பூஞ்சோலை என்ற கிராமத்தில் ராமசாமி வாழ்ந்து வந்தான். அவன் பெரிய சோம்பேறி. அவனுக்கு வேலை செய்யாமலேயே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
ராமசாமி தன்னுடைய ஆசையை ஒரு சாமியாரிடம் கூறினான்.
சாமியாரும், ஆயிரம் தங்கக் காசுகளைக் கொடுத்து ‘இதை வைத்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்து’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
அன்றிரவு சாமியார் தன் சீடரில் ஒருவரை அழைத்து ராமசாமியின் வீட்டிலிருந்து அந்தப் பொற்காசுகளைத் திருடி வரச் சொன்னார்.
காலையில் ராமசாமி, புலம்பிக் கொண்டே சாமியாரிடம் வந்தான். பொற்காசுகள் தொலைந்த விஷயத்தை அழுது கொண்டே சொன்னான்.
உடனே சாமியார் ‘நான் சொல்லும் வேலைகளை நீ செய்தால் உனக்கு மீண்டும் ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்’ என்றார்.
‘என்ன வேலை செய்ய வேண்டும்?’ என்றான் ராமசாமி.
தன் ஆசிரமத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏக்கர் நிலத்தை பயணபடுத்தி நீர்பாய்ச்சச் சொன்னார் சாமியார். அதற்கு ஆயிரம் பொன் ஊதியமாக தருவதாக கூறினார். அதை முடித்ததும், நெல் விதைக்க நூறு பொன்னும், தினமும் நீர் பாய்ச்ச 10 பொன்னும் தருவதாக சாமியார் அறிவித்தார். அறுவடை செய்யும்போது அனைத்து பொற்காசுகளையும் மொத்தமாக வழங்குவதாக கூறினார்.
10 பணம் பெறும் வேலைக்கு 10 பொன் தருவதால் அவனுக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தது. சாமியார் சொன்ன வேலைகளை தட்டாமல் செய்தான். ‘ஒவ்வொரு நாள் வேலைக்கும் எத்தனை பொற்காசுகள் சம்பாதித்தோம்’ என்று குறித்து வைத்து மகிழ்ந்தான்.
நெல் அமோகமாக விளைந்தது. அறுவடை முடிந்தது.
சாமியார், ராமசாமியை வரவழைத்தார். பேசியபடி பொற்காசுகளை வழங்கியதோடு, கூடுதலாக இருமடங்கு பொற்காசுகளையும் வழங்கினார்.
ராமசாமி, சாமியாரை திகைப்புடன் பார்த்தான்.
‘என்ன திகைப்புடன் பார்கிராய். உன் வேலைக்கு சம்பளமாய் நான் தரும் பொற்காசுகள் ஒரு பங்கு என்றால் உன் மூன்று மாத உழைப்பின் பலனாய் விளைந்த நெல் தந்த பொன் அதைவிட 2 மடங்கு அதிகம். அதுவும் உனக்குத்தானே சொந்தம். எனவே நீ செல்வந்தனாக விரும்பினால் உழைப்பின் மூலமே செல்வந்தனாக முயற்சி செய். ஒரு ஏக்கர் பயிர் செய்து இவ்வளவு பொன் விளைத்த நீ, இன்னும் ஏராளமான பொன்னை சீக்கிரத்தில் குவித்துவிடுவாய்’ என்று வாழ்த்தினார் சாமியார்.
‘சோம்பேறியாக இருந்த எனக்கு உழைப்பின் அருமையை புரிய வச்சிட்டீங்க. என்னை மன்னிச்சிடுங்க. இனி உழைச்சி முன்னேறுவேன்’ என்றான் ராமசாமி உறுதியுடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக