செழியனும், ரவியும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அன்று மாலை விளையாடிக் கொண்டே சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
ரவி பாதையோரம் கிடந்த ஒரு பாட்டிலை கையில் எடுத்தான். பேசிக் கொண்டே வந்தான், திடீரென்று அந்த பாட்டிலை ரோட்டில் போட்டு உடைத்தான்.
‘ஏண்டா, பாட்டிலை ஆட்கள் நடக்கும் பாதையில் போட்டு உடைக்கிறே’ என்று கேட்டான் செழியன்.
‘அட போடா... உடைக்கும்போது டொம்முனு சத்தம் வருதா? அதைத்தான் பார்க்கணும். ஆட்டகளுக்குத் தான் கண்ணு இருக்குதுல்ல... பார்த்துப் போவாங்க... நானும், ராஜூவும் வந்தா, ரெண்டு போரும் போட்டி வெச்சுக்குவோம். ஆளுக்கொரு பாட்டிலை எடுத்து உடைப்போம். யாரு உடைக்கிற பாட்டில் அதிக சத்தத் தோட சில்லுச்சில்லா உடையுதுன்னு பார்ப்போம்’ என்றான் அலட்சியமாக.
‘செய்றதையும் செஞ்சுட்டு இவ்வளவு அலட்சியமாக பேசுறே... நாமளே நாளைக்கு நடந்து வரும்போது நம்ம காலில் கூட கண்ணாடி குத்திவிடும். வா... உடனே கண்ணாடித் துண்டுகளை பொறுக்கி அப்புறப்படுத்திவிடுவோம்’ என்றான் செழியன்.
‘எனக்கு வேற வேலை இல்லை. நான் நடக்கும்போதும் கண்ணாடிச் சில்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்திருக்கேன். நானும் தாண்டித்தான் போவேன், மத்தவங்களும் தாண்டித்தான் போவாங்க... இதையெல்லாம் யாரு அள்ளிக்கிட்டு இருப்பாங்க...’ என்று நடையைக் கட்டத் தொடங்கினான்.
‘ரவி... தீய செயல் என்று தெரிந்தும் நாம் அதையே செய்யக்கூடாது. நாம் செய்வதவினை நமக்கே திரும்ப வரும் என்று நம் ஆசிரியர் சொல்லித் தந்ததை மறந்துவிட்டாயா... நீ வேண்டுமானால் கிளம்பு. நான் கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்திவிட்டு வருவேன்...’ என்று பக்கத்து வீட்டில் இருந்து துடைப்பம், முறம், சிறிது சாணியும் பெற்று வந்தான்.
அதற்குள் பாதையை கடந்து சென்ற சிலர், ‘படுபாவிங்க ஆள் நடக்கிற பாதையில் கண்ணாடியை உடைச்சிருக்காங்க. உடைச்சவன் நல்லாவே இருக்க மாட்டான்’ என்று திட்டிக் கொண்டே சென்றனர்.
செழியன் விரைந்து வந்து கண்ணாடித் துண்டுகளை பொறுக்கத் தொடங்கினான். அப்போது அந்த வழியே பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்தார். மாலையில் நடைபயிற்சி சென்றுவிட்டு அவ்வழியே வருவது வழக்கம். செழியனின் செயலைப் பார்த்த அவர், அவனை வெகுவாகப் பாராட்டினார். பின்னர் நடையைக் கட்டினார்.
சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த ரவி, தலைமை ஆசிரியர் வருவதைப் பார்த்தான். ‘நேற்று லீவு லெட்டர் கொடுக்காமலே விடுப்பு எடுத்ததைப் பற்றி கேட்பார்’ என்று பயந்துபோன அவன், வேகவேகமாக ஓடி அருகில் நின்ற புளிய மரத்தின் பின்னால் ஒளிந்தான்.
அதேவேகத்தில்...’ஆ..வென்று’ அலறிக் கொண்டு கிழே உட்கார்ந்தான். அவன் காலில் கண்ணாடிப் பீங்கான் குத்தி காலை கிழித்து ரத்தம் கொட்டியது. சில நாட்களுக்கு முன்பு அவனும், ராஜூவும், அந்த புளிய மரத்தின் அடியில் பாட்டில்களை அடுக்கி வைத்து, சற்று தூரத்தில் நின்று குறிப்பார்த்து அடித்து உடைத்தார்கள். அதை யாருமே அகற்றாததால் அவசரமாக ஓடி ஒளிந்த அவனது காலிலேயே குத்திக் கிழித்துவிட்டது.
மறுநாள், காலில் கட்டுப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வந்தான் ரவி.
காலை இறைவணக்க வேளையில் தலைமை ஆசிரியர், செழியனின் செயலை அனைத்து மாணவர்கள் முன்பும் கூறி பாராட்டு தெரிவித்தார். ‘அனைவரும் செழியனைப்போல நல்ல செயல்கள் செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
மாணவர்கள் அனைவரும் கைதட்டி அவனை கவுரவித்தார்கள்.
பின்னர் ரவி செழியனை சந்தித்து, ‘நீ நேற்றுச் சொன்னதை நான் கேட்கவில்லை. ஆனால் நான் ஏற்கனவே உடைத்த கண்ணாடித் துண்டே என் காலைப் பதம் பார்த்துவிட்டது. வினை விதித்தவன் வினை அறுப்பான் என்பதை புரிந்து கொண்டேன். இந்த தண்டனை எனக்குத் தேவைதான். இனி நான் இதுபோல் தெரிந்தே தப்பு செய்ய மாட்டேன்’ என்று உறுதி கூறினான்.
தலைமை ஆசிரியரின் பாராட்டும், ரவியின் மனமாற்றமும் செழியனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக