செவ்வாய், 2 ஏப்ரல், 2013

அறிவாளியும் முட்டாள் பூதமும்.



பரஞ்ஜோதி... களைஞானம் கொண்ட வீர இளைஞன். அவனுக்கு தன் பெயர் நிலைக்கும்படி யான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த எண்ணம் அவனுள்  சிறு வயதிலிருந்தே... இருந்து வந்தது. ஆனால், ஏழையான அவனால் பெரியதாய் என்ன சாதித்து விட முடியும்.

ஆனாலும் அவன் மனம் தளரவேயில்லை, பணத்தால் மட்டும் தான் சாதனைகள் செய்ய முடியுமா? என்ன. உடல் உழைப்பு, அறிவு  இவை இரண்டாலும் செய்ய முடியாதது என்ன இருக்குகிறது என்ற நம்பிக்கையோடு... காலம் எதிர்பார்த்து காத்திருந்தான்.

அவனுக்கிருந்த ஒரே ஒரு குறை என்றால்...அது அவசரபுத்திதான். தேவையில்லாமல் வம்பில் எதிலாவது போய் மாட்டிக் கொண்டு, பின் தன் புத்திசாலித்தனத்தை பயன் படுத்தி தப்பி வருவான். அது அவன் வாழ்கையில் சர்வ சாதாரணமாய் இருந்தது.

இந்த ஊரிலிருந்தால்... எதையும் சாதிக்க முடியாது என, ‘தலைநகரம் நோக்கி கிளம்பி விட்டான். அரசனை எப்படியாவது சந்தித்து, தன் வீரதீர பராக்கியத்தைக் காட்டி, ஏதாவது ஒரு வேலையை முதலில் சம்பாதித்துக் கொள்ளவேண்டும். பின் தன் திறமை, புத்திசாலிதனம்  இவை இரண்டையும் காட்டி உயர் பதவிக்கு தானகவே போய்விடலாம் என கனவு கண்டான்.

தலைநகரம் சென்ற அவனால் அரசனை சந்திக்கவே முடியவில்லை. அவர் ஏதோ நோயில் கிடப்பதாக கேள்விப்பட்டான். கையிலிருந்த சொற்ப பணமும் கரைந்து போக, சாப் பாட்டு செலவுக்கே வழியில்லாமல் திண்டாட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. திரும்பி தன் ஊருக்குச் செல்லவும் பணமில்லை. இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே என்ற கவலையோடு ஊரை சுற்றிவந்த அவன், அந்த நாற்சந்தியில் ஒரு சிம்மாசனம் இருப்பதும், அதன் அருகில் பால் பழம் என பலவிதமான உனவுப் பொருள்கள் இருப்பதையும் அதன் எதிரே ஒரு அறிவிப்பு பலகை இருப்பதையும் கண்டான்.


அவனுக்கு இருந்த பசிக்கு , ‘அதில் உள்ளதை படிக்கும் அளவு பொறுமை எல்லாம் அவனுக்கில்லை’. அதனை காவல் செய்த காவலர்கள், ‘என்ன படித்தாயா. உனக்கு சம்மதமா... என கேட்கவும், சம்மதம்... சம்மதம் என ஆவலாய் அங்கிருந்ததை சாப்பிடத் தொடங்கினான். பாதி வயிறு நிறைந்ததும், அங்கிருந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு ரசித்து சுவைத்து அதைக் கொண்டா இதைக் கொண்டா என கேட்டு வாங்கி சாப்பிடத் தொடங்கினான்.

பெரியதாய்... அறிவிப்பு பலகையில் என்ன இருந்து விடப்போகிறது, என்ற எண்ணம் அவனுக்கு. வயிறு புடைக்க சாப்பிட்டு...ஏப் என ஏப்பம் விட்டபடியே அசால்ட்டாய் அறிவிப்பு பலகையை பார்த்தவனுக்கு, வியிற்றை கலக்கியது. ‘ஆஹா... வசமா... மாட்டிக்கிட்டோமோ... பூதம் தூக்கிட்டுப் போயிருக்கும். இளவரசியை மீட்டுவர வேண்டும். போக மாறுத்தால் அவன் தலை வெட்டப்படும்’ என அறிவிப்பு பலகையில் இருந்தது.

‘ஆஹா... பயப்படாதே. பரஞ்ஜோதி, உன் திறமையை நிரூபிக்க இதோ. ஒரு அற்புத வழி, இளவரசியை மீட்டு வந்தால், அவளோடு இந்த நாட்டின் சிம்மாசனமும் கிடைக்கும். ‘புத்தியே... நீ உன் வேலையைக் காட்டு...’ என நினைத்து தன்னைத்தானே தயார் செய்து கொண்டான்.

இருந்தாலும் பூதம் என்றால் பயமானகத்தானே இருக்கும். அவனும், அவனைப் போலவே பசிக்கு சாப்பிட்டு பின் மாட்டிக் கொண்ட பலரும் பூதம் வசித்த அந்த காட்டில் கொண்டு வந்து விடப்பட்டனர்.

காட்டுக்கு வெளியே.. காவலர்கள் யாரும் தப்பி ஓடிவிடாதபடி காவல் இருக்க, பரஞ்ஜோதி தப்பும் வழியில்லை என உறுதியாய் தெரிந்து கொண்டு, ‘பூதத்தை எப்படி எதிர் கொள்வது என யோசிக்கத் தொடங்கினான். பூதம் எப்படி இருக்குமோ. எங்கிருந்து வந்து தாக்குமோ என பயந்தபடியே அவர்கள் அனைவரும் செல்ல, பரஞ்ஜோதி மட்டும் தன் பயத்தை வெளிக்காட்டாமல் திடமாய் இருப்பது போல் பாவனை செய்தான். அவன் நெஞ்சுக்குள்ளும் திக்திக்கென பயம் இருக்கவே செய்தது.

திடீரென.. காடே அதிரும் படியாய் சத்தம் வர, அத்தனை பேரும் திசைக்கு ஒருவராய் சிதறி ஓடினர். பரஞ்ஜோதி இன்னது என யோசிக்கும் முன்னால் பூதம் அவன் முன் வந்து விட்டது.

பூதத்தின் தோற்றம் அவன் அடி வயிற்றை கலக்கியது. தன் உடன் வந்தவர்களை அது பிடித்து வெள்ளரிக்காய் சாப்பிடுவது போல் சாப்பிடத் தொடங்க, ‘டேய்.. பரஞ்ஜோதி . இன்னியோட முடிஞ்சுதுடா உன் கதை’ என மனதுள் நினைத்தபடியே... பார்வை தெரியாதவன் போல் கைகளால் துலாவிக் கொண்டு பூதம் நின்ற இடம் நோக்கி, “என்ன சத்தம், யார் அது.. எனக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவர்கள் எங்கே?” என பூதத்திடமே... கேட்டான். பூதம்.. அவனை பார்த்து, ‘அடக் குருடன். இவன் எங்கு போய் விடப்போகிறான். மற்றவர்களை முதலில் பிடித்து திண்போம் என மற்றவர்களை தேடிப் போனது.

‘அப்பாடா...’ ஆண்டவனே உனக்கு நன்றி. என நிம்மதி கொண்டவனாய், வேகமாய் பூதத்தின் இருப்பிடம் போய், இளவரசியைக் கண்டு, ‘தான் வந்திருக்கும் விவரம் கூறினான்’.

பூதம், வீடு வந்ததும், ‘அடேய் குருட்டுப் பயலே... நீ இங்க தான் இருக்கியா’ என கேட்டது.

அப்பொழுது பரஞ்சோதி, விறகு பொறுக்கி வந்து இளவரசிக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். ஏன் ஐயா, இப்படி கத்துகிறாய். எனக்கு கண்தான் தெரியாதே. காது நன்றாகவே கேட்கும். நீ இப்படி சத்தம் போட்டு பேசினால்  உன்னை யாருக்குதான் பிடிக்கும். நீ சரியான முரடனாக இருப்பாய் போல் தெரிகிறதே. ஆனால் உன் மனைவி ரொம்ப சாது. ‘எனக்கு இங்கு வேலை போட்டு கொடுத்திருக்கிறாள்’ என்றான் நயமாய்.

இளவரசியை... தன் மனைவி என சொல்லக் கேட்ட பூதம் மகிழ்ந்தது. ‘இவனை உடன் வைத்துக் கொண்டால் இளவரசியின் மனதை மாற்ற ஏதாவது ஐடியா கொடுப்பான்’ என பூதமும் அவனை வேலை செய்ய அனுமதித்தது.

தண்ணீர் எடுக்கவும், விறகு பொறுக்கவும், காட்டின் பல பகுதிக்குப் போன பரஞ்ஜோதி ஓர் இடத்தில் கிடுகிடு பள்ளம் இருப்பதை கண்டான்.

‘உடனே பூதத்தை ஓழிக்க வழி ஓன்றை இள வரசியிடம் கூறினான்’. அவளும் அதற்கு ஒப்புக்கொண்டாள்.

பூதம் வந்ததும். பூதமே நான் உன்னை மணம் செய்து கொள்ள சம்மதிக்கிறேன். ‘ஆனால் ஒரு நிபந்தனை. இந்த குருடனோடு நீ ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும். இவன்... இந்த குருடன், ஓட்டப்பந்தயத்தில் ஜம்பவான் என்கிறான். அவனை நீ ஜெயித்து அவன் கர்வத்தை ஒடுக்க வேண்டும் சரியா’ என்றாள்.

பூதத்திற்கு இது தன் மானப் பிரச்சனையாகப் போனது. ‘கூடவே இந்த குருட்டுப் பயல் என்ன ஓடிவிடப்போகிறான்’ என நினைத்தது.

யார் நிற்கமால் ஓடிக் கொண்டே இருக்கிறார்களோ, அவர்களே ஜெயித்தவர் என்று முடிவும் செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி பரஞ்ஜோதி ‘அந்த பள்ளத்தின் அருகே சட்டென நின்று விட. ‘வேகமாய் ஓடி வந்த பூதம் கிடுகிடு பள்ளத்தில் விழுந்து உயிரை விட்டது. பிறகென்ன.. இளவரசி மீட்கப்பட்டு, பரஞ்சோதி இப்போது மன்னருக்கு மருமகன்.

நீதி: எந்த சூழ்நிலையிலும் சமயோசிதமாக செயல் பட்டால் வெற்றி நமக்கென்று நிச்சயிக்கப் படுகின்றது, என்பதை இந்த கதையின் மூலம் அறியலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக