வெள்ளி, 12 ஏப்ரல், 2013

பிடிவாதம்

ரேவதி நன்றாகப் படிக்கும் மாணவி, பிறர் தன்னிடம் ஒப்படைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைசாலி சிறுமி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள்.

ஆனால் ரேவதியின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. ரேவதியின் அம்மா, அப்பாவிற்கு அவளது பிடிவாதம் பெரிய தலைவலியாக இருந்தது. உடை, பொம்மை, பரிசுப் பொருள் எது கேட்டாலும் உடனே வாங்கி தரவேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.

நாளைய தினம் ரேவதியின் பிறந்தநாள். வெகு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரவேண்டும் என்று அடம்பிடித்தாள்.

ரேவதியின் அம்மாவும், அப்பாவும் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் இங்கே இருக்கணும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு’ என்று கட்டளையிடுவதுபோல் கூறிவிட்டுச் சென்றாள்.

ரேவதியின் பெற்றோர் என்ன சய்வதென்று தெரியாமல் விழித்தனர்.

மாலையில் பள்ளி முடிந்ததும் ரேவதி  வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அருகில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க?” என்றாள்.

“நீதான், எல்லாரும் டூர் போறாங்க... என்னை அனுப்ப மாட்டீங்களான்னு கேட்ட இல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும்.’ என்றார்.

“இல்லேப்பா நான் டூர் போகலை. அடுத்தவாட்டி போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா” என்றாள் அந்த வீட்டுச் சிறுமி.

“இல்லைங்க, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். பண்ணைக்காரர் தோடத்திலே வேளைக்கு ஆள் கூப்பிட்டிருக்காங்க. நான் ஒருவாரம் வேலைக்குப்போறேன். கிடைக்கிற பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சிரியாக இருக்கும்” என்றாள் அந்த சிறுமியின் அம்மா.

இதை பார்த்துக் கொண்டிருந்த ரேவதி ஆச்சிரியப்பட்டாள். ‘ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கிறாள். ஒரு அம்மா, தன் குழந்தைக்காகவும், கணவருக்காகவும் வேலைக்குப் போகிறேன் என்கிறார். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதால் அவர்கள் குடிசையில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது’ என்று எண்ணினாள்.

ரேவதி வீட்டிற்குச் சென்றதும் அவளது பெற்றோர் என்ன சொல்லப்போகிறாளோ என்று தயங்கிக் கொண்டிருந்தனர். “ரேவதி...” என்று அவர்கள் வாயெடுக்க, “அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா அடுத்த பொறந்த நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று கூறியவளைப் பார்த்து வியப்படைந்தனர் அவளது பெற்றோர்.

தனது பிடிவாத குணத்தை அழித்த மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் ரேவதி.

3 கருத்துகள்:

 1. வணக்கம்...

  உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  Visit : http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

  பதிலளிநீக்கு
 2. அன்புடையீர்,

  உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

  http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

  தங்கள் தகவலுக்காக!

  நட்புடன்

  ஆதி வெங்கட்
  திருவரங்கம்

  பதிலளிநீக்கு
 3. நல்ல கருத்தை சொல்லும் கதை
  வாழ்த்துக்கள்
  http://www.malartharu.org/2014/01/vikatan-viruthukal.html

  பதிலளிநீக்கு