பூதலிங்கம் பெரும் பணக்காரர். நூற்றி எட்டு வேலி நிலமும், 10 கிரவுண்டுக்கு வீடும் இருந்தது. மந்தை மந்தையாக ஆடுகளும், மாடுகளும் வளர்ந்தன. கஜானா அறையில் பொன்னும், பொருளும் நிரம்பி கிடந்தது.
பத்துவிரல் மோதிரம், பகட்டான ஜிப்பா, பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, தங்க கைக்கடிகாரம் என செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார் பூதலிங்கம். எடுப்பான பதாகை, கைத்தடியுடன் கம்பீரமாக நடைபோடுவது அவரது அடையாளம்.
ஊரில் திருமண விழா, காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பெயர் சூட்டு விழா, புதுமனை புகு விழா என என்னென்ன சுபகாரிய விழாக்கள் வருகிறதோ? அனைத்து விழாக்களிலும் குடும்ப சகிதமாக கலந்து கொள்வது பூதலிங்கத்தின் வழக்கம். அங்கு அவருக்கு முதல் மரியாதை வழங்கப்படும். அவரும் விழா முடியும் வரை இருந்து பொன் பொருளை அள்ளிக் கொடுத்து வாழ்த்திவிட்டு வருவார்.
ஆனால் துக்கவீடு என்றால் பூதலிங்கம் குடும்பத்தினருடன் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் இரண்டு நிமிடத்திற்கு மேல் இருப்பதில்லை. தனது கைத்தடியை அவர் வந்ததன் அடையாளமாக வைத்துவிட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீடு திரும்பி விடுவார்.
இறந்தவர் வீட்டிற்கு தான் வந்து விட்டதாக எல்லோரும் கருத வேண்டும் என எண்ணிக் கொள்வதற்காக அவர் இப்படி கைத்தடியை வைத்துவிட்டு செல்வார்.
ஒருநாள் பூதலிங்கத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத் திணறல் அதிகமானதால் டவுனில் உள்ள பெரியமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதய ஆபரேஷன் நடந்தது. ஆனால் திடீரென்று அவரது உயிரும் பிரிந்தது.
அவரது மனைவியும், மகனும் அழுது புரண்டனர். பூதலிங்கம் பெரும் தனவந்தர் என்பதால், இறப்பு செய்தி சுற்றி உள்ள அனைத்து ஊர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே மாலையும், கையுமாக வந்தனர். பலர் பூதலிங்கம் தங்கள் வீட்டுதுக்க நாளில் விட்டுச் சென்ற கைத்தடியோடு வந்தனர். அதை பூதலிங்கம் உடல் அருகே வைத்துவிட்டு சில நிமிடம்கூட நிற்காமல் திரும்பிச் சென்றனர்.
இறுதிச் சடங்கு நேரம் நெருங்கியது. ஆட்கள் கூட்டம் இல்லாமல் பெரும் கைத்தடி குவியலே நிறைந்திருந்தது. பூதலிங்கத்தின் மனைவியும், மகனும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
“வாழ்வுக்கு போகலைனாலும், சாவுக்குப் போகணும்னு சொல்வாங்க. சாவுக்கு போற இடத்துல கடைசிவரை இருந்து காரியம் நிறைவேற்றிவிட்டு வரணும். ஆனால் பெரிய மனுஷன்னு காட்டிக்கிறதுக்காக கைத்தடியை விட்டுவிட்டு வந்தாரு. இன்னிக்கு அவரது இறுதி நாளுக்கும் கைத்தடிகள் தான் வந்திருக்கு. கைத்தடிகளா காரியம் நடத்தப்போகுது?. உங்க அப்பாவுக்கு நடந்த இந்த நிலைமையை நினைத்தாவது நீ திருந்தி வாழ்.
போகும்போது பொன் பொருளை கொண்டு செல்ல முடியாது. நல்ல பெயர் சேர்த்து வைத்திருந்தால் ஊரார் நம் புகழ்பாடி தூக்கிச் செல்வார்கள். இதை மனதில் வைத்துக் கொள்” என்று தன் மகனிடம் கூறினாள் பூதலிங்கத்தின் மனைவி.
மகன் தன் தந்தையின் இறுதி சடங்கு வேலைக்கு ஆட்களுக்கு கூலி பேசி காரியத்தை நடத்தினான்.
அதுவரை தந்தையின் தடம் பற்றி நடந்தவன், அவரது இறப்பிற்குப் பிறகு விசால எண்ணம் கொண்டவனாகவும், ஏற்றத்தாழ்வு எண்ணாதவனாகவும் மாறினான். பண்ணையாரின் மகன் என்று எண்ணாமல் மக்களோடு மக்களாக வாழத் தொடங்கினான்.
கதையின் நீதி: விதைப்பதுதான் முளைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக