமியார் சொன்ன வேலைகளை தட்டாமல் செய்தான். ‘ஒவ்வொரு நாள் வேலைக்கும் எத்தனை பொற்காசுகள் சம்பாதித்தோம்’ என்று குறித்து வைத்து மகிழ்ந்தான்.

நெல் அமோகமாக விளைந்தது. அறுவடை முடிந்தது.

சாமியார், ராமசாமியை வரவழைத்தார். பேசியபடி பொற்காசுகளை வழங்கியதோடு, கூடுதலாக இருமடங்கு பொற்காசுகளையும் வழங்கினார்.

ராமசாமி, சாமியாரை திகைப்புடன் பார்த்தான்.

‘என்ன திகைப்புடன் பார்கிராய். உன் வேலைக்கு சம்பளமாய் நான் தரும் பொற்காசுகள் ஒரு பங்கு என்றால் உன் மூன்று மாத உழைப்பின் பலனாய் விளைந்த நெல் தந்த பொன் அதைவிட 2 மடங்கு அதிகம். அதுவும்  உனக்குத்தானே சொந்தம். எனவே நீ செல்வந்தனாக விரும்பினால் உழைப்பின் மூலமே செல்வந்தனாக முயற்சி செய். ஒரு ஏக்கர் பயிர் செய்து இவ்வளவு பொன் விளைத்த நீ, இன்னும் ஏராளமான பொன்னை சீக்கிரத்தில் குவித்துவிடுவாய்’ என்று வாழ்த்தினார் சாமியார்.

‘சோம்பேறியாக இருந்த எனக்கு உழைப்பின் அருமையை புரிய வச்சிட்டீங்க. என்னை மன்னிச்சிடுங்க. இனி உழைச்சி முன்னேறுவேன்’ என்றான் ராமசாமி உறுதியுடன்.

பாசம்



பாபு பள்ளி முடித்து வெளியே வந்தான். பாட்டி ஒருத்தி பள்ளி வாசலில் மிட்டாய் விற்பாள். பாபுவுக்கு அந்த பாட்டியை மிகவும் பிடிக்கும்.

தினமும் சாயங்காலாம் மிட்டாய் வாங்கித் தின்று கொண்டு பாட்டியுடன் பேசிக் கொண்டிருப்பான். பிறகுதான் வீடு திரும்புவான். பாட்டியும் பாபுவுடன் அன்போடு பழகி வந்தாள்.

ஒருநாள் பாபு பள்ளிக்கு வரவில்லை. பாபுவை எதிர்பார்த்த பாட்டி ஏமாந்து போனாள்.

மறுநாள் பாபுவைக் கண்ட பாட்டி மனம் மகிழ்ந்தாள். பாபு பாட்டிக்கு இனிப்பு வழங்கினான்.

‘இனிப்பு எதற்கு?’ பாட்டி கேட்டாள். ‘நேற்று எனக்கு பிறந்தநாள். அதனால்தான் பள்ளிக்கு கூட வரவில்லை’ என்று கூறி இனிப்பை பாட்டிக்கு ஊட்டிவிட்டான் பாபு.

பாட்டி கண்ணில் கண்ணீர்  வழிந்தது. இதைக்கண்ட பாபு, ‘ஏன் பாட்டி அழறீங்க’ என்று கேட்டான்.

அதற்கு பாட்டி ‘நேற்று என் பேரனுக்கும் பிறந்தநாள். அவன் நினைவு வந்தது’ என்று கூறினார்.

‘உங்கள் பேரன் எங்கே இருக்கிறான்? நேற்று உங்களை பார்க்க வந்தானா?’ பாபு கேட்டான்.

‘இல்லை பாபு, என் பேரன் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். என் மருமகளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால் என் பேரனை பிரிந்து வாழும் சூழ்நிலை வந்துவிட்டது’ என்றார்.

‘உங்கள் பேரன் பெயர் என்ன? உங்கள் மறுமகள் எங்கு இருக்கிறாள்?’ என்று பாபு கேட்டான்.

“என் பேரன் பெயர் துரை. என் மருமகள் பெயர்  சீதா, பக்கத்து ஊரில் தான் இருக்கிறாள். இருந்தலும் நான் என் பேரனையோ, மகன்-மருமகளையோ பார்ப்பதில்லை’ என்றாள் பாட்டி.

பாட்டி தன் பெயரையும், அம்மாவின் பெயரையும் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனான் பாபு.

துரைபாபு என்பது அவன் பெயர். ‘துரை, துரை’ என்று பாட்டி செல்லமாக அழைப்பாள். அதனால் அந்த பெயர் பிடிக்காத அவளது மருமகள் துரையென்று கூப்பிடாமல் பாபு என்று கூப்பிட்டு பழக்கப் படுத்தினாள்.

கைக்குழந்தையாக இருந்தபோதே பாட்டியை வெளியே அனுப்பிவிட்டதால் பாட்டிக்கும் தன் பேரனை அடையாளம் தெரியவில்லை.

‘தன் மீது பாசமாக இருக்கும் அம்மா, பாட்டி மீது மட்டும் ஏன் வெறுப்பு காட்டுகிறாள். அம்மாவுக்கு சரியான பாடம்புகட்ட வேண்டும்’ என்று விரும்பினான் பாபு.

மறுநாள் பள்ளிக்குப் போன பாபு, ‘பாட்டி நான் இன்று உங்களுடன் தங்குகிறேன். எங்கள் வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறி தங்கிக் கொண்டான்.

பள்ளியில் இருந்து திரும்பி வராத பாபுவை அவனது பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினார்கள். போலீசிலும்  புகார் செய்தனர். அவனது அம்மா அன்று சாப்பிடவே இல்லை.

மறுநாள் பாட்டியின் வீட்டிக்கு சென்ற பாபுவைக் கண்ட சீதா, கண்ணீருடன் பாபுவை கட்டித்தழுவி முத்தமிட்டாள்.

‘உன்னைக் காணாமல் என் உயிரே போய்விட்டது’ என்று கதறினாள் சீதா.

‘உன்னைப் போல்த்தான் அம்மா, பாட்டியும் அங்க மகனையும், பேரனையும் பிரிந்து தவிச்சிருப்பாங்க. ஏம்மா அவங்களை தனியே அனுப்பிச்சீங்க’ என்றான் பாபு.

‘பிரிவின் வலியைப் புரிஞ்சுக்கிட்டேன் பாபு. இனி பாட்டி நம்முடனே இருக்கட்டும்’ என்றால் சீதா தன் தவறை புரிந்து கொண்டவளாக. தன் மாமியார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள் சீதா.


இப்போது அனைவரும் ஒன்றாக  வாழ்ந்தனர்.


தப்பு



செழியனும், ரவியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அன்று மாலை விளையாடிக் கொண்டே சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

ரவி பாதையோரம் கிடந்த ஒரு பாட்டிலை கையில் எடுத்தான். பேசிக் கொண்டே வந்தான், திடீரென்று அந்த பாட்டிலை ரோட்டில் போட்டு உடைத்தான்.

‘ஏண்டா, பாட்டிலை ஆட்கள் நடக்கும் பாதையில் போட்டு உடைக்கிறே’ என்று கேட்டான் செழியன்.

‘அட போடா... உடைக்கும்போது  டொம்முனு சத்தம் வருதா? அதைத்தான் பார்க்கணும். ஆட்டகளுக்குத் தான் கண்ணு இருக்குதுல்ல... பார்த்துப் போவாங்க... நானும், ராஜூவும் வந்தா, ரெண்டு போரும் போட்டி வெச்சுக்குவோம். ஆளுக்கொரு பாட்டிலை எடுத்து உடைப்போம். யாரு உடைக்கிற பாட்டில் அதிக சத்தத் தோட சில்லுச்சில்லா உடையுதுன்னு பார்ப்போம்’ என்றான் அலட்சியமாக.

‘செய்றதையும் செஞ்சுட்டு இவ்வளவு அலட்சியமாக பேசுறே... நாமளே நாளைக்கு நடந்து வரும்போது நம்ம காலில் கூட கண்ணாடி குத்திவிடும். வா... உடனே கண்ணாடித் துண்டுகளை பொறுக்கி அப்புறப்படுத்திவிடுவோம்’ என்றான் செழியன்.

‘எனக்கு வேற வேலை இல்லை. நான் நடக்கும்போதும் கண்ணாடிச் சில்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்திருக்கேன். நானும் தாண்டித்தான் போவேன், மத்தவங்களும் தாண்டித்தான் போவாங்க... இதையெல்லாம் யாரு அள்ளிக்கிட்டு இருப்பாங்க...’ என்று நடையைக் கட்டத் தொடங்கினான்.

‘ரவி... தீய செயல் என்று தெரிந்தும் நாம் அதையே செய்யக்கூடாது. நாம் செய்வதவினை நமக்கே திரும்ப வரும் என்று நம் ஆசிரியர் சொல்லித் தந்ததை மறந்துவிட்டாயா... நீ வேண்டுமானால் கிளம்பு. நான் கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்திவிட்டு வருவேன்...’ என்று பக்கத்து வீட்டில் இருந்து துடைப்பம், முறம், சிறிது சாணியும் பெற்று வந்தான்.

அதற்குள் பாதையை கடந்து சென்ற சிலர், ‘படுபாவிங்க ஆள் நடக்கிற பாதையில் கண்ணாடியை உடைச்சிருக்காங்க. உடைச்சவன் நல்லாவே இருக்க மாட்டான்’ என்று திட்டிக் கொண்டே சென்றனர்.

செழியன் விரைந்து வந்து கண்ணாடித் துண்டுகளை பொறுக்கத் தொடங்கினான். அப்போது அந்த வழியே பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்தார். மாலையில் நடைபயிற்சி சென்றுவிட்டு அவ்வழியே வருவது வழக்கம். செழியனின் செயலைப் பார்த்த அவர், அவனை வெகுவாகப் பாராட்டினார். பின்னர் நடையைக் கட்டினார்.

சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த ரவி, தலைமை ஆசிரியர் வருவதைப் பார்த்தான். ‘நேற்று லீவு லெட்டர் கொடுக்காமலே விடுப்பு எடுத்ததைப் பற்றி கேட்பார்’ என்று பயந்துபோன அவன், வேகவேகமாக ஓடி அருகில் நின்ற புளிய மரத்தின் பின்னால் ஒளிந்தான்.

அதேவேகத்தில்...’ஆ..வென்று’ அலறிக் கொண்டு கிழே உட்கார்ந்தான். அவன் காலில் கண்ணாடிப் பீங்கான் குத்தி காலை கிழித்து ரத்தம் கொட்டியது. சில நாட்களுக்கு முன்பு அவனும், ராஜூவும், அந்த புளிய மரத்தின் அடியில் பாட்டில்களை அடுக்கி வைத்து, சற்று தூரத்தில் நின்று குறிப்பார்த்து அடித்து உடைத்தார்கள். அதை யாருமே அகற்றாததால் அவசரமாக ஓடி ஒளிந்த அவனது காலிலேயே குத்திக் கிழித்துவிட்டது.

மறுநாள், காலில் கட்டுப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்தான் ரவி.

காலை இறைவணக்க வேளையில் தலைமை ஆசிரியர், செழியனின் செயலை அனைத்து மாணவர்கள் முன்பும் கூறி பாராட்டு தெரிவித்தார். ‘அனைவரும் செழியனைப்போல நல்ல செயல்கள் செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

மாணவர்கள் அனைவரும் கைதட்டி அவனை கவுரவித்தார்கள்.

பின்னர் ரவி செழியனை சந்தித்து, ‘நீ நேற்றுச் சொன்னதை நான் கேட்கவில்லை. ஆனால் நான் ஏற்கனவே உடைத்த கண்ணாடித் துண்டே என் காலைப் பதம் பார்த்துவிட்டது. வினை விதித்தவன் வினை அறுப்பான் என்பதை புரிந்து கொண்டேன். இந்த தண்டனை எனக்குத் தேவைதான். இனி நான் இதுபோல் தெரிந்தே தப்பு செய்ய மாட்டேன்’ என்று உறுதி கூறினான்.

தலைமை ஆசிரியரின் பாராட்டும், ரவியின் மனமாற்றமும் செழியனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது!

கேடு நினைத்தால்...


காட்டு ராஜாவான சிங்கத்திற்கு திடீரென்று உடல்நலம் மோசமானது. வேட்டையாடக்கூட செல்ல முடியாமல் படுத்த படுக்கையானது.

இதையறிந்த விலங்குகள் ஒவ்வொன்றாக வந்து நலம் விசாரித்து சென்றது. ஓநாய் ஒன்று சிங்கத்தின் கூடவே இருந்து பணிவிடை செய்து வந்தது. அந்த ஓநாய்க்கு அங்குள்ள நரி ஒன்றுடன் பகை இருந்தது.

பக்கத்து காட்டுக்குப் போயிருந்த நரிக்கு, சிங்க ராஜாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பது தெரியாது. அதனால் அது ராஜாவை நலம் விசாரிக்க வரவில்லை.

எனவே ஓநாய், நரியைப் பற்றி சிங்கத்திடம் கோள் மூட்டியது. ‘சிங்க ராஜா, உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்தும், அந்த நரிப்பயல் உங்களை வந்து பார்க்க வில்லை. இனி நான்தான் காட்டுக்கு ராஜா என்று மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு திரிகிறானாம். என் காதிற்கு எட்டிய செய்தியை உங்களிடம் சொல்லிவிட்டேன். அவனை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று போட்டுக் கொடுத்தது.

நரி, சொந்த காட்டிற்குத் திரும்பிய பிறகுதான், சிங்கத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விவரத்தை அறிந்தது. உடனே சிங்கராஜாவைப் பார்க்கப் புறப்பட்டது.

நரி வருவதைக் கண்ட ஓநாய், ‘சிங்கராஜா, அந்த நரிப்பயல் விருகிறான். அவன் திமிரை இப்போதே அடக்கி வையுங்கள், இல்லாவிட்டால் இன்னும் அதிகமாக வாலாட்டுவான்’ என்று சிங்கத்தை சீண்டிவிட்டது.

சிங்கத்திற்கு பயங்கர கோபம் வந்தது. சினத்துடன் கர்ஜித்துக் கொண்டு, ‘எனக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும்கூட என்னைப் பார்க்க வராமல் அப்படி உனக்கு என்ன வேலை? நான் தளர்ந்து போனதும் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாயாமே....’ என்று உறுமியது.

ஒநாய், ஏதோ பற்றவைத்திருப்பதை உணர்ந்து கொண்ட நரி, ‘இல்லை ராஜா. உங்கள் உடல் நலம் பெற என்ன வழி? என்றுதான் பக்கத்து காட்டு வைத்தியரிடம் சென்று விசாரிக்க போனேன்.

அதான் தாமதத்திற்கு காரணம்’ என்றது நரி.

‘ஓ....அப்படியா...அவர் என்ன வைத்தியம் சொன்னார்?’ என்று கேட்டது சிங்கம்.

“ஒரு ஓநாயின் தோலை எடுத்துப் போர்த்திக் கொண்டால், உங்களுக்கு நடுக்கமும், நோயும் தீர்ந்துவிடும் என்று வைத்தியர் சொன்னார்’ என்றது நரி.

அடுத்த நிமிடம் சிங்கத்தின் பார்வை ஓநாய் மீது படிந்தது. கோள் மூட்டிய ஓநாய் பலியிடப்பட்டது. அதன் தோலை சிங்கம் போர்த்திக் கொண்டது.

‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பார்கள். கெட்டப் புத்திக்காரனுக்கு இப்படித்தான் கேடு விளையும்.

கர்வம்



அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள்.

இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். நான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை அமைத்துவிடுவேன். என்னை யாறாலும் ஒன்றும் செய்யமுடியாது. பாம்பைக்கூட விரட்டியடித்து விடுவேன்.’ என்று வீண் பெருமை பேசும்.

ஒருநாள் எலியும், குதிரையும் கொஞ்சம் தூரத்தில் சென்று மேய்ந்து வர முடிவு செய்தன. இரண்டும் பேசிக்கொண்டு நடந்தன. அப்போது, ‘நான்தான் உன்னை வழி நடத்தி செல்வேன். நான் சண்டையில் அவனை வீழ்த்தியிருக்கிறேன், இவனை வீழ்த்தியிருக்கிறேன்’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே முன் சென்றது எலி. திடீரென்று எலி நின்றது.

‘ஏன் நின்றுவிட்டாய்? தொடர்ந்து செல்’ என்றது குதிரை.

‘உனக்கு கண் சரியாக தெரியாதா? எதிரே பார் ஆறு ஓடுகிறது, எப்படி கடப்பது?’ என்று கேட்டது எலி.

‘அது ஆறா? சிறிய கால்வாய் தானே இது. எளிதாக கடந்துவிடலாம்’ என்றது குதிரை.

‘குதிரையே இது கால்வாயா? எனக்கு ஆறுபோல்தான் தெரிகிறது, இறங்கினால் நிச்சயம் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும், நாம் இரண்டு பேரும் மூழ்கிவிடுவோம்’ என்றது எலி.

குதிரை எலியின் பேச்சை கண்டுகொள்ளாமல் கால்வாயில் இறங்கியது, ‘ஏய் எலியே, என் முழங்கால் அளவு கூட வெள்ளம் இல்லை. இதையை நீ ஆறு என்கிறாய், உடனே இறங்கிவா?’ என்றது குதிரை.

‘நண்பா உணக்கு வேண்டுமானால், இது குறைந்த தண்ணீராக இருக்கலாம். ஆனால் என் உருவத்திற்கு இது நதிபோல வெள்ளப்பெருக்கு தான். தயவு செய்து என்னை உன் முதுகில் ஏற்றி அக்கரையில் விடு. நான் என்னைப் பற்றி கர்வத்துடன் பேசியதை மறந்துவிடு’ என்று மன்னிப்புக் கேட்டு அடங்கியது எலி.

‘அப்படிவா, வழிக்கு. இனியும் வீண் பெருமை பேசி வாழாதே’ என்று எலியை,  தன் மதுகில் ஏற்றி அக்கரையில் விட்டது குதிரை. இரண்டும் கர்வமின்றி நண்பர்களாக வாழ்ந்தன.

உண்மை



ரவி, மணி இருவரும் நண்பர்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இருவரும் படுசுட்டி பையன்கள்.

ரவியின் மாமா பட்டணத்தில் வேலை செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தார். வரும்போது பரிசுகள் வாங்கி வருவதாக கூறினார்.

ரவிக்கு ஒரே சந்தோஷம். ‘எப்போது ஞாயிற்றுக்கிழமை வரும், மாமா என்ன பரிசு வாங்கி வருவார்’ என்பதே அவனது சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் ரவி, அம்மா நான் கிரிக்கெட் விளையாடச் செல்கிறேன். மாமா வருவதற்குள் வந்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். மணியையும் அழைத்துக் கொண்டு அருகே உள்ள மைதானத்தில் விளையாடச் சென்றான்.

அவர்கள் விளையாடச் செல்லும் வழியில் மாமரத்தில் நிறைய பழங்கள் காய்த்து தொங்குவதைக் கண்டனர்.

‘கல்லால் அடித்து மாம்பழத்தை விழ வைத்து தின்போம்’ என்றான் ரவி. மணி அதை விரும்பவில்லை. ரவி கட்டாயப்படுத்தவே இருவரும் மாமரத்தில் கல்லெறிந்தனர். கிழே விழுந்த மாம்பழங்களை எடுத்து சுவைத்துக் கொண்டே விளையாடச் சென்றனர்.

மாம்பழங்கள் ருசியாக இருந்ததால் விளையாடிவிட்டு திரும்பும்போதும், இருவரும் மாமரத்தில் கல்லெறிந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது கல் பட்டுவிட்டது. உடனே ரவியும், மணியும் ஓட்டம் பிடித்தனர்.

‘யாரும் துரத்துகிறார்களா?’ என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடினார்கள். வீடு வந்து சேர்ந்தபிறகுதான் இருவரும் நிம்மதி அடைந்தனர்.

வீட்டில் மாமா வந்திருந்தார். ரவிக்கு பயம் விலகி சந்தோஷம் தொற்றிக் கொண்டது.

மாமாவிற்கு ரவியின் கால்சட்டை நிறத்தைப் பார்த்ததும், மரத்தில் கல்லெறிந்தது அவன்தான் என்பது தெரிந்தது போனது.

அவர் ரவியிடம் இது பற்றி கேட்டார், ‘என்ன ரவி, கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்தாச்சா? உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். நீ இன்று ஏதாவது தவறு செய்தாயா?’ என்றார்.

ரவி ‘இல்லவே இல்லை’ என்று மறுத்தான். பொய்யாக சத்தியமும் செய்தான்.

உடனே அவனது மாமா, அருகில் நின்ற மணியை அழைத்தார். “நீங்கள் இன்று ஏதாவது தவறு செய்தீர்களா?’ என்றார்.

அவன் உண்மையை ஒத்துக் கொண்டான். ‘ஆமாம் அங்கிள், நாங்கள் மாமரத்தில் கல்லெறிந்து திருடி சாப்பிட்டோம். அப்போது யார் மீதோ கல் பட்டுவிட்டது. உடனே ஓடிவிட்டோம்’ என்றான் மணி.

‘உங்களிடம் கல்லடி பட்டவனே நான்தான்’ என்ற ரவியின் மாமா, உண்மையைச் சொன்ன மணிக்கே, நான் வாங்கிவந்த பரிசு, என்று கூறி விலை உயர்ந்த கைகடிகாரத்தை மணியின் கையில் கட்டிவிட்டார்.

இருவரும், மாமாவிடம் மன்னிப்புக் கேட்டனர். ரவி, ‘இனிமேல் பொய் சொல்ல மாட்டேன்’ என்று உறுதி கூறினான். அவனுக்கு கிரிக்கெட் பந்து வாங்கிக் கொடுத்து, ஆறுதல் படுத்தினார் அவனது மாமா.

கதையின் நீதி: உண்மையே பேச வேண்டும், அதுவே மதிப்பை உயர்த்தும்.


நாங்களும் நல்லவர்களே!

நரிகள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று பெயர் ஏற்பட்டிருந்தது.

அதனால் அந்தக் காட்டுக்குள் நரிகளைக் கண்டாலே எல்லா விலங்குகளும் கடித்து விரட்டின. எனவே நரிகள் அந்தக் காட்டை காலி செய்து கொண்டு அடுத்த காட்டிற்குச் சென்றுவிட்டன.

இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. மூன்றாவது தலைமுறையில் பரதன் என்ற இளம் நரி இருந்தது. அதற்கு தனது மூதாதையார் கதையைக் கேட்டதும் அவமானமாக இருந்தது. இந்த அவமானத்தை துடைத்து திரும்பவும் சொந்த காட்டில் வாழ வேண்டும். நம் இனத்தையும் சொந்த காட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என எண்ணியது.

அதற்காக பழைய காட்டிற்குச் சென்று அனைத்து விலங்குகளையும் சந்தித்து பேசுவது என்று முடிவெடுத்த பரதன் பயணத்தை தொடங்கியது.

பரதனைக் கண்ட மற்ற விலங்குகள், ‘புதிய வன் யாரோ வருகிறான்’ என்று கலங்கின. வயதான விலங்குகளோ நரியை அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் இங்கு எங்கே வந்தான்’ என்று முறைத்தன. ‘அவனிடம் யாரும் பேச வேண்டாம்’ என்று இளைய தலைமுறைக்கு உத்தரவிட்டன.

“எங்கள் இனத்தை சகுனி குணம் படைத்தவர்கள், கூட இருந்தே குழி பறிப்பவர்கள். தந்திரசாலிகள் என்று யாரோ கட்டிவிட்ட கதையை நம்பலாமா? நாங்கள் மட்டும்தான் கெட்டவர்களா? மலர்களில் எல்லாமே மணமிக்கதா? மணமற்றவையும் கலந்துதான் உள்ளன. எங்களிலும் நல்லவர்களும் உண்டு” என்று வாதம் செய்து விலங்குகளிடம் நியாயம் கேட்டது.

ஆனால் எல்லா விலங்குகளும் அதை ஏற்பதாக இல்லை. ‘நீ இங்கிருந்து ஓடிப் போய்விடு’ என்று விரட்டின. மனம் உடைந்த நரி, மலை மீதேறி கிழே விழுந்து உயிரை விட்டுவிட முடிவெடுத்தது.

அப்போது அங்கிருந்த குயில், “நரி அண்ணே உங்கள் இனத்தின் அவப்பெயரை துடைக்க தானே புறப்பட்டு வந்தீர்? ஒரு லட்சியத்தை சுலபமாக அடைய முடியாது. விலங்குகள் போற்றும்படி செய்து அவைகளின் நம்பிக்கையைப் பெற்றால் உங்கள் குறிக்கோள் வெற்றி பெறும். மயற்சி செய்யுங்கள்” என்றது.

நீ சொல்வதும் சரிதான் என்ற நரி தற்கொலை முடிவை கைவிட்டது. புத்திசாலித்தனமாக செயல்பட முடிவெடுத்தது.

வேடர்கள் வலை விரித்திருந்ததைக் கூறி பறவைகளிடம் நன்மதிப்பைப் பெற்றது நரி. அதேபோல காலுடைந்த முயலை பத்திரமாக அதன் இருப்பிடத்திற்க்கு அழைத்து வந்து விட்டது. ஒரு மரத்தில் இருந்து தவறி விழுந்த குருவிக் குஞ்சை, அதன் கூட்டில் எடுத்து வைத்தது. இதைக் கண்ட தாய்ப்பறவை நரியை வாழ்த்தியது.

இப்படியே சின்னச் சின்ன உதவிகளைச் செய்து நரி கொஞ்சம் கொஞ்சமாக நற்பேர் பெற்று வந்தது.

ஒரு நாள் வேட்டைக்கார்கள், பெரிய பள்ளம் வெட்டி இலை தழைகளால் மூடி வைப்பதை நரி பார்த்தது. அந்தப் பக்கமாக வந்த யானைக் கூட்டத்தை எச்சரிக்கை செய்து அவற்றை காப்பாற்றியது.

யானைக்கூட்டம் காட்டுக்கு ராஜாவான சிங்கத்திடம் நரி செய்த உதவியை சொல்லின. அதேபோல முயல், புறாக்கள், பறவைகளும் தங்களுக்கு நரி செய்த நன்மையைக் கூறின. இதனால் சிங்கராஜா, நரிகளை தங்கள் காட்டில் சேர்த்துக் கொள்வதாக முடிவெடுத்தது. மற்ற மிருகங்களும் அதை ஆமோதித்தன.

பரதன் சந்தோஷமாக தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்றது. தங்கள் குழுவினருடன் தங்கள் சொந்த காட்டுக்கு திரும்பி வந்து வாழத் தொடங்கியது.

தீங்கு திரும்பி வரும்.


பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

அவர் தூரமாக வரும்போதே, மாணவன் சுரேஷ், ‘டேய்... அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு’ என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்றுவிட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது.

வீட்டில் ஒரே பையன் என்பதால் சுரேசிற்கு செல்லம் அதிகம். அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தலும், சுரேஷ் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறைவில்லை.

ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய சுரேஸ், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே ஆஸ்பித்திரியில் சோர்த்து சிகிச்சை அளித்தனர்.

பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு சுரேஷ் வீட்டிலேயே முடங்கிவிட்டான்.

‘ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான்’ என்று எண்ணிக் கொண்டான்.

சுரேஷ் நிலையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆசிரியர் தெய்வசிகாமணி, சுரேஷைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். படுக்கையில் கிடந்த சுரேஷைப் பார்த்துப் பேசினார்.

‘சுரேஷ், எப்படி துருதுருன்னு விளையாடிக்கிட்டு இருப்பே. இப்போ இப்படி முடங்கிவிட்டாயே. பள்ளியில் படிக்கும்போது நீதான் என்னைக் கேலி செய்யும் மாணவன் என்பது எனக்குத் தெரியும். அது அறியாப் பருவம். எனக்கு உன்மேல் கோபம் கிடையாது.

ஆனால் நீ இப்படி முடங்கிக் கிடப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. உடல் ஊனம் ஒரு குறையே அல்ல. மனம் ஊனம் அடைந்தால் தான் ஆபத்து. எனக்கும் உன்போலதான் திடீரென்று இப்படியானது. இதோபார் நான் உன் முன் ஆசிரியராக நிற்கிறேன். உன்னாலும் முடியும். முதலில் நீ வெட்கப்படுவதை விட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்று படி, மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

நாம் இவரை எவ்வளவோ கேலி செய்திருக்கிறோம். ஆனால் அவர் நம்மை ஊக்கப்படுத்திவிட்டு செல்கிறாரே, என்று எண்ணியவன், ஆசிரியர் தெய்வசிகாமணியை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரது அறிவுரைப்படி கல்லூரிக்குச் சென்றான். கல்லூரிப் படிப்புக்குப் பின் ஆசிரியப் படிப்பையும் முடித்தான்.

ஆனால் உடனே வேலை கிடைக்கவில்லை. சிறிது காலம் டயூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். ஆசிரியர் தெய்வசிகாமணி, தன் பதவிகாலம் முடிந்ததும் தனது வேலையை சுரேசுக்கு கொடுகக்குமாறு அதிகாரிகளிடம் பரிந்துரைத்து அவ் வேலையை வாங்கிக் கொடுத்தார்.

இப்போது சுரேஷ் அதே பள்ளியில் ஆசிரியராக வேலையில் சோர்ந்தான்.

“ஆசிரியரை கேலி செய்த நினைவுகளும், அவரே குருவாக மாறிப்போன நினைவுகளும் அவன் நெஞ்சில் அவ்வபோது வந்து போகும். ஆனால் இப்போது யாரையும் விளையாட்டுக்கு கூட கேலி செய்வதில்லை.

வாழ்க்கை


குளங்களெள்ளாம் நிரம்பி ஒடின. ஒரு வாரமாக பலத்த மழை. பறவைகளால் அடைமழையால் வெளியே தலை காட்ட முடியவில்லை. உணவின்றி தவித்தன.

வடாத மழையிலும், மீன் கொத்தி பறவை மட்டும் மிகவும் சந்தோஷத்துடன் காணப்பட்டது.

நீர் நிரம்பிய குளக்கரை மரத்தில் அமர்ந்து கொண்டு குளத்து நீரில் துள்ளிக் குதிக்கிற மீன்களை பறந்து பறந்து பிடித்துத் தின்றது.

மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த மற்ற பறவைகள், மீன் கொத்தியின் சந்தோஷத்தைக் கண்டு பொருமின.

மறுநாள் மழை நின்றது. மீன் கொத்திப் பறவை மகிழ்ச்சி குறையாமல் பாட்டுபாடிக் கொண்டிருந்தது.

பசியிலும், பட்டினியிலும் வாடிய பறவைகள் ஆத்திரத்துடன் மீன் கொத்திப் பறவையிடம் சென்றன.

அருகில் வந்த பறவைகளை தன் பாட்டை நிறுத்திவிட்டு பார்த்தது மீன்கொத்தி.

“தம்பி ஒரு வாரம் பொய்த மழையில் நாங்களெல்லாம் பட்டினி” என்றது காக்கா.

“தெரியுமே” என்றது மீன்கொத்தி, சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்...

“தெரிந்துமா, இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய்?” என மைனா குருவி கேட்டது.

“இதிலென்ன இருக்கிறது. மழையில் உங்களால் உணவு  தேட முடியவில்லை. நான் மழை பெய்ததால் சந்தோஷமாக இருக்கிறேன். இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே...”

மீன்கொத்தியின் பதில் பறவைகளை ஆத்திரப்படச் செய்தது.

“என்னது நாங்க பட்டினி கிடப்பது பெரிய விஷயமல்லையா?”, பச்சைகிளி கத்தியது.

“நண்பர்களே நானும் உங்களை மாதிரி பசியில் வாடியிருக்கிறேன்” என்றது மீன்கொத்தி.

“என்னது நீ கஷ்டப்பட்டியா?” ஆச்சிரியமாக கேட்டது சிட்டுக் குருவி.

“என்னுடைய உணவு மீன்கள்தான். அவை மழைகாலத்திலும், குளிர்காலத்திலும் நிறைய கிடைக்கும். கோடை கால்த்தில் குளங்கள் வறண்டு மீன்கள் இல்லாமல் ஆகிவிடும். அப்பொழுதெல்லாம் நான் பட்ட கஷ்டம்  எனக்குதான் தெரியும்” மீன்கொத்தி தன் கதையை சொல்லியது.

மேலும் தொடர்ந்து பேசியது மீன்கொத்தி... “ இயற்க்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதில் லாபம், நஷ்டம் கலந்தே இருக்கும். எனக்கு மழைக்காலத்தில் உணவு கிடைக்கிறது, உங்களுக்கு இல்லை. கோடைகாலத்தில் உணவுக்கு நான் கஷ்டப்படுகிறேன். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள், மனிதர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்..” என்றது.

“மனிதனின் வாழ்க்கையும் நம்மைப் போன்று கஷ்டமானதா?” மைனா ஆச்சிரியத்துடன் கேட்டது.

“ஆம். உழைத்துப் பிழைக்கின்ற மனிதவர்க்கம், மழைகாலத்தில் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அதனால் வருமானம் இல்லாமலும், உணவுக்கு வழி இல்லாமலும், நம்மைப்போல கஷ்டப்படுகிறார்கள்.


இயற்கையின் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு சமயத்தில் வாழ்க்கை ஓஹோவென்று இருக்கும். சில சமயங்களில் இப்படி சலிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும். இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இதை பொறுத்துக் கொண்டுதான் வாழ வேண்டும். என்றது மீன்கொத்தி.

மற்ற பறவைகளும், மீன்கொத்தியின் கருத்தை ஆமோதித்து ஏற்றுக்கொண்டன.





மனசாட்சி



சாமிநாதன் தன் மகன் சரவணனின் வரவை எதிர்பார்த்தபடியே பள்ளியின் வரவேற்பறையில் காத்திருந்தார்.

திடீரென்று பள்ளியில் இருந்து அவனை அழைத்திருந்தார் தலமை ஆசிரியர்.

‘என்ன விஷயமாக இருக்கும்? எதற்காக கூப்பிட்டிருப்பாங்க’ என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டு யோசித்தபடி இருந்தார் சாமிநாதன்.

சரவணன் சந்தோஷமாக ஓடி வந்தான்.

தந்தை கேட்பதற்கு முன்பே, மகிழ்ச்சியில் திளைத்தபடி மளமளவென்று பள்ளியில் நடந்ததைக் கூறத் தொடங்கினான் அவன்...

“அப்பா இந்தாங்க சுவீட் எடுத்துக்கோங்க...” என்று லட்டுவை கொடுத்தபடியே பேசினான்.

“அப்பா நான்தான் ‘ஸ்கூல் பஸ்ட் மார்க் வாங்கியிருக்கேன். வருஷா வருஷம் ஸ்கூல் பஸ்ட் மார்க் வாங்குறவங்களுக்கு எங்க ஸ்கூல்ல முன்னாடி படிச்ச சாமிநாதன்ங்கிற சார் 10 ஆயிரம் ரூபா பரிசு தருவாராம்.

இந்த வருஷம் நான் பஸ்ட் மார்க் வாங்கினதாலே என்னைக் கூப்பிட்டு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாங்க. சாமிநாதன் சார், உதவி கலெக்டரா இருக்கராம். தான் செய்ற உதவி வெளியே தெரியக்கூடாதுன்னு, ரொம்ப சிம்பளா என்கிட்டேயே கொடுத்துட்டாங்கப்பா” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான் சரவணன்.

மகன் கூறியதைக் கேட்டு சாமிநாதன் சந்தோஷப்பட்டார்.

“வெரிகுட் சரவணா, இந்தப் பணத்தை என்ன செய்யலாமனு நினைக்கிறே” என்று கேட்டார்.

ஓரு நிமிடம் யோசித்துவிட்டு சரவணன் பதில் சொன்னான்.


“அப்பா உங்க பிரண்ட் ரவியோட மகன் கிருஷ்ணன் எங்க ஸ்கூல்லதான் படிக்கிறான். ரவி அங்கிள் இறந்து போயிட்டதால அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க இல்லப்பா. கிருஷ்ணன் இந்த வருஷம் 10-ம் வகுப்பு போவான். அவங்க அக்காவும் பிலஸ்-2 போவாங்க. அதனால அவங்களுக்கு செலவுக்குத் தேவைப்படும். இதை அவங்களுக்கே கொடுத்துடலாம்பா” என்றான் சரவணன்.

மகனின் பேச்சு தூக்கி வாரி போட்டது. ஒரு வினாடி அப்படியே ஆடிப்போய்விட்டார். அவருடைய மனதில் மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து போனது.

அன்று தனது வீட்டிற்கு வந்திருந்தான் நண்பன் ரவி.

“சாமிநாதா எனக்கு வரவேண்டிய அரியர் பணம் எல்லாம் வந்துவிட்டது. அடுத்தவாரம் என் மகளுக்கு பர்த்டே. இந்த கவர்லே பத்தாயிரம் இருக்கு. அவள் அடிக்கடி தங்கக் கம்மல் வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்கா. இந்த பர்த்டேக்கு சர்ப்பிரைஸ்ஸாக வாங்கிக் கொடுக்கப் போறேன்.

வீட்டுக்கு கொண்டு போனா செலவாயிடும். பத்திரமா நீயே வெச்சிரு. யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமா எங்க வீட்டுக்கு...” என்று கூறி பணத்தை கொடுத்துவிட்டுப் போனவன் தன் வீட்டிற்குப் போய்ச் சேரவில்லை. வழியில் லாரி மோதி இறந்து போனான்.

சாமிநாதனுக்கு பண ஆசை கண்னை மறைத்தது. பணம் கொடுத்தது யாருக்கும் தெரியாது என்பதால் அதை அவனே வைத்துக் கொண்டான்.

மூன்று மாதங்களாக மனசாட்சியின் உறுத்தலை கண்டு கொள்ளாமல் இருந்த சாமிநதனுக்கு மகனின் பேச்சு, தன் நிலையை எண்ணி வெக்கப்பட வைத்தது.

‘துண்பம் வரும் நேரத்தில் நண்பனுக்கு உதவ வேண்டிய நாம், அவன் கொடுத்த பணத்தைக்கூட மறைத்து வைத்துக் கொண்டோமே’ என்று வருந்தினார்.


“வயதில் சிறியவனான தன் மகன், மனதளவில் தன்னைவிட உயர்ந்து நிற்கிறானே?” என்ற எண்ணம் சாமிநாதனின் மனதை அரித்தது.

தன் மகனை கட்டிப்பிடித்து அன்பு முத்தம் வைத்ததோடு, கண்ணீரையும் உதித்தார்.

‘ஏன்பா அழறீங்க...” என்று கேட்டான் சரவணன்.


உண்மையை வெளிப்படச் சொல்ல முடியாத சாமிநாதன், ‘உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது’ என்று கூறிய அவர், இன்னும் பத்தாயிரம் சேர்த்துக் கொடுத்துவிடுவோம் என்று தனது கடனைத் தீர்தார்!


காக்கையின் நட்பு


அர்சனாவுக்கு வயது ஒன்றரை, அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு, சோறூட்ட முற்றத்திற்கு வந்தாள் அவளது அம்மா சாந்தி.

சோற்றுடன் வந்ததும் முற்றத்தில் நின்ற மரத்தில் ஏராளமான காகங்கள் கூடிவிட்டன.

காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் சாந்தி. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை.

அப்போது குக்கர் விசில் சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் சாந்தி.

அர்ச்சனாவின் அழகுக் கண்கள் சிரிக்கும், தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி.

அம்மா உள்ளே போனதும், அர்ச்சனா கண்ணால் சிரித்தபடி தளிர்நடை நடந்தபடி, சோற்றை அள்ளி காக்காவை நோக்கி நீட்டினாள். காகங்கள் அவளை நெருங்கி வர, “காக்கா இந்த... காக்கா இந்தா...” என்று சோறு போட்டாள். 

உள்ளே சென்ற சாந்தி திரும்பி வர, கையால் ஒரு அடி அடித்தாள் அர்ச்சனாவை...

“அரிசி விக்கிற விலைக்கு இதுகளுக்கு சமைச்சி சோறு போடணுமாக்கும். உன் சாப்பாட்டை காக்காவுக்கு தியானம் பண்றியா?”
என்று முணுமுணுத்தபடியே கையை ஓங்கி காக்கைகளை விரட்டினாள் சாந்தி.

அர்ச்சனாவுக்கு நாய், பூனை, காக்கா, எறும்பு எல்லோருமே நண்பர்கள்தான். கையில் என்ன பண்டம் வைத்திருந்தாலும் போட்டு விடுவாள்.

அதட்டிக் கொண்டே சோறூட்டிய சாந்தி, விளையாட்டுச் சாமான்களை அர்சனாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்க வீட்டுற்குள் சென்றுவிட்டாள்.

அர்ச்சனா முற்றத்தில் விளையாட்டு சாமான்களை பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென அர்ச்சனாவின் கூச்சலும், காக்காக்கள் கத்தும் சத்தமும் கேட்டு வெளியே ஓடி வந்தாள் சாந்தி.

அங்கே குரங்கு ஒன்றை காக்கை கூட்டம் விரட்டி விரட்டி கொத்திக் கொண்டு இருந்தது.

“அம்மா என் டப்பா...” என்று அழுத அர்ச்சனா, அம்மாவை கட்டிக் கொண்டாள்.

ஒரு நொடியில் நடந்ததை புரிந்து கொண்டாள் சாந்தி.

தன் மகள் விளையாடிய பாத்திரத்தில் ‘சாப்பிட ஏதேனும் இருக்குமோ?’ என எண்ணி குரங்கு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. இதைப் பார்த்த காகங்கள் குரங்கினை விரட்டி கொத்துகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள்.


மகள் மற்ற ஜீவன்களுடன் நட்பாக இருந்தது, அவளுக்கு ஒரு இடையூறு நேர்ந்தபோது உதவியாக அமைந்ததை எண்ணி ஆச்சிரியப்பட்டாள் சாந்தி.

அன்று முதல் மகளுக்கு சோறூட்ட வரும்  சாந்தி முதலில் காகங்களை ‘க்கா...க்கா...’ எனக் கூப்பிட்டு சாதம் வைத்த பின்னரே மகளுக்கு உணவூட்டினாள்! 

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மகிழ்ச்சி


ஓர் ஊரில் வேலு என்பவன் கூலித் தொழில் செய்து கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நிம்மதியாக நடத்திவந்தான். அவனிடம் சொந்தமாக ஒரு மாட்டுவண்டி இருந்தது. ராமு, சோமு அவனது மாட்டு வண்டி காளைகள்.

வேலு தன் மாட்டுவண்டியில் நிறைய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். கிரமாத்திற்க்கு அருகில் உள்ள ரைசில் மில் ஒன்றில் அனைத்து மூட்டைகளையும் இறக்கினார்.

சோமு முகத்தில் சந்தோஷம் கரை பரண்டு ஓடியது. அதை கவனித்த ராமு, ‘என்ன சோமு என்றைக்கும் இல்லாமல் இன்று உன் முகம் சந்தோஷமாக இருக்குதே, என்ன காரணம்?’ என்று கேட்டது.

‘ராமு இன்னும் இரண்டு நாளில் மாட்டுப் பொங்கல் திருவிழா வருகிறது. நமக்கு விதவிதமான விருந்து படைப்பார்கள். நம் கொம்புகளுக்கு எல்லாம் பெயிண்ட் பூசி, மாலை போட்டு நம்மை எல்லோரும் கை கூப்பி கும்பிடுவாங்க. அதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கு’ என்றது சோமு.

‘ஆமாம், ஆமாம்... பொங்கல் வரப் போகுதுல்ல. மாட்டுப்பொங்கல் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று ஆமோதித்தது ராமு.

வேலு, மூட்டைகளை இறக்கிவிட்டு கூலி வாங்கினான். அந்தப் பணத்தில் பிள்ளைகளுக்கு கரும்புக் கட்டும், மஞ்சள்குலையும் வாங்கிக் கொண்டான். பொங்கல் பொருட்களும் பைநிறைய வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். காளைகளும் சந்தோஷமாக புறப்பட்டன.

மறுநாள் வேலு பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டான். மறுநாள் மாட்டுப் பொங்கல் என்பதால் அன்று மாலையே வேலு மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசிக் கொண்டு இருந்தான். சோமுவுக்கு வர்ணம் தீட்டி முடித்த சமயத்தில், விவசாயி கோவிந்தன் அழுது கொண்டே வேலுவைத் தேடி வந்தான். “ஏண்டா கோவிந்தா ஏன் அழுதுகிட்டே வர்றே?” என்றார் வேலு.

“அய்யா என் மனைவிக்கு திடீர்னு பிரசவ வலி வந்திடுச்சி. துடியா துடிக்கிறா? இந்த நேரத்தில் நம்ம ஊர் வழியா பஸ் கிடையாது, என்ன செய்றதுன்னே புரியல. அதான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றான் கோவிந்தன்.

“சரி பதட்டப்படாதம இரு. நான் வண்டியை பூட்டுகிறேன். சீக்கிரம் கிளம்பிடலாம்” என்றான் வேலு.

“சரிங்கய்யா” என்ற கேவிந்தன் வந்த வேகத்தில் திரும்பி ஓடினானா.

வேலு, காளைகளை வண்டியில் பூட்ட தயாரானான். ராமு உடனே கிளம்பியது. ஆனால் சோமுவோ அடம்பிடித்தது கிளம்ப மறுத்தது.

அப்போது ராமு சோமுவிடம், ஏன் வர மறுக்கிறாய்? என்று கேட்டது.

‘விடிந்தால் மாட்டுப் பொங்கல், நம்மை எல்லோரும் கொண்டாடுவாங்க. நாம அங்கே போனால் அதெல்லாம் கிடைக்காது’ என்றது சோமு.

“திமிர் பிடித்தவன், உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்” என்று வேலு கோபத்தில் சோமுவைத் திட்டினான்.

ஒற்றை மாட்டை வண்டியில் பூட்டுவதென்று முடிவு செய்து, ராமுவை மட்டும் வண்டியில் பூட்டி வண்டியை கிளப்பினான். கோவிந்தனையும், மனைவியையும் ஏற்றிக் கொண்டு பக்கத்து ஊர் அரசு ஆஸ்பித்திரிக்கு வண்டி புறப்பட்டது.

ஒற்றைக் காளை பூட்டிய வேலுவின் வண்டி, ‘ஜல் ஜல்’ மணியோசையுடன் குதிரை வண்டிபோல வேகமெடுத்தது. நல்லபடியா கோவிந்தன் மனைவிக்கு சுகப்பிரசவம் நடந்தது. மறுநாள் மாலையில்தான் ராமு வீடு திரும்பியது.

சோமு, ராமுவைப் பார்த்தது, “அடுத்தவனுக்காக உதவப்போன உனக்கு மாலை மரியாதை எதுவும் கிடைக்கலே. அதனால்தான் நான் வரமாட்டேன் என்று சொன்னேன்” எனறு பெருமைப்பட்டது சோமு.

அதற்கு சோமு, “இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதுதான் எனக்கு சந்தோஷம் அதனால் எத்தனை பேரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறேன் தெரியுமா? அது தனிப்பட்ட உன்னுடைய சந்தோஷத்தைவிட பல மடங்கு உயர்ந்தது” என்றது ராமு.

சோமு அவமானத்தில் தலையை குனிந்து கொண்டது.

கதையின் நீதி: தன்னுடைய சந்தோஷத்தைவிட மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே உயர்ந்தது.

படிக்கிற வயசில்...


“நான் சொல்றதைக் கேளு முத்து. நீ நல்லா படிக்கணும், பாஸாகணும், வேலைக்கு போகணும். சந்தோஷமாக இருக்கணும், அதுதான் என் ஆசை.”

செல்லம்மாளின் ஏக வசனம் இதுதான். முத்து காலையில் எழுந்தது முதல் இரவில் தூங்கச் செல்லும் வரை அம்மாவின் இந்த வார்த்தைகளை எத்தனை முறை கேட்பான் என்று கணக்கே கிடையாது.

“தகப்பன் இல்லாத உன்னை வளர்த்து ஆளாக்குறதுதான் எனக்கு லட்சியம். நீ என்னன்னா இந்த வயசிலேயே செய்யக் கூடாத தப்பெல்லாம் செய்யறே. படிக்காமல் ஊர் சுத்துறே. பாடவேளையை கட் அடித்துவிட்டு படத்துக்குப் போறே. நல்ல பிள்ளைங்களோட சேர்ந்தால்தான் நீ நல்ல வனா வளர முடியும். தப்பு பண்றதை குறைச்சிகிட்டு நல்லா படி. இல்லே பின்னாலே ரொம்ப கஸ்டப்படுவே” என்றாள் செல்லம்மா.

“போம்மா, எப்ப பாத்தாலும் நொய் நொய்னு அரிச்சிகிட்டு. எனக்கு படிக்க இஷ்டமில்லே. நான் போக மாட்டேன். வேலைக்கு வேணும்னா போறேன்” என்றான் முத்து.

அம்மா அழுதாள். முத்து கொஞ்சமும் கலங்கவில்லை.

காலம் உருண்டோடியது. முத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சிற்றாள் வேலைக்குப் போனான்.

“டேய் எழுந்திருங்கடா, மணி ஏழாகுது” மேஸ்திரி குச்சியில் அடித்தபடி வந்தார்.

முத்துவும் எழுந்தோடினான். முகம் கழுவி, பல் தேய்த்து, சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாக வேலைக்கு ஓடினான்.

பகல் முழுவதும் மண், சிமெண்டு, சாந்து சுமக்க வேண்டும். முத்து உடம்பெல்லாம் புண்ணாக வலித்தது.

மாலையில் வேலை முடிந்து கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது மேஸ்திரி  தன் மகனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ஏண்டா நீ நல்லா படிக்கணும். நல்லா படிச்சா என்னை மாதிரி நார்காலியில் அமர்ந்தபடி மற்றவர்களை வேலை வாங்கலாம். இல்லாவிட்டால் இப்படித்தான் இவங்கள மாதிரி கல்லு சுமந்து, மண்ணு சுமந்து  அவஸ்தைப்படணும். என்ன புரிஞ்சுதா? நல்லா படிப்பியா? என்று கேட்டார்.

“சரிப்பா நான் நல்லா படிக்கிறேன். இவங்களை மாதிரி கஷ்டப்படமாட்டேன்” என்றான் மேஸ்திரியின் மகன்.

‘நம் அம்மாவும் நம்மிடம் இதைத் தானே சொன்னார்கள். நான் அப்போது கேட்காமல் போனேனே’ என்று மனதுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டான் முத்து. உடம்புடன் மனமும் சேர்ந்து வலித்தது.

படிக்கிற வயசில் படிக்காமல் இப்போது அழுது என்ன பிரயோஜனம் என்னு தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.