செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பேராசை

அந்தக் கிராமத்திலுள்ள பிரபலமான மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அன்று இரவு மாஜிக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் கோயிலில் திரண்டிருந்தனர். மந்திரவாதி ஒருவர் திறந்த வெளியில் தனது சாகச மாஜிக் வித்தைகளை காண்பித்துக் கொண்டிருந்தார்.

தொப்பிக்குள்ளிருந்து முயல் குட்டியை வரவழைத்ததும், கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இவற்றை பக்கத்துப் புதரில் பதுங்கியிருநத் புலி ஒன்று கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கும் ஒரு புலிக் குட்டியை வரவழைத்துக் கொடுக்கும்படி மந்திரவாதியை நிர்பந்திக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தது.

மாஜிக் ஷோ முடிந்ததும் மூட்டையைக் கட்டிக்கொண்டு மந்திரவாதி புறப்பட்டார். போகும் வழியில் புலி அவரை இடைமறித்தது. மந்திரவாதியை நோக்கி “உன் தொப்பியிலிருந்து முயல் குட்டியை வரவழைத்தாய். அதேப் போல எனக்கு ஒரு புலிக்குட்டியை வரவழைத்துக் கொடு. இது எனது நீண்ட நாள் ஆசை” என புலி பிடிவாதம் செய்தது.

மந்திரவாதிக்கோ ஒர் இக்கட்டான நிலை ஏற்பட்டுவிட்டது. புலியிடமிருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்த மந்திரவாதி சமாளித்துக் கொண்டு, “முயல் குட்டி எப்போதும் என் தொப்பியில் இருக்கும். மிருகங்களை என்னால் உடனடியாக வரவழைக்க முடியாது. இருந்தாலும் உனக்காக வரவழைத்துத் தருகிறேன். அதற்கு ஒருமாத கால அவகாசம் பிடிக்கும்” என்றார் மந்திரவாதி. புலி சம்மதித்தது. அதுவரை புலி சோற்றையும், பாலையும் உண்டு வாழ வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார் மந்திரவாதி. நிபந்தனைக்கு புலி ஒத்துக் கொண்டதும் மந்திரவாதி தனது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டார்.

ஒரு மாதம் கடந்து. மந்திரவாதி மீண்டும் அக்கிராமத்திற்கு வருகை புரிந்தார். புலி மந்திரவாதியைக் கண்டு கொண்டது. சரியான உணவு இல்லாமல் உடல் மெலிந்து போன புலி தனக்கொரு குட்டியை வரவழைத்துக் கொடுக்கும்படி மந்திரவாதியை கேட்டது.

உடனே மந்திரவாதி கிராமவாசிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.
“உங்களுக்கு சிறப்பான மாஜிக் ஷோ நடத்தப் போகிறேன். முயல் குட்டிக்குப் பதில் தொப்பியிலிருந்து அதன் இனத்தைச் சேர்ந்த பிராணி ஒன்றை வரவழைக்கப் போகிறேன்” என கூட்டத்தினரை நோக்கி மந்திரவாதி கூறினார்.

தொப்பியைக் கவிழ்த்துவிட்டு சில மந்திரங்களை ஓதினார். சிறிது நேரம் சென்று தொப்பியை தூக்கியதும் பூனைக் குட்டி ஒன்று மியாவ் என கத்திக் கொண்டு தலையை நீட்டியது. கிராமவாசிகளின் சிரிப்பொலியைக் கேட்ட புலி ஆவேசமடைந்தது. புலி மெலிந்து விட்டதால் சப்தம் கூட எழுப்ப முடியவில்லை. மந்திரவாதி மீது ஆத்திரம் அடைந்த போதும் பேராசையால் எற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் புதருக்குள் சென்று மறைந்தது புலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக