முன்னொரு காலத்தில் ராமாபுரி என்ற ஒரு நாடு இருந்தது. அதை ராஜகம்சன் என்ற அரசன் ஆண்டுவந்தான். மாதம் மும்மாரி பொழிய எல்லாவளமும் பெற்று செழிப்பாக இருந்தது அந்தப் பூமி. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர். கொலை, கொள்ளை என எந்தக் குற்றமும் நடப்பதில்லை. ஏனெனில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து வந்தது. மக்களை நேசிக்கக் கூடிய ராணுவத்தைக் கொண்ட நாடு அது.
ராமாபுரிக்கு அண்டை நாடு தாணடவராயன் ஆளும் விஜயபுரி. அவன் தந்திரமானவன், அதே சமயம் பேராசைக்காரனும் கூட. அவனும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிந்து வந்தான். மக்களை எந்தக் குறையும் இல்லாமல் ஆண்டான். அவனுக்கு ராமாபுரியின் மீது எப்பொழுதும் ஒரு கண் இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.
ஆனால், அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையையும், ராணுவத்தின் வீரத்தையும் கண்டு அவன் மிகவும் யோசித்தான். அந்த நாட்டின் பலமே பொருளாதாரத்தில் தான் இருக்கிறது. அதைக் குலைத்தால் அங்கே மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு...அதையே நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நாம் படையெடுத்து விடலாம் என மந்திரி கூறியதை பல முறை சிந்தித்துப் பார்த்தான்.
அப்போதுதான் திடீரென்று அவனுடைய மனதுக்குள் ஒரு யோசனைப் பிறந்தது. ராமாபுரி மக்கள் வலிமையானவர்களாக இருந்தாலும், மூடநம்பிக்கைச் சேற்றில் மிகவும் ஊறியவர்கள். ஏன் இந்த ஒரு காரணத்தை வைத்து ஏதாவது செய்ய முடியாதா என்று யோசித்தான் தாண்டவராயன். உடனே மந்திரிகளை அழைத்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
ராமாபுரிக்கு சாமியார் ஒருவர் வந்தார். ஒரு கோயில் மண்டபத்தில் அவர் தங்கிக் கொண்டார். புதிதாக சாமியார் வந்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டதும், அந்நாட்டு மக்கள் அலை அலையாய் வந்து அந்தச் சாமியாரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். வெகு விரைவிலேயே அந்தச் சாமியாரின் புகழ் பரவியது.
சாமியாரின் வருகையை அறிந்த ராமாபுரி மன்னன் ராஜகம்சன். அவரை தன்னுடைய அரண்மனைக்கு அழைத்துவர உத்தரவிட்டான். “சிறிது காலத்திற்கு நீங்கள் அரண்மனையில் தங்கி இந்த இடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்” என்று மன்னன் கேட்டுக் கொண்டான். துறவியும் உடனே சம்மதித்தார். ஒரு வாரம் சென்றது. துறவிக்கு ராஜ உபசாரம்தான். அவர் தானாக எதையும் கேட்கவில்லை. அதே சமயம் கொடுப்பதையும் மறுக்கவில்லை. அன்று ஒரு நாள் மன்னன் ராஜகம்சன் துறவியின் அறைக்கு வந்தான்.
அங்கு துறவி சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட மன்னன் “ என்ன காரணம்?” என்று பணிவாகக் கேட்டான். முதலில் வாய் திறக்காத அந்தத் துறவி, மன்னன் சிறிது வலியுறுத்திக் கேட்ட பின்னர் பேச ஆரம்பித்தார்.
“மன்னா! உங்கள் நாட்டை கேடு சூழ்ந்துள்ளது” என்றார்.
இதைக் கேட்ட மன்னன் திகைப்படைந்தான். “என்ன சொல்லுகிறீர்கள்?”
“ஆம் மன்னா! இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆபத்து காத்திருக்கிறது. அவர்களின் உயிர் அவர்களின் கையில் இல்லை” என்றார் துறவி. இதைக் கேட்டதும் மன்னன் அதிர்ச்சியடைந்தான்.
“நீங்கள் கூறுவது வியப்பாகவும், அதிர்ச்சியாவும் உள்ளதே!” என்றான் மன்னன்.
“உன்மை மன்னா! நான் கூறுவது உண்மை. உயிரைப் பறிக்கும் தீய சக்தியின் தற்போதைய இருப்பு எங்குள்ளது என்பதை சக்தியின் அருளால் நாம் கண்டு கொண்டோம். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பச்சை மரத்திலும் அந்த தீயசக்தி குடிகொண்டுள்ளது. வரும் அமாவாசை அன்று அது உயிர் பெற்று வெளியே வரும். மக்கள், படைவீரர்கள் ஆகியோர் அதன் இலக்கு!”
“நம்பவே முடியவில்லையே.”
“நம்பித்தான் ஆக வேண்டும். நான் சொல்வதை சொல்லிவிட்டேன். தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்.”
“எவ்வாறு தடுப்பது?”
“அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. அதற்குள் தீய சக்தி குடியிருக்கும் மரங்களை வெட்டி அழிக்க வேண்டும்.
“அப்படிப்பட்ட மரங்களை எவ்வாறு அடையாளம் காண்பது?
“அடையாளம் காண வேண்டிய அவசியமே கிடையாது. இருக்கும் ஒவ்வொரு மரத்திலும் தீய சக்தியின் இருப்பு உள்ளது.”
“அய்யய்யோ! அப்படி என்றால் ஒவ்வொரு மரத்தையும் வெட்டி ஆக வேண்டுமா?”
“நிச்சயமாக வேறு மார்க்கமே இல்லை. மரம் கூட வேறொன்று நட்டுவிடலாம். ஆனால் மனிதரை...”
“உண்மைதான்! இப்போதே ஆணையிடுகிறேன்.”
படை வீரர்களுக்குத் தகவல் அனுப்பட்டது. அவர்கள் துரிதரீதியில் செயல்பட்டு அனைத்து மரங்களையும் வெட்டினர். மன்னன் துறவிக்கு நன்றி தெரிவித்தான். பரிசு கொடுக்கவும் முனைந்தான். ஆனால் துறவி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாந்தமாக புறப்பட்டுப் போனார். மக்களின் உயிரைக் காப்பாற்ற வந்த அந்தத் துறவியை எல்லோரும் மனதில் நினைத்து வழிபட்டனர்.
அமாவாசை கழிந்தது. எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் விடுகிற அசுத்தக் காற்றை எடுத்துக் கொண்டு தூயக் காற்றை கொடுக்க இப்போது ஒரு மரமும் அந்த நாட்டில் இல்லை. மக்களும் சரி, மன்னனும் சரி இதையெல்லாம் உணரவேயில்லை.
இரண்டு, மூன்று நாளாக ஓய்வு இல்லாமல் வேலை செய்த களைப்பு காரணமாக மக்களும், வீரர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது தான் அது நடந்தது.
வெளியே போர் முரசு ஒலிக்கும் சத்தம் கேட்டது. அரண்மனைக்கு வெளியே வந்து பார்த்தான் மன்னன் ராஜகம்சன். விஜயபுரி நாட்டு கொடி பறக்க ஒரு பெரும்படை திரண்டு வந்திருந்தது. “முன் அறிவிப்பு இன்றியே போர் தொடுக்க தாண்டவராயன் வந்து விட்டானே...அவன் புத்தியே இதுதான்” என நினைத்த மன்னன் அவசரமாக படைகளுக்கு ஆனணயிட்டான். ஆனால், உடல் களைப்பு காரணமாக யாருமே செயல்பட முடியவில்லை.
சிறிது நேரத்தில்... எது நட்க்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது. ராமாபுரியைக் கைப்பற்றினான் தான்டவராயன். மன்னன், மந்திரிகள், படைவீரர்கள், மக்கள் எல்லோருமே அவன் பிடியில். கை விலங்கு பூட்டப்பட்ட ராஜகம்சனைப் பார்த்து தாண்டவராயன் பேசினான்.
“என்ன ராஜகம்சா! நான் அனுப்பிய துறவி நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறார். வலிமையுள்ள மக்களும், படையும் கொண்ட நாடு ராமாபுரி. ஆனால், மூட நம்பிக்கைச் சேற்றில் சிக்கியிருந்தீர்கள். உங்களை அடிமைப்படுத்த அதையே நான் வாய்ப்பாகக் கொண்டேன்”. துறவி இங்கே வந்து நடந்து கொண்டதெல்லாம் நான் வகுத்த திட்டப்படியே. முட்டாள்களே! மரத்தில் தீய சக்தியாவது, அது மக்களை அழிப்பதாவது. இக்கணம் முதற்கொண்டு நீங்கள் எனது அடிமைகள். நான் உத்தரவிடுவதை தட்டாமல் நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
“ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக சீன நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அடுத்து, எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டதோ அதே அளவுக்கு புதிய மரங்கள் நடப்பட வேண்டும்”. என்னுடைய இந்த முதல் உத்தரவை நிறைவேற்றி விட்டு வாருங்கள் என்று அட்டகாசமாய் சிரித்தவாரே கூறினான் தாண்டவராயன். ராஜகம்சன் ஏதும் பேசாது திரும்பி நடந்தான். மக்களும் அவனைப் பின் தொடர்ந்து தலைக்குனிந்து சென்றனர்.
நீதி: மூட நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உண்மை நிலையை உணராவிடில். வாழ்க்கை எனும் காலசக்கரத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக