வெள்ளி, 5 ஏப்ரல், 2013

பண ஆசை

கந்தசாமி படு கஞ்சன். உண்ணாமல் தின்னாமல் காசு காசு என்று அடுக்கி சேர்த்து ஒரு கோணிப் பையில் போட்டு வைத்திருந்தான்.

அவனிடத்தில் கொஞ்சம் பணம் இருந்தது. அதை வட்டிக்கு விட்டான். வட்டியும் முதலையும் கறாராய் கரந்தான். இப்படி வட்டி மேல் வட்டி வாங்கி பணத்தைச் சேர்த்தான்.

கல்யாணம் ஆகாததாலே குடும்ப செலவும் இல்லை.

அவனது ஒரே குறிக்கோள் பணம், பணம், பணம், தினமும் ஒரு முறை எண்ணிப் பார்த்துக் கொள்வான். அதில் ஒரு ஆனந்தம். இரவு ஆனதும் வீட்டை நன்றாகப் பூட்டி விட்டு, விளக்கைப் போட்டு பண மூட்டையை முன்னால் வைத்து அதற்கு காவல் காப்பான். திருடு போய் விடும் என்ற பயம். அவனுக்கு அந்த பணப்பையை பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் சோறு தண்ணி ஒன்றும் வேண்டாம்.

காசை எடுத்து செலவு செய்யப் பயம். அதனால் சரியான சாப்பாடு கிடையாது. அவன் சேர்த்த பணமானது நாளடைவில் இரண்டு பையாயிற்று. அந்த பணம் வீட்டில் இருந்ததால் சரியான தூக்கம் இல்லை. சரியான சாப்பாடு இல்லை. சரியான துணிமணி இல்லை. உலக நடப்பு தெரியவில்லை செலவாகி விடுமே என்ற எண்ணத்தில் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை.

ஒரு நாள் கலெக்டரிடமிருந்து ஒரு எச்சரிக்கை வந்தது. ஊரில் பூகம்பம் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. “எந்த நேரமும் வரலாம். எனவே ஜனங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்துக்குப் போய் விடுங்கள்” என எச்சரிக்கை கொடுத்தார்.

கந்தசாமிக்குக் கவலை. பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு சாக்குப் பைகளையும் முன்னால் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.

இதற்குள் காவலர்கள் வந்து வீடுகளில் இருப்பவர்களை அவசரப்படுத்தினார்கள். கந்தசாமி இரண்டு பைகளையும் தனது தோளில் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான். ஆனால் ஓட முடியவில்லை. நடக்கவே முடியவில்லை பிறகு எங்கே ஓடுவது. அதற்குள் பூகம்பம் வந்துவிட்டது. கந்தசாமி தனது ரூபாய் மூட்டை இரண்டோடும் ஒரு குழிக்குள் விழுந்து மாய்ந்து போனான்.

கந்தசாமி பெரும் பணக்காரன்தான். அந்த பணத்தால் அவன் ஒரு பயனும் அடைய வில்லை. கடைசியில் அந்த பணமே அவன்  சாவுக்கு காரணமாயிற்று. அதற்காக மனிதனுக்கு பணமே தேவையில்லை என்று கூறவில்லை. பணத்தின் மேல் வைக்கும் ஆசை எல்லாத் தீங்கிற்கும் காரணமாய் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக