வியாழன், 4 ஏப்ரல், 2013

தீங்கு திரும்பி வரும்.


பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

அவர் தூரமாக வரும்போதே, மாணவன் சுரேஷ், ‘டேய்... அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு’ என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்றுவிட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது.

வீட்டில் ஒரே பையன் என்பதால் சுரேசிற்கு செல்லம் அதிகம். அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தலும், சுரேஷ் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறைவில்லை.

ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய சுரேஸ், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே ஆஸ்பித்திரியில் சோர்த்து சிகிச்சை அளித்தனர்.

பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு சுரேஷ் வீட்டிலேயே முடங்கிவிட்டான்.

‘ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான்’ என்று எண்ணிக் கொண்டான்.

சுரேஷ் நிலையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆசிரியர் தெய்வசிகாமணி, சுரேஷைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். படுக்கையில் கிடந்த சுரேஷைப் பார்த்துப் பேசினார்.

‘சுரேஷ், எப்படி துருதுருன்னு விளையாடிக்கிட்டு இருப்பே. இப்போ இப்படி முடங்கிவிட்டாயே. பள்ளியில் படிக்கும்போது நீதான் என்னைக் கேலி செய்யும் மாணவன் என்பது எனக்குத் தெரியும். அது அறியாப் பருவம். எனக்கு உன்மேல் கோபம் கிடையாது.

ஆனால் நீ இப்படி முடங்கிக் கிடப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. உடல் ஊனம் ஒரு குறையே அல்ல. மனம் ஊனம் அடைந்தால் தான் ஆபத்து. எனக்கும் உன்போலதான் திடீரென்று இப்படியானது. இதோபார் நான் உன் முன் ஆசிரியராக நிற்கிறேன். உன்னாலும் முடியும். முதலில் நீ வெட்கப்படுவதை விட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்று படி, மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

நாம் இவரை எவ்வளவோ கேலி செய்திருக்கிறோம். ஆனால் அவர் நம்மை ஊக்கப்படுத்திவிட்டு செல்கிறாரே, என்று எண்ணியவன், ஆசிரியர் தெய்வசிகாமணியை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரது அறிவுரைப்படி கல்லூரிக்குச் சென்றான். கல்லூரிப் படிப்புக்குப் பின் ஆசிரியப் படிப்பையும் முடித்தான்.

ஆனால் உடனே வேலை கிடைக்கவில்லை. சிறிது காலம் டயூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். ஆசிரியர் தெய்வசிகாமணி, தன் பதவிகாலம் முடிந்ததும் தனது வேலையை சுரேசுக்கு கொடுகக்குமாறு அதிகாரிகளிடம் பரிந்துரைத்து அவ் வேலையை வாங்கிக் கொடுத்தார்.

இப்போது சுரேஷ் அதே பள்ளியில் ஆசிரியராக வேலையில் சோர்ந்தான்.

“ஆசிரியரை கேலி செய்த நினைவுகளும், அவரே குருவாக மாறிப்போன நினைவுகளும் அவன் நெஞ்சில் அவ்வபோது வந்து போகும். ஆனால் இப்போது யாரையும் விளையாட்டுக்கு கூட கேலி செய்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக