காட்டு ராஜாவான சிங்கத்திற்கு திடீரென்று உடல்நலம் மோசமானது. வேட்டையாடக்கூட செல்ல முடியாமல் படுத்த படுக்கையானது.
இதையறிந்த விலங்குகள் ஒவ்வொன்றாக வந்து நலம் விசாரித்து சென்றது. ஓநாய் ஒன்று சிங்கத்தின் கூடவே இருந்து பணிவிடை செய்து வந்தது. அந்த ஓநாய்க்கு அங்குள்ள நரி ஒன்றுடன் பகை இருந்தது.
பக்கத்து காட்டுக்குப் போயிருந்த நரிக்கு, சிங்க ராஜாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பது தெரியாது. அதனால் அது ராஜாவை நலம் விசாரிக்க வரவில்லை.
எனவே ஓநாய், நரியைப் பற்றி சிங்கத்திடம் கோள் மூட்டியது. ‘சிங்க ராஜா, உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்தும், அந்த நரிப்பயல் உங்களை வந்து பார்க்க வில்லை. இனி நான்தான் காட்டுக்கு ராஜா என்று மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு திரிகிறானாம். என் காதிற்கு எட்டிய செய்தியை உங்களிடம் சொல்லிவிட்டேன். அவனை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று போட்டுக் கொடுத்தது.
நரி, சொந்த காட்டிற்குத் திரும்பிய பிறகுதான், சிங்கத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விவரத்தை அறிந்தது. உடனே சிங்கராஜாவைப் பார்க்கப் புறப்பட்டது.
நரி வருவதைக் கண்ட ஓநாய், ‘சிங்கராஜா, அந்த நரிப்பயல் விருகிறான். அவன் திமிரை இப்போதே அடக்கி வையுங்கள், இல்லாவிட்டால் இன்னும் அதிகமாக வாலாட்டுவான்’ என்று சிங்கத்தை சீண்டிவிட்டது.
சிங்கத்திற்கு பயங்கர கோபம் வந்தது. சினத்துடன் கர்ஜித்துக் கொண்டு, ‘எனக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும்கூட என்னைப் பார்க்க வராமல் அப்படி உனக்கு என்ன வேலை? நான் தளர்ந்து போனதும் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாயாமே....’ என்று உறுமியது.
ஒநாய், ஏதோ பற்றவைத்திருப்பதை உணர்ந்து கொண்ட நரி, ‘இல்லை ராஜா. உங்கள் உடல் நலம் பெற என்ன வழி? என்றுதான் பக்கத்து காட்டு வைத்தியரிடம் சென்று விசாரிக்க போனேன்.
அதான் தாமதத்திற்கு காரணம்’ என்றது நரி.
‘ஓ....அப்படியா...அவர் என்ன வைத்தியம் சொன்னார்?’ என்று கேட்டது சிங்கம்.
“ஒரு ஓநாயின் தோலை எடுத்துப் போர்த்திக் கொண்டால், உங்களுக்கு நடுக்கமும், நோயும் தீர்ந்துவிடும் என்று வைத்தியர் சொன்னார்’ என்றது நரி.
அடுத்த நிமிடம் சிங்கத்தின் பார்வை ஓநாய் மீது படிந்தது. கோள் மூட்டிய ஓநாய் பலியிடப்பட்டது. அதன் தோலை சிங்கம் போர்த்திக் கொண்டது.
‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பார்கள். கெட்டப் புத்திக்காரனுக்கு இப்படித்தான் கேடு விளையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக