செவ்வாய், 2 ஏப்ரல், 2013

படிக்கிற வயசில்...


“நான் சொல்றதைக் கேளு முத்து. நீ நல்லா படிக்கணும், பாஸாகணும், வேலைக்கு போகணும். சந்தோஷமாக இருக்கணும், அதுதான் என் ஆசை.”

செல்லம்மாளின் ஏக வசனம் இதுதான். முத்து காலையில் எழுந்தது முதல் இரவில் தூங்கச் செல்லும் வரை அம்மாவின் இந்த வார்த்தைகளை எத்தனை முறை கேட்பான் என்று கணக்கே கிடையாது.

“தகப்பன் இல்லாத உன்னை வளர்த்து ஆளாக்குறதுதான் எனக்கு லட்சியம். நீ என்னன்னா இந்த வயசிலேயே செய்யக் கூடாத தப்பெல்லாம் செய்யறே. படிக்காமல் ஊர் சுத்துறே. பாடவேளையை கட் அடித்துவிட்டு படத்துக்குப் போறே. நல்ல பிள்ளைங்களோட சேர்ந்தால்தான் நீ நல்ல வனா வளர முடியும். தப்பு பண்றதை குறைச்சிகிட்டு நல்லா படி. இல்லே பின்னாலே ரொம்ப கஸ்டப்படுவே” என்றாள் செல்லம்மா.

“போம்மா, எப்ப பாத்தாலும் நொய் நொய்னு அரிச்சிகிட்டு. எனக்கு படிக்க இஷ்டமில்லே. நான் போக மாட்டேன். வேலைக்கு வேணும்னா போறேன்” என்றான் முத்து.

அம்மா அழுதாள். முத்து கொஞ்சமும் கலங்கவில்லை.

காலம் உருண்டோடியது. முத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சிற்றாள் வேலைக்குப் போனான்.

“டேய் எழுந்திருங்கடா, மணி ஏழாகுது” மேஸ்திரி குச்சியில் அடித்தபடி வந்தார்.

முத்துவும் எழுந்தோடினான். முகம் கழுவி, பல் தேய்த்து, சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாக வேலைக்கு ஓடினான்.

பகல் முழுவதும் மண், சிமெண்டு, சாந்து சுமக்க வேண்டும். முத்து உடம்பெல்லாம் புண்ணாக வலித்தது.

மாலையில் வேலை முடிந்து கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது மேஸ்திரி  தன் மகனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ஏண்டா நீ நல்லா படிக்கணும். நல்லா படிச்சா என்னை மாதிரி நார்காலியில் அமர்ந்தபடி மற்றவர்களை வேலை வாங்கலாம். இல்லாவிட்டால் இப்படித்தான் இவங்கள மாதிரி கல்லு சுமந்து, மண்ணு சுமந்து  அவஸ்தைப்படணும். என்ன புரிஞ்சுதா? நல்லா படிப்பியா? என்று கேட்டார்.

“சரிப்பா நான் நல்லா படிக்கிறேன். இவங்களை மாதிரி கஷ்டப்படமாட்டேன்” என்றான் மேஸ்திரியின் மகன்.

‘நம் அம்மாவும் நம்மிடம் இதைத் தானே சொன்னார்கள். நான் அப்போது கேட்காமல் போனேனே’ என்று மனதுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டான் முத்து. உடம்புடன் மனமும் சேர்ந்து வலித்தது.

படிக்கிற வயசில் படிக்காமல் இப்போது அழுது என்ன பிரயோஜனம் என்னு தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக