வியாழன், 11 ஏப்ரல், 2013

கதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை

1.    காட்சிப் பொருள்கள்

கருத்துப் பொருள்களைவிடக் காட்சிப் பொருள்களே எல்லா வயது பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்க வல்லன. எனவே குழந்தைகளின் அறிவு நிலைக்கும் வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வாழ்க்கையோடு ஒட்டி அமைந்துள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பள்ளி மாணவர்கள் தம் சூழ்நிலையிலுள்ள விலங்குகள், பறவைகள், காட்சிகள், பற்றிய கதைகளைப் பெரிதும் விரும்புவார்கள்.

2.    கதையின் நீளம்

 மிக நீண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்தல் கூடாது. அதிகமான வர்ணனைகளால் கதை நீண்டு வளரும். அவ்வித வருணனைகளும், வேண்டாத செய்திகளும் உள்ள கதைகளைத் தவிர்த்தல் வேண்டும். ஒரு கதையில் உட்கதை, உட்கதையாக வந்தால் மாணாக்கர் அவற்றையறிந்துகொள்ள சிரமப்படுவர். அவற்றையும் நீக்குதல் வேண்டும். சுருக்கமாக எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய அதிக நீளம் இல்லாத கதைகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

3.    அச்சமூட்டும் கதைகள்

 பெரிதும் துன்பம் தருகின்ற பேய், பிசாசுக் கதைகள், திடீர் நிகழ்ச்சிகள், அடங்கிய கதைகள் குழந்தைகளுக்கு அச்சம் ஊட்டுவனவாம். அவ்வகைக் கதைகளைத் தவிர்த்தல் நன்று.

4.    சோகக் கதைகள்

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக விளையாடி இன்பமாகப் பொழுதுபோக்க விரும்புவர்கள், அவர்களுக்குத் துயரம் தரும் துன்ப நிகழ்ச்சிகள் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்தல் கூடாது. எனவே சோக நிகழ்ச்சிகள், துன்ப முடிவுகள் உள்ள கதைகளைத் தவிர்த்தல் நன்று.

5.    ஆட்டத்திற்கு இடம்

குழந்தைகள் இயல்பாகவே கை, கால், உறுப்புகளை அசைத்தும், முகத்தில் பல்வகை வேறுபாடுகளைக் காட்டியும், மெய்ப்பாடுகளுடன் பேசப் பெரிதும் விரும்புவர். அதற்கேற்ற வகையில் கதைகள் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

6.    சொற்பின் வரும் கதைகள்

சில கதைகளில் ஒரு தடவை வந்த தொடரோ, சொல்லோ மீண்டும் மீண்டும் வரும்படி அவை அமையும். அவ்வகைக் கதைகளை மாணாக்கர் பெரிதும் விரும்புவர். அம்மாதிரித் தொடர்கள் பலதடவை வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

7.    நகைச்சுவை

நகைச்சுவை யாவராலும் விரும்பப்படுவதொன்று. அது உடலுக்கு நலம் தருவது. குழந்தைகளும் நகைச்சுவையினைப் பெரிதும் விரும்புவர். எனவே நகைச்சுவை நிறைந்த கதைகளை அதிகமாகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

8.    பலவகைக் கதைகள்

கதைகள் பல வகைப்படும். அவையாவன: (அ) இயற்கைக் கதைகள், (ஆ) பிராணிகள், பறவைகள், மரஞ்செடிகள், பேசும் வகையில் அமைந்த கதைகள் (உதாரணம்: பஞ்ச தந்திரக் கதைகள்), (இ) மோகினி அல்லது மாயா விநோதக் கதைகள் ( உதாரணம்: அலாவுதீனும் அற்புத விளக்கும்), (ஈ) நாடோடிக் கதைகள் (உதாரணம்: தேசிங்குராஜன் கதை) (உ) புராணக் கதைகள் (உதாரணம்: பாரதம், இராமாயணம்) (ஊ) வரலாற்றுக் கதைகள் (உதாரணம்: கட்டபொம்மன் மருது பாண்டியர் கதைகள்), (எ) வாழ்க்கை வரலாறு (உதாரணம்: காந்திமகான் கதை, நேரு, கென்னடி வரலாறுகள்), (ஏ) பிரயாணக் கதை (உதாரணம்: கல்லிவரின் பயணம்), (ஐ) விஞ்ஞானத்தின் கதை (உதாரணம்: இரயில் கண்டுபிடித்த வரலாறு, ஆகாய விமானம் கண்ட முறை), (ஒ) விநோதக் கதைகள் (உதாரணம்: தெனாலிராமன் கதை), (ஓ) சங்கிலித் தொடர் கதைகள் (உதாரணம்: விக்கிரமாதித்தன் கதை), (ஔ) சாகசக் கதைகள் (உதாரணம்: சிவாஜி யின் கதை)

கதை சொல்லும் ஆசிரியர் அல்லது பெற்றோர் மாணாக்கரின் மற்றும் குழந்தைகளின் சிந்தனைதிறன் தன்மையை பொறுத்து கதைகளைத் தேர்ந்தெடுத்து நன்கு கதையின் கருத்தைப் புரிந்துகொண்டு பிறகு கதை சொல்லுதல் அவசியமாகும்.

 

1 கருத்து:

  1. உங்கள் தளத்தில் தொகுக்கப்பட்டிருந்த சிறுகதைகள் அறிவு பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. உங்களுக்கு எனது மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள், சமீபத்தில் http://www.valaitamil.com/literature_short-story என்ற இனையதளத்தை பார்த்தேன். அதில் அகிலன்,அசோகமித்திரன், அறிஞர் அண்ணா போன்றோரின் சிறுகதைகள் அழகாக தொகுக்கப்பட்டிருந்தது.

    பதிலளிநீக்கு