வெள்ளி, 5 ஏப்ரல், 2013

விடியல்

அது ஒரு ஊரின் ஒதுக்குப்புறமான பகுதி அந்த பகுதியில் மரம் ஒன்று அடர்ந்து செழித்து இருந்தது. அந்த மரத்திலே நிறைய காகங்கள் கூடு கட்டி வசித்தன. அந்த மரமும் அதில் உள்ள காகங்களும் பார்ப்பதற்கு எப்போதுமே வசந்த காலத்தின் துவக்கம் போலவே தெரியும். அந்த மரத்தின் காகங்கள் மனிதர்களை போல கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தன. அந்த காகங்களில் மூத்த காகம் ஒன்று எப்போதும் பார்ப்பதற்கு சுறுசுறுப்பாகவும் திறமைசாலியாகவும் இயங்கி வந்தது. சில தினங்களுக்கு ஒருநாள் காகங்களெல்லாம் ஒன்று கூடி அந்த மூத்த காகத்தின் சொல் கேட்டு எந்தவித ஆபத்தும் இல்லாமல் சுதந்திரமாய் சந்தோஷமாய் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் அந்த மூத்த காகம் பறந்து திரியாமல் படுத்தே கிடந்தது. மற்ற காகங்கள் எல்லாம் சேர்ந்து அந்த மூத்த காகத்தை விசாரிக்க. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றது. மற்ற காகங்கள் உடனே ஊரில் தெரிந்த வைத்தியர் காகத்தை அழைத்து வந்தன.

வைத்தியர் காகம் வந்து பரிசோதித்துவிட்டு கவலைப்பட தேவையில்லை. என்றும் ஒரு நாளைக்கு மேல் இந்த காய்ச்சல் நிற்காது என்றும், தான் கொடுத்த மருந்தை இரண்டு நாட்கள் கொடுக்கும்படியும் உங்கள் ஒற்றுமை தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதென்றும் கூறிவிட்டு ஆனந்தமாய் பறந்து சென்றது.

அன்றும், அன்று மறுநாளும் அந்த மூத்த காகத்திற்கு உணவுக்கு உணவும் மருந்திற்கு மருந்தும் வேளை தவறாமல் தந்து மற்ற காகங்கள் பணிவிடை செய்தன. மருந்தினாலும் மற்ற காகங்களின் கவனிப்பாலும் ஒரே நாளில் உடல்நிலை தேறிவிட்ட காகத்திற்கு மறு நாளும் ஓய் வெடுக்க எண்ணம் வந்து படுத்தே கிடந்தது.

மூத்த காகம் ஒரு நாள் படுத்து கிடந்ததால் தேவையில்லாத சிந்தனை அதற்குள் வந்தது. மாலை நேரத்தில் மற்ற காகங்களை அழைத்து கம்மிய குரலில் பேசி முதல் முறையாக நடிக்க கற்றுக்கொண்டது. தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாலும் தனக்கு வயது கூடிபோனதாலும் தன்னால் வெளியில் திரிந்து உழைக்க முடியாது என்றும் தனக்கான உணவை தேடிக்கொள்ள முடியாது என்றும். இனி நீங்கள் தான் என்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி படுக்கையிலே படுத்துக்கொண்டது.

ஆனாலும் அந்த மூத்த காகத்தின் மனசாட்சி இடித்துக்கொண்டே இருந்தது. தனக்கு ஒன்றும் இல்லை என்றும் தன்னால் முன்பு போல நன்றாக இயங்க முடியும் என்றும் தெரிந்தும் தேவையற்ற ஒரு நாள் சோம்பல் ஓய்வினால் அதன் மனம் மாறிப்போனது.

மற்ற காகங்கள் அன்று தான் முதல் முறையாக தலைவன் இல்லாமல் ஒன்று கூடி முடிவெடுத்தன. ஒவ்வொரு காகமும் ஒவ்வொரு வேளையாக முறை வைத்து அந்த மூத்த காகத்திற்கு உணவு அளிப்பதென முடிவு செய்து அதன்படி செய்தும் வந்தன. ஆரம்பத்தில் இலவச உணவு வகைகள் சுவையாக இருந்தன. நாள்பட நாள்பட சுவை குன்றுவதாக தோன்றியது. அந்த மூத்த காகம், ஒவ்வொரு காகத்திடமும் குறை பேச ஆரம்பித்தது. நாளடைவில் சண்டையிடவும் ஆரம்பித்தது.

நீண்ட நாட்கள் கழித்து மற்ற காகங்கள் மீண்டும் கூட்டம் கூடி மூத்த காகத்தின் நிறை குறைகளை கூறி தங்களுடைய கஷ்டங்களையும் சொல்லிப் புலம்பின. தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உணவைத் தேடி மூத்த காதத்திற்கும் சேர்த்து உணவு தேடுவதற்குள் படும் பாட்டை கூறி அப்படித் தேடிக்கொடுத்தும் அந்த மூத்த காகத்தின் வம்பு பேச்சையும் சண்டையிடும் போக்கையும் சொல்லி மாற்றி, மாற்றி புலம்பின.

மற்ற காகங்கள் அறியாமல் இவைகளை கேட்க நேர்ந்த மூத்த காகத்திற்கு நீண்ட நாட்கள் கழித்து சுய சிந்தனை பிறந்தது. தன்னை வழிகாட்டியாக நினைத்து வாழ்ந்த காகங்கள் தான் வழி தவறி நடப்பதைப்பற்றி பேசுவதை கேட்க நேர்ந்தது தன்னைப்பற்றி சிந்தித்துக் கொண்டே தன்னை அறியாமல் சிறகடித்து வானில் நீண்ட தூரம் பறந்து திரிந்தது. அப்படியே உணவையும் தேடி உண்டது. உண்டுகளைத்து உறைவிடம் வந்து சேர்ந்தது. உறங்கியும் போனது.

மறுநாள் விடிந்ததும் அந்த மூத்த காகம் தன்னை இளங்காகமாய் உணர்ந்து அன்று வழக்கத்திற்கு மாறுதலாய் அதிகாலையிலே அனைத்து காகங்களை ஒன்றாய் வரச் செய்து தனக்கு ஏற்பட்ட சோம்பல் நிலையை வெளிப்படையாய் ஒப்புக்கொண்டது. மற்ற காகங்கள் அந்த மூத்த காகத்தின் மனமாற்ற நிலையை எண்ணி உயர்வான மதிப்பு கொணடன. மீண்டும் இயல்பு நிலைக்கு மாறின. மூத்த காகத்தால் இப்போது அந்த அடர்ந்த மரமும் அதிலே வாழும் காகங்களின் போக்குவரத்தும் அந்த ஊருக்கு முன்பைவிட அழகு சேர்த்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக