செவ்வாய், 2 ஏப்ரல், 2013

வாய் உள்ள பிள்ளை

ஒரு ஊரில் ஒர் அரசர் இருந்தார். அவர் தினம் தோறும் அவருடைய அந்தப்புரத்தில் உள்ள நந்தவனத் தோட்டத்துக்குச் செல்வது வழக்கம்.

அப்படி தினந்தோறும் நந்தவனத் தோட்டத்துக்குச் சென்ற அரசர் ஒருநாள் ரோஜா செடியில் பூக்கள் இல்லாததைப் பார்த்து துணுக்குற்றார்.

“காவலாளிகள் இருந்தும் இந்த நிலையா?” என்று கோபமடைந்தார் அரசர். ஆனாலும் உடனடியாக எதையும் கேட்கவில்லை.

தினந்தோறும் நந்தவனத்தைச் சோதித்து வந்தார். நாள் தோறும் ரோஜா செடியில் மட்டும் பூக்கள் குறைந்து வருவதைக் கண்டார். அதற்கு மேல் பொருக்கமாட்டாமல் காவலாளிகளை அழைத்து வரச் சொன்னார்.

காவலாளிகள் விவரத்தை அறிந்தனர். உடனே தடாலென்று மன்னரின் காலில் விழுந்தனர். “மன்னியுங்கள் அரசே! கடந்த ஒரு மாத காலமாகவே இரவு நேரத்தில் ரோஜா மலர்கள் களவு போகின்றன. நாங்கள் எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றனர்.

“இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை. என்ன செய்வீர்கள்... ஏது செய்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. இரவு, பகலாக இங்கே கண்விழித்துக் காவல் இருங்கள். உங்கள் கண்களில் மண்ணைத் தூவி ரோஜாவைப் பறிக்கும் அந்தக் கள்வனைப் பிடித்து வாருங்கள்” என்று கட்டளையிட்டுச் சென்றான் மன்னன்.

ஒருவாரம் கழிந்தது. காவலகர்கள் அந்தக் கள்வனைப் பிடித்தனர்.

அவனைப் பார்த்ததும் காவலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவன் அரண்மனை தலைமைக் காவலர் ராமனின் மகனான அறிவானந்தம் தான்.

அவனைச் சோதனையிட்டதில் அவன் மடி நிறையை பூ இருந்தது. எனவே அவனைக் கட்டிப் போட்ட காவலாளிகள் அரசரிடம் ஓடினர்.

தலைமைக் காவலர் ராமன் மகன் அறிவானந்தம் ஒர் அப்பாவி. அன்று இரவு உறக்கம் பிடிக்காமல் அரண்மனை நந்தவனத்தை ஒட்டி நடந்து கொண்டிருண்தான். அப்போது எதிரே ஒருவன் ஒரு மூட்டையுடன் வந்தான். அது மலர் மூட்டை. முழுவதும் ரோஜாப் பூக்கள்.

“விசேஷத்துக்காக பூ வாங்கி வருகிறேன். ஊருக்குள் செல்ல வேண்டும். பக்கத்தில்தான் வீடு. ஆனால் மூட்டை கனமாக இருக்கிறது. அதனால் கொஞ்சம் பூக்களை உங்கள் மடியில் கட்டிக்கொள்ளுங்கள். இந்த மூட்டையைப் போட்டுவிட்டு சில நிமிஷங்களில் வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்றான்.

சூதுவாது அறியாத அறிவானந்தம் அதை நம்பி விட்டான்.

வந்தவன்தான் அரண்மனை நந்தவனத்தில் திருடுகிறவன். காவலர்கள் கண்டுபிடித்து விரட்டிவரும் வழியில், அவர்களைத் திசைதிருப்ப அறிவானந்தத்தை மாட்டி விட்டு ஓடிவிட்டான்.

தூரமாக ஓடிவந்துகொண்டிருந்தனர் காவலர்கள்.

எதற்கு இவர்கள் இப்படி தலைதெறிக்க ஓடிவருகிறார்கள் என்று புரியாமல் நின்ற அறிவானநந்தத்தைத்தான் அவர்கள் பிடித்து கட்டிவைத்தனர்.

அரன்மனைக்கு ஓடிய காவலர்கள் தருடன் பிடிபட்டுவிட்டான் என்று சொன்னார்கள். அரண்மனை தலைமைக் காவலர் ராமனின் மகன்தான் அத் திருடன் என்பதை அரசரால் நம்பவே முடியவில்லை.

“உண்மையிலே அவன்தானா... சரியாக கண்டுபிடித்தீர்களா... தவறு ஏதும் இருந்தால் உங்களைத் தொலைத்துவிடுவேன்... சரி...சரி... யார் செய்தாலும் தவறு தவறு தான். அவன் தண்டிக்கிப்பட வேண்டியவன். இழுத்துவாருங்கள் அவனை. யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவனை பல்லக்கில் வைத்துத் தூக்கி வாருங்கள்” என்று மன்னர் கட்டளையிட்டார்.

காவலாளிகள் பல்லக்கில் வைத்து தனது மகனைத் தூக்கிக் கொண்டு போவதை, கடைத்தெருவில் இருந்து ராமன் பார்த்தார். அவருக்கு விஷயம் கொஞ்சம் தெரியவந்தது. அய்யா...தெரியாத்தனமாக மாட்டி இருப்பான்... என்ன செய்வது யோசித்தவர், மகனுடையகாதில் விழும்படி சத்தம் போட்டுக் கத்தினார்: “வாய் உள்ள பிள்ளையாக இருந்தால் பிழைக்கட்டும்”.

இதையே இரண்டு, மூன்று முறை கத்தினார் ராமன்.

அப்பா ஏன் இப்படிக் கத்துகிறார் என்று சிந்தித்தபடியே பல்லக்கில் அசைந்து அசைந்து போனான் அறிவானந்தம்.

காவலாளிகள் “திருடன்” அறிவானந்தத்தை அரசரிடம் ஒப்படைத்தனர்.

“அவன் கட்டை அவிழ்த்து விடுங்கள்” என்றார் அரசர்.

“எங்கே ரோஜாப் பூக்கள்” என்று அவனைக் கேட்டார்.

அவன் தன் இரண்டு கைகளையும் விரித்து, உதடைப் பிதுக்கி, ‘இல்லையே’ என்பது போல் பாவனை காட்டினான்.

உடனே காவலாளிகள், “அரசே! இவன் பொய் சொல்கிறான். அவனுடைய மடியில் நிறைய ரோஜாப்பூ உள்ளது” என்றனர்.

“எங்கே மடியைக் காட்டு” என்று கட்டளையிட்டனர் அரசர்.

அறிவானந்தம் மடித்துக் கட்டிய வேட்டியை அவிழ்த்துவிட்டான். ஒரு ரோஜா இதழ் கூட இல்லை.

காவலாளிகளும் அரசரும் ஒருசேர அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அரசர், “ஒரு நிரபராதியை, திருடன் என்று சொல்லி இங்கு கொண்டு வந்தீர்களே... உங்களுக்குத்தான் நான் தண்டனை வழங்கப் போகிறேன். அவனை விடுங்கள். அவன் போகட்டும்” என்றார்.

அறிவானந்தம் வீட்டுக்கு வந்தான். அப்பாவிடம் நடந்த விவரத்தைக் கூறினான். “நீங்கள் தான் வாய் உள்ள பிள்ளையாக இருந்தால் பிழைக்கட்டும்” என்று சொன்னீர்கள். அதனால் நான் யோசனை செய்தேன். எல்லா ரோஜாக்களையும் சாப்பிட்டு விட்டேன்” என்றான்.

அப்பா மகிழ்சியோடு அவனைத் தட்டிக் கொடுத்தார்.

உண்மையான ரோஜாத் திருடன் சில தினங்களுக்குப் பின் கையும் களவுமாகப் பிடிபட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக