செவ்வாய், 2 ஏப்ரல், 2013

அவநம்பிக்கை

முத்துவும், மாணிக்கமும் நண்பர்கள். நகை வணிகம் செய்பவர்கள். ஒரு முறை மன்னர் மகள் திருமணத்திற்காக நகைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.

காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்த போது மழை பொய்யத் தொடங்கியது.

அருகே இருந்த பாழடைந்த மண்டபத்திற்குள் ஓடி ஒதிங்கினர்.

மழை நேரமாக நேரமாக வலுத்துக்கொண்டே போனது. நிற்பதாகத் தெரியவில்லை. பொழுது நன்றாக இருட்டிவிட்டதால் இனி மழை நின்றாலும் காட்டிற்குள் பயணிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அந்த மண்டபத்திலேயே இரவைக் கழித்துவிட்டு காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர்.

கொண்டுவந்த உணவை உண்டனர். பசியாறியபின் படுக்கைக்குத் தயாரானார்கள்.

வணிகர் முத்து யாரையும் நம்பாதவர்.

நண்பரே ஒரு விஷயம் கூறுகிறேன் கேளுங்கள் ‘என்னிரு கைகளையும் முன்பக்கம் கட்டி, மறுமுனையை உங்கள் இடையில் கட்டிக் கொள்ளுங்கள். அதேபோல் உங்கள் இருகைகளையும் முன்பக்கம் கட்டி என் இடையில் (இடுப்பில்) கட்டிக் கொள்கின்றேன்’ என்றார்.

‘எதற்கு இப்படி செய்ய வேண்டும்’ என்று புரியாமல் கேட்டார் மாணிக்கம்.

‘மனித மனசு குரங்கு மாதிரி. நான் தூங்கிவிட்டால் என் நகைகளை நீங்கள் திருடிக் கொண்டு போகலாம். அதேபோல் உங்கள் நகைகளை நானும் திருடிக் கொண்டு போகலாம் இல்லையா?’ என்றார் முத்து வணிகர்.

‘வாழ்க்கை என்பதே நம்பிக்கையில் வாழ்வது தானே, நல்ல நட்புக்கு இது அசிங்கம் இல்லையா?’ மாணிக்கம் கேட்டார்.

‘வாய்ப்புக் கிடைக்காதவரை எல்லோருமே நல்லவர்கள்தான். வாய்ப்புக் கிடைத்தால் நல்லவரும் கெட்டவனாக மாறித்தான் தீருவார். இதற்கு நீயும் நானும் விதிவிலக்கல்ல’ முத்துவணிகர் தனது கருத்தில் விடாப்பிடியாக நின்றார்.

மாணிக்கம் தனக்குள் வருந்திக் கொண்டார். தப்பானவரோடு நட்பு பாராட்டி வருந்திருக்கிறோம் என புரிந்து கொண்டு, ‘சரி, நீர் சொல்வது போல கைகளை கட்டிக் கொள்வோம்’ என சம்மதித்தார்.

ஒருவர் கையை மற்றவர் கட்ட, கட்டப்பட்ட கைகளுடன் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நடு இரவில் திருடன் அங்கு வந்தான். ‘மறியாதையாக நகைப் பொட்டிகளை என்னிடம் ஓப்படைத்து விடுங்கள், இல்லை உயிரை விடவேண்டி இருக்கும்’ என்று மிரட்டினான்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால், திருடன் ஒருவன் என்றாலும் அவனை எதிர்த்துப் போராட முடியாமல் தவித்தனர். திருடன் நகைகளை எடுத்துச் செல்ல அமைதி காத்தனர்.

‘உன் அவநம்பிக்கையால் நடந்த கொடுமையைப் பார்த்தாயா? நம்மையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. நம் உடமைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. உன் நட்பே இனி வேண்டாம்! என்று மன்னரிடம் முறையிட தனியாக நடந்தார் மாணிக்கம்.

தன் தவறை உணர்ந்து தலைமேல் கைகளை வைத்துக் கொண்டு அழத் தொடங்கினார் முத்து வணிகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக