வியாழன், 4 ஏப்ரல், 2013

உண்மை



ரவி, மணி இருவரும் நண்பர்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இருவரும் படுசுட்டி பையன்கள்.

ரவியின் மாமா பட்டணத்தில் வேலை செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தார். வரும்போது பரிசுகள் வாங்கி வருவதாக கூறினார்.

ரவிக்கு ஒரே சந்தோஷம். ‘எப்போது ஞாயிற்றுக்கிழமை வரும், மாமா என்ன பரிசு வாங்கி வருவார்’ என்பதே அவனது சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் ரவி, அம்மா நான் கிரிக்கெட் விளையாடச் செல்கிறேன். மாமா வருவதற்குள் வந்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். மணியையும் அழைத்துக் கொண்டு அருகே உள்ள மைதானத்தில் விளையாடச் சென்றான்.

அவர்கள் விளையாடச் செல்லும் வழியில் மாமரத்தில் நிறைய பழங்கள் காய்த்து தொங்குவதைக் கண்டனர்.

‘கல்லால் அடித்து மாம்பழத்தை விழ வைத்து தின்போம்’ என்றான் ரவி. மணி அதை விரும்பவில்லை. ரவி கட்டாயப்படுத்தவே இருவரும் மாமரத்தில் கல்லெறிந்தனர். கிழே விழுந்த மாம்பழங்களை எடுத்து சுவைத்துக் கொண்டே விளையாடச் சென்றனர்.

மாம்பழங்கள் ருசியாக இருந்ததால் விளையாடிவிட்டு திரும்பும்போதும், இருவரும் மாமரத்தில் கல்லெறிந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது கல் பட்டுவிட்டது. உடனே ரவியும், மணியும் ஓட்டம் பிடித்தனர்.

‘யாரும் துரத்துகிறார்களா?’ என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடினார்கள். வீடு வந்து சேர்ந்தபிறகுதான் இருவரும் நிம்மதி அடைந்தனர்.

வீட்டில் மாமா வந்திருந்தார். ரவிக்கு பயம் விலகி சந்தோஷம் தொற்றிக் கொண்டது.

மாமாவிற்கு ரவியின் கால்சட்டை நிறத்தைப் பார்த்ததும், மரத்தில் கல்லெறிந்தது அவன்தான் என்பது தெரிந்தது போனது.

அவர் ரவியிடம் இது பற்றி கேட்டார், ‘என்ன ரவி, கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்தாச்சா? உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். நீ இன்று ஏதாவது தவறு செய்தாயா?’ என்றார்.

ரவி ‘இல்லவே இல்லை’ என்று மறுத்தான். பொய்யாக சத்தியமும் செய்தான்.

உடனே அவனது மாமா, அருகில் நின்ற மணியை அழைத்தார். “நீங்கள் இன்று ஏதாவது தவறு செய்தீர்களா?’ என்றார்.

அவன் உண்மையை ஒத்துக் கொண்டான். ‘ஆமாம் அங்கிள், நாங்கள் மாமரத்தில் கல்லெறிந்து திருடி சாப்பிட்டோம். அப்போது யார் மீதோ கல் பட்டுவிட்டது. உடனே ஓடிவிட்டோம்’ என்றான் மணி.

‘உங்களிடம் கல்லடி பட்டவனே நான்தான்’ என்ற ரவியின் மாமா, உண்மையைச் சொன்ன மணிக்கே, நான் வாங்கிவந்த பரிசு, என்று கூறி விலை உயர்ந்த கைகடிகாரத்தை மணியின் கையில் கட்டிவிட்டார்.

இருவரும், மாமாவிடம் மன்னிப்புக் கேட்டனர். ரவி, ‘இனிமேல் பொய் சொல்ல மாட்டேன்’ என்று உறுதி கூறினான். அவனுக்கு கிரிக்கெட் பந்து வாங்கிக் கொடுத்து, ஆறுதல் படுத்தினார் அவனது மாமா.

கதையின் நீதி: உண்மையே பேச வேண்டும், அதுவே மதிப்பை உயர்த்தும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக