செவ்வாய், 2 ஏப்ரல், 2013

என் பெயர் என்ன?

எச்சமு பாட்டி தினம் மத்யானம் வெயில் வேளையில் நல்ல தயிர் சாத்தைப் பிசைஞ்சு வச்சுன்டு, சச்சு, கோண்டு, சீனு, பத்மா எல்லோருக்கும் கையில் அன்போட உருண்டை பிடிச்சுப் போடுவா.

ஆனா வெறுமே சாதம் மட்டும் போட்ட குழந்தேள் சாப்பிட மாட்ட. கதையும் சொன்னாதான் சாதம் இறங்கும்.


அன்னிக்கும் கோண்டு கேட்டான். “பாட்டி... இன்னிக்குப் பெர்..ரீய கதையா, வேடிக்கைக் கதையா சொல்லு பாட்டி”.

ஒரு ஊர்ல ஒரு ஈ இருந்தூச்சாம். அதுக்குத் திடீர்னு தன்னோட பேர் மறந்துபோயிடுச்சாம். பக்கத்து மாட்டுக் கொட்டில்ல, கொழு கொழு-ன்னு அழகான கன்னுக்குட்டி நின்னுட்டிருந்துச் சாம். அதுகிட்டப் போயி. “கொழு கொழு கன்றே! என் பெயர் என்ன?”- ன்னு கேட்டுச்சாம். உடனே கன்னுக் குட்டி. “எனக்குத் தெரியாது... என்னை ஈன்ற தாய்கிட்டேப் போய்க் கேளு”- ன்னு சொல்லுச்சாம்.

உடனே அதோட தாயான பசுமாட்டுகிட்டேப் போய். “கொழு கொழு கன்றே! கன்றின் தாயே! என் பெயர் என்ன?”. –ன்னு கேட்டுச்சாம். உடனே அந்தப் பசு. “எனக்குத் தெரியாது. என்னை மேய்க்கும் இடையன்கிட்டே கேளு” –ன்னு சொல்லி அனுப்பிடுச்சாம்.

ஈ உடனே இடையனிடம் போய் அதே கேள்வியைக் கேட்டுச்சு. இடையனோ. “எனக்குத் தெரியாது. என்கையில் இருக்கும் கோலிடம் (கம்பு) கேளு” – ன்னு சொன்னான்.

கோல்கிட்டேப் போன ஈ, “கொழு கொழு கன்றே! கன்றின் தாயே! தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக்கோலே! என் பெயர் என்ன” –ன்னு கேட்டது. “எனக்குத் தெரியாது. நான் வளர்ந்த மரத்திடம் கேளு” –ன்னு பதில் சொல்லுச்சு கோல்.

மரத்துக்கிட்ட பறந்து போச்சு ஈ. மேலே சொன்ன மாதிரியே மரத்திடம் கேட்டது. மரம் உடனே. “எனக்குத் தெரியாது. என் கிளையின் மேல் நிற்கும் கொக்கைக் கேளு” –ன்னு சொல்லிடுச்சி.

கொக்குக்கிட்ட போச்சு ஈ “கொழு கொழு” –ன்னு ஆரம்பிச்சு. “மரத்தின் கிளைக் கொக்கே... என் பெயர் என்ன?” –ன்னு முடிச்சது. “எனக்குத் தெரியாது... நான் வசிக்கும் குளத்திடம் போய்க் கேளு” –ன்னு சொல்லுச்சு கொக்கு.

ஈ ரொம்ப வருத்தப்பட்டுச்சு. ‘ச்சே! யாருக்குமே தெரியலையே!’ –ன்னு புலம்புச்சு. ‘சரி... குளத்தைக் கேட்டுப் பாப்போம்’ –ன்னு கேட்டுச்சு. “எனக்குத் தெரியாது. என்னுள்ளே வசிக்கும் மீன் கிட்டே கேட்டுப் பாரு” –ன்னு சொல்லிடுச்சு.

மீன்கிட்டப் போன ஈ. “எல்லாரும் தெரியாது-ங்கிறாங்க.. நீயாவது சொல்லேன்..” –ன்னு கேட்டது. “என்னனைப் பிடிக்கும் வலையனிடம் கேளு” –ன்னு சொன்னது மீன்.

வலையன்கிட்டேப் போன ஈ, இது வரை தான் கேட்ட பேர்களை எல்லாம் வரிசையாகச் சொல்லி. “யாருக்குமே தெரியலையாம்! கொழுகொழு கன்றிலேர்ந்து. குளத்திலேயிருக்க மீன் வரை கேட்டுட்டேன்.. உன்னைக் கேக்கச் சொன்னாங்க... என் பெயர் என்ன” –ன்னு பாவமாக் கேட்டுச்சாம். “எனக்குத் தெரியாதே!” –ன்னு சொன்ன வலையன். வேணா என் கையிலிருக்க மீன் சட்டியைக் கேளு” –ன்னு சொன்னானம்.


சட்டியைக் கேட்டுச்சாம் ஈ. அந்தச் சட்டி, ‘எனக்குத் தெரியாது’ –ன்னு சொல்லி. ‘என்னைப் பண்ணிய குயவன்கிட்டே கேளு’ –ன்னு சொல்லிடுச்சாம்.


குயவன் கிட்டே கேட்டது ஈ. அவன் ‘என் கையிலேர்க்க மண்ணைக் கேளு’ –ன்னானாம்.

ஈ வந்து மண்ணைக் கேட்டுச்சு. மண்ணும் “எனக்குத் தெரியாது... என் மேல் வளர்ந்திருக்கும் புல்லைக் கேளு” –ன்னு சொல்லுச்சு.

‘புல்லே. புல்லே என் பெயர் என்ன?’ –ன்னு அலுத்துப் போய் ரொம்ப பரிதாபமாக் கேட்டுச்சு ஈ. “எனக்கு என்ன தெரியும்? என்னைத் தின்னும் குதிரையிடம் கேளு” –ன்னு சொல்லுச்சு புல்லு.

ஈ –க்கு அழுகையே வந்துவிட்டது. பகவானே! இப்படி அலைய வடுறாளே! என் பேர் இப்படியா மறந்துபோகும்!” –னு அலுத்துக்கிட்டே குதிரைகிட்டே போச்சு ஈ. முதல்லேந்து ஆரம்பிச்சு, எல்லாம் சொல்லி, “புல்லைத் தின்னும் குதிரையே என் பெயர் என்ன?” –ன்னு கேட்டுச்சு. குதிரைக்கு ஈயைப்பார்த்து சிரிப்பாக வந்துச்சாம். தன்னோட பல்லைக் காமிக்சு, ‘ஈ...ஈ...’ –ன்னு பெரிசா சிரிச்சுச்சாம் குதிரை.


இதைக் கேட்டதும் ஈ –க்கு சந்தோசம் தாங்கலை. குதிரைக்கு ஒரு முத்தம் குடுத்து. “என் பெயர் ஈ... என் பெயர் ஈ...” –ன்னு ஜாலியா சொல்லிண்டே பறந்துடுச்சாம்.

கதையும் முடிஞ்சது.

  


1 கருத்து: