செவ்வாய், 2 ஏப்ரல், 2013

இன்னொரு உலகம்


அகிலாவின் தந்தை மிகப் பெரிய வியாபாரி. அவளது அம்மா, ஜமின்தார் பரம்பரை, எனவே அகிலாவின் வீட்டில் செல்வச்செழிப்புக்குப் பஞ்சம்மில்லை. கைத்தட்டினால் எல்லாம் வந்துவிடும்.

அன்று அகிலாவின் பிறந்த நாள். மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். வீடு முழுக்க பரிசுப் பொருட்களுடன் உறவினர்கள் கூட்டம். கேக் வெட்டி கோலாகலமாய் கொண்டாட்டம் முடிந்தது.

உறவினர்கள் எல்லாம் சென்றுவிட்டனர். அகிலாவும் அம்மாவும் பரிசுப்பொருள்களை பிரிக்க ஆரம்பித்தனர். அம்மா பரிசுப்பொருளில் கவனமுடன் இருக்க, அகிலா மெல்ல மெல்ல நழுவி அவளது அறைக்குச் சென்றாள் பிறந்த நாளுக்குப் பெற்றோர் வாங்கிக்கொடுத்த நவரத்தினமாலையை அணிந்து கொண்டு கண்னாடியில் அழகுபார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. உடனே நகையை கைப்பிடிச் சுவற்றில் வைத்துவிட்டு திரும்பினாள். அங்கே கண்களை அகலப் பரப்பியவாறே ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். ஏழ்மைக் கோலத்திலும் திருத்தமாய் இருந்தாள்.

“ஏய்...யார் நீ?”
“என் பேரு கண்ணம்மா...வழிதவறி இங்கே வந்துட்டேன்.”
“திருட வந்துட்டுப் பொய் சொல்றியா?”
முகம் சுழித்தவாறே அவளை மிரட்டினாள் அகிலா.
சிறுமியின் கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்டியது.

“நான் ரொம்ப நல்ல பொண்ணு. எங்கப்பா உங்க தோட்டத்தில் தண்ணி பாய்ச்சுற வேலையைச் செய்யறார். அம்மாவுக்கு உடம்பு சரியில்லே. அதனால அப்பாவுக்கு நான் சாப்பாடு கொண்டு வந்தேன்.” அழுதபடியே அச்சிறுமி வெளியேறினாள்.

நவரத்தினமாலையை அணிந்து ரசித்துக் கொண்டிருக்கும்போது கெடுத்துவிட்டாளே என்று அகிலாவுக்கு எரிச்சலாய் இருந்தது. திரும்பிப் பார்த்தாள். அவளுக்குத் திக் என்றிருந்தது. காரணம், அவள் வைத்திருந்த இடத்தில் நவரத்தின மாலையைக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மேலே பார்த்தாள். ஒரு சிட்டுக்குருவி மாலையை வாயில் கொத்திக்கொண்டு பறந்துசொன்று கொண்டிருந்தது.

குருவியின் பின்னே தலைதெறிக்க ஓடினாள் அகிலா. அவள் போட்டிருந்த உயர்ரக செருப்பு காலைக் கடித்தபோதும் மூச்சு வாங்கிக் கொண்டே ஒடினாள். நீண்ட தொலைவு கடந்த பிறகு ஒர் ஓட்டு வீட்டின் மேல் மாலையைப் போட்டுவிட்டு பறந்துவிட்டது.

அகிலா சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அந்த வீட்டை அடைந்தாள். கதவு ஒருக்களித்திருக்க, மெல்ல அடியெடுத்து உள்ளே போனாள். வீட்டின் மூலையில் ஓர் அம்மா நார்க்கட்டிலில் படுத்திருந்தாள். ஒரு சிறுமி ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் எழுந்துசென்று அடுப்பில் ஏதோ செய்தாள். பிறகு ஒரு புத்தகத்தைக் கையில் கையில் வைத்துக்கொண்டுப் படிக்க ஆரம்பித்தாள். அவளது முகத்தை அகிலா உற்றுநோக்கினாள். அது கண்ணம்மா.

“நாளைக்குப் பரீட்சையா கண்ணு? பாவம்மா நீ... என்னால உனக்குக் கஷ்டம்...” அம்மா இருமிக் கொண்டே சொல்ல கண்ணம்மா அருகில் சென்று தாயைத் தட்டிக்கொடுத்தாள்.

“ஒண்ணுமில்லம்மா...உனக்கு உதவி செய்றது எனக்கு சந்தோஷம்தாம்மா. நா எப்படியும் படிச்சுடுவேன். நீ கவலைப்படாதே.” போர்வையைப் போர்த்திவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.

அகிலா தனது நிலையையும் கண்ணம்மாவின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். கண்களில் நீர் கசிந்தது. நான் ஏன் இவர்களைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்கவில்லை? கடவுள் தான் குருவி வடிவில் வந்திருக்கிறார். மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டாள். இனி கண்ணாம்மாவுக்குச் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

ஆனந்தத்துடன் கண்ணம்மாவை நோக்கிச் சென்றாள் அகிலா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக