திங்கள், 8 ஏப்ரல், 2013

ஜராசந்தன் ஏமாறுதல் - கண்ணன் கதைகள்.

காலயவனன் மதுரா நகரை முற்றுகையிட்டான். அவனுக்குப் பயந்தவன் போல கிருஷ்ணன் போக்குக் காட்டி ஒரு குகைக்குள் ஒடினான்.

கிருஷ்ணனைத் துரத்திக்கொண்டு ஓடிய காலயவனன் குகைக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த ஒரு மனிதர் தன் பார்வையாலேயே  காலயவனனை எரித்து விட்டார்.

காலயவனனை எரித்த அந்த மனிதர் யார்? அது ஒரு தனிக்கதை.

அந்த மனிதரின் பெயர் ராஜா முசுகுந்தர். அவர் ஒரு பெரிய அரசர். அதே சமயத்தில் மிகுந்த பக்திமானும்கூட. வேதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர். அவர் மிகுந்த பலசாலியாக இருந்ததனால், ஒரு சமயம், தமக்கும் மற்ற தேவர்களுக்கும் உதவும்படி இந்திரன் அவரைக் கேட்டுக்கொண்டான். முசுகுந்தர் சரி என்று ஒப்புக்கொண்டு, வெகு காலம் தேவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றினார்.

பிறகு சிவகுமாரனான முருகப்பெருமான் தேவர்களின் சேனைத் தலைவர் ஆக்கப்பட்டார். பிறகு இந்திரனும் மற்றத் தேவர்களும் முசுகுந்தரை அணுகி, “நண்பரே! தாங்கள் இத்தனை காலமும் எங்களை அசுரர்களிடமிருந்து காப்பற்றினீர்கள். எங்களுக்காகத் தாங்கள் அரசு, உற்றார் உறவினர் எல்லா வற்றையும் தியாகம் செய்துவிட்டு வந்தீர்கள். மனித வாழ்க்கை அநித்தியமானதால் தங்கள் குடும்பம், குழந்தைகள், உற்றார், உறவினர் யாரையும் அங்கே காணமாட்டீர்கள். ஆகவே எங்களிடம் ஏதேனும் வரம் கேளுங்கள்” என்று சொன்னார்கள்.

காலம் தன் உற்றார்  உறவினர் எல்லாவற்றையும் அழித்துவிட்டது என்று கேட்டதும் அவர் திடுக்கிட்டார்! நாம் அத்தனை காலமா தேவர்களுடன் தங்கிவிட்டோம் என்று நினைத்தார். ஆகவே பூமிக்குத் திரும்ப அவருக்கு ஆசையில்லை. ஓய்வு ஒழிவின்றி அவர் அசுரர்களோடு போரிட்டிருக்கிறார். இப்பொழுது மிகவும் அசதியாக இருந்தார். அவருக்கு இப்பொழுது தேவைப்பட்டதெல்லாம் நல்ல உறக்கம்தான்.

ஆகவே அவர், “இதோ பாருங்கள். எனக்கு இப்பொழுது வேண்டிய தெல்லாம் நல்ல தூக்கம்தான். யாருடைய தொந்தரவும் இல்லாமல் நான் நீண்டகாலம் தூங்க வேண்டும் என்று அருள் புரியுங்கள். அதோடு எவன் என் தூக்கத்தைக் கெடுத்து என்னை எழுப்புகிறானோ அவன் உடனே எரிந்து சாம்பலாக வேண்டும் என்றும் அருள் புரியுங்கள்.” என்றார்.

தேவர்கள் இந்த வரத்தை அளித்ததும் ராஜா முசுகுந்தர் இந்த மலைக்குகைக்கு வந்து தூங்க ஆரம்பித்தார். காலயவனன் அவர் தூக்கத்தைக் கெடுத்து எழுப்பிய தால், தேவர்களின் வரத்தின்படி அவன் எரிந்து சாம்பலானான்.

முசுகுந்தர் இப்பொழுது நன்கு விழித்துக் கொண்டுவிட்டார். சிரித்த முகத்துடன் எதிரே கிருஷ்ணன் நிற்பதைப் பார்த்தார். கிருஷ்ணனின் இடுப்பில் இருந்த பீதாம்பரம், மார்பில் இருந்த, ஸ்ரீவத்ச அடையாளம், கழுத்தில் இருந்த கௌஸ்துபமணி, இரு காதுகளிலும் தொங்கிய குண்டலங்கள் இவை எல்லாவற்றையும் பார்த்தார்.

கிருஷ்ணன் இப்பொழுது நான்கு கைகளுடனும், முழுங்கால் வரை தொங்கிய துளசிமாலையுடனும் ஸ்ரீமகாவிஷ்ணுவாக அவருக்கு காட்சியளித்தான்.

அந்த அழகைக் கண்டு ராஜா பிரமித்தார் இது யாராக இருக்க முடியும்?

உடனே அவர் கிருஷ்ணனைப் பார்த்து, “தாங்கள் உலக நாயகன் என்று நான் நினைக்கிறேன். ஆ! எனக்கு இப்பொழுது புரிந்துவிட்டது. தாங்கள் ஸ்ரீமந்நாரயணன். நான் ஒரு சாதாரண மனிதன். தேவர்களுக்குச் சொற்ப உதவி புரிந்தேன். நான் மிகவும் அசதியாக இருந்தேன். தேவர்கள் நான் இஷ்டப்பட்ட வரை என்னைத் தூங்க அனுமதித்தார்கள். நான் முன்பின் அறியாத ஒருவனால் எழுப்பப் பட்டேன். அவன் உடனே எரிந்து சாம்பலாகிவிட்டான். அவன் செய்த பாவம் தான் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். பிறகு என் கண்கள் தங்கள்  தெய்விகத் தரிசனத்தைக் கண்டன. தங்களுக்கு என் நமஸ்காரம்” என்று சொன்னார்.

முசுகுந்தரின் பக்தியைக் கிருஷ்ணன் மெச்சினான். அவன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்.

“நான் யார், என் பெயர் என்ன என்று நீர் தெரிந்துகொள்ள விரும்புகிறீர். என்னுடைய பெயர்கள், நான் எடுத்த பிறவிகள், நான் செய்த காரியங்கள் எத்தனையோ கோடியாகும். அவற்றுக்குத் தொடக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. இந்தப் பிறவியில் என் பெயர் கிருஷ்ணன். நான் கம்சனையும் இன்னும் பல அசுரர்களையும் கொன்றேன். உம் விழிகளால் நீர் ஒரு மனிதனை எரித்தீரே, அவன் காலயவனன் என்னும் கொடியவனும் பாவியுமான அரசன். நீர் இங்கே இருப்பது தெரிந்து தான் நான் இந்தக் குகைக்கு வந்தேன். நீர் என்றுமே என் பக்தராக இருந்திருக்கிறீர். நீர் வேண்டியதைப் பெறும் காலம் வந்துவிட்டது. நீர் கேட்கும் எதையும் நான் கொடுப்பேன். என் பக்தர்கள் ஒரு நாளும் கஷ்டப்படக்கூடாது” என்று சொன்னான்.

முசுகுந்தரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து அவர் தழுதழத்த குரலில், “என் பிரபுவே! உலகம் அநித்தியம் என்பதை நான் அறிவேன். இது ஒரு கதையை எனக்கு நினைவுபடுத்துகிறது. அடுப்பங்கரையில் உத்தரத்திலிருந்து ஒரு வெண்ணெய்த் சட்டி தொங்கிக்கொண்டிருக்கிறது. வெண்ணெயை ருசி பார்க்க விரும்பும் ஓர் எலி, பானையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கயிற்றின் நுனிக்குச் சென்று, அங்கிருந்து மெல்லக் கிழே இறங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஒரு பாம்பு எலியைத் தின்பதற்காக, அதன்மீது பாயக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த விஷயம் எலிக்கு தெரியாது. இது போலவே உலக விஷயங்களிலிருந்து இன்பத்தை நாடும் மனிதனையும் அவனுடைய ஆசைகளையும் அழிக்கக் காலம் காத்துக் கிடக்கிறது என்பதை மனிதன் அறியாமல் இருக்கிறான். நான் கேட்கும் வரமெல்லாம் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டும், தங்கள் பாதகமலங்களுக்கு  அடியில் என்றும் இருக்க வேண்டும் என்பதுதான். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்” என்றார்.

அதற்குக் கிருஷ்ணன், “உமது பக்தியை மெச்சினேன். நீர் உலக ஆசை இல்லாமல் இருக்கிறீர். அதனால் என்  ஞாபகம் உமக்கு என்றும் இருக்கும். கடைசியில் நீர் என்னை வந்து அடைவீர்” என்றான்.

கிருஷ்ணர் மதுரா திரும்பினார். பலராமரும் கிருஷ்ணரும் சேர்ந்து காலயவனனின் படைகளை அழித்தனர். காலயவனன் கொள்ளையடித்த பொருள்களையெல்லாம் அவர்கள் பறித்து, அதைத் துவாரகைக்குக் கொண்டு வந்தனர்.

வழியில் ஒரு பெரிய சேனையுடன் ஜராசந்தன் அவர்களைத் தடுத்தான். உடனே தங்கள் உயிருக்குப் பயந்தவர்களைப் போல இருவரும் ஓட ஆரம்பித்தனர். இதைக் கண்டு ஜராசந்தன் ஆச்சிரியப்பட்டான்.

அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்பதை அவன் கண்டான். ஆகவே தன்னுடைய சேனை பின்தொடர, அவன் அவர்களைத் தன் ரதத்தில் இருந்தபடியே பின்தொடர்ந்தான்.

வெகுநேரம் அவன் அவர்களைப் பின் தொடர்ந்தான். பலராமரும் கிருஷ்ணரும் பிரவர்ஷணம் என்ற மலையில் அடிவாரத்தை அடைந்தார்கள். இருவரும் ஓடி மலையுச்சியை அடைந்தார்கள்.

இருவரும் மலைக்குள் எங்கோ ஒளிந்து கொண்டுவிட்டார்கள் என்று ஜராசந்தன் நினைத்து, மலையைச் சுற்றி விறகுகளை அடுக்கி அவற்றுக்கு தீ வைத்தான். தீ பாதி மலைக்குப் பரவியதும் பலராமரும் கிருஷ்ணரும் மலையுச்சியிலிருந்து கீழே குதித்தார்கள். ஜராசந்தன் அதைக் கவனிக்கவில்லை. அந்தத் தீயில் அந்த இருவரும் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு, அவன் தன் பெரிய சேனையுடன். தனது மகதநாட்டுத் தலை நகரை அடைந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக