செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மான்மகன்

அந்தநாட்டின் அரசன் ஒரு ஜோதிடப் பைத்தியம். ஒரு சிறிய செயலைச் செய்ய வேண்டுமென்றாலும் சோதிடர்களை அழைத்துக் கருத்துக்கேட்டு, நாள் நட்சத்திரம் பார்த்தே செய்வான். இதனால் அரசனை ஏய்த்துப் பிழைப்பதற்கென்றே ஒரு போலி சோதிடக் கும்பல் நாட்டில் உருவாகி விட்டது.

அரசனின் மனைவியாகிய அரசியோ சோதிடத்தை அறவே வெறுப்பாள். தன்னம்பிக்கையும் பகுத்தறிவும் கொண்டவள். இதனால் அரசனுக்கும் அரசிக்குமிடையே பலத்த கருத்து வேறுபாடுகள் தோன்றின.

அரசி கருவுற்றிருந்த சூழ்நிலையில் ஒருநாள் ஒரு புதிய சோதிடன் தலைநகருக்கு வந்துசேர்ந்தான். அவன் ஒரு தீய நோக்கத்தோடுதான் அந்த நாட்டிற்கு வந்திருந்தான்.

அரசி அவளுடைய தந்தையின் நாட்டில் இளவரசியாக இருந்த காலத்தில் இந்தச் சோதிடனை அரசவையில் இருந்து துரத்தி அடித்திருந்தாள். அதற்கு வஞ்சம் தீர்க்கத்தான் இந்தச் சோதிடன் இப்போது இந்த நாட்டிற்கு வந்திருந்தான்.

தன்னைப் புகழ்பெற்ற சோதிடனாக அரசனுக்கு காட்டிக் கொண்ட அவன், அரசன் மனம் மகிழும் வண்ணம் பல போலிச் சோதிடக் கணிப்புகளை எடுத்துக் கூறினான். பிறகு இறுதியில்,

“அரசே! ஒரு வருத்தமான கணிப்பை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் இருக்கிறேன்... அரசியாருக்கு பிறக்கப் போகும் குழந்தையால் உங்களுக்கு உயிராபத்து நேரிடும் என்று கிரகங்களின் நிலை காட்டுகிறது.

எனவே தாங்கள் உயிர் பிழைத்து நீண்ட நாட்கள் இந்த நாட்டை ஆள வேண்டு மென்றால் கருவுற்றிருக்கும் அரசியாரைக் காட்டுக்குள் துரத்தி விடுங்கள். அப்போதுதான் உங்கள் பிள்ளையால் உங்களுக்கு வரவிருக்கும் உயிராபத்து நீங்கும்” என்று இரக்கமின்றி பொய் கூறினான்.

ஏற்கனவே அரசியோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்த அரசன் சோதிடனின் பொய்யை அப்படியே நம்பினான். மறுநாள் அமைச்சர்களும் அறிஞர் பெருமக்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காத அரசன் அரசியைக் காட்டுக்குள் துரத்தி அடித்து விட்டான்.

நிறைமாதத்தில் இருந்த அரசி தனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை எண்ணி வருந்தி அழுதபடியே காட்டுக்குள் மனம் போனபடி நடந்து சென்றாள். இறுதியில் மேற்கொண்டு நடக்க முடியாமல் ஒரு மரத்தடியில் மயங்கிச் சாய்ந்தாள்.

அரசி மயக்கதில் இருக்கும்போதே அவளுக்கு ஒர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை பிசியால் துடித்துக் கதறி அழுதது. பாலூட்ட வேண்டிய அன்னையோ மயங்கி கிடந்தாள்.

குழந்தையின் அழுகுரல் காடெங்கும் எதிரொலித்தது. அப்போது தன் குட்டியை இழந்திருந்த ஒரு பெண்மான் அங்கே ஓடிவந்தது. அழும் குழந்தையைத் தாயன்போடு நக்கிக் கொடுத்த அந்த மான் குழந்தையின் வாயிலே பாலைச் சொரிந்தது.

பாலை அருந்திப் பசியாறிய குழந்தை மகிழ்ச்சியாய்ப் புன்னகை செய்தது. மானைப் பார்த்துக் கை, கால்களை ஆட்டி விளையாடத் தொடங்கியது.

அந்த மானைப் பிடிப்பதற்காக ஒரு வேடன் பதுங்கிப் பதுங்கி அதன் பின்னே வந்திருந்தான். அவன் ஒளிந்திருந்து நடப்பதைக் கவனித்தான். மான் குழந்தைக்குப் பாலூட்டிய அரிய காட்சியைக் கண்ட அவன் பெரிதும் வியப்படைந்தான்.

மன நெகிழ்ச்சியடைந்த அவன் கையிலிருந்த வில்லையும் அம்பையும் வீசி எறிந்தான். தன்னுடைய குடியிருப்புக்கு வேகமாக ஓடிச் சென்றான். உதவிக்கு பெண்களையும், ஆண்களையும் அழைத்துக் கொண்டு, “அரசியும்”, “குழந்தையும்” இருந்த மரத்தடிக்கு விரைந்து வந்தான்.

அதுவரை குழந்தைக்கு காவலாய் இருந்த மான் வேடர் கூட்டத்தைக் கண்டதும் ஓடி மறைந்தது.

வேடரினப் பெண்கள் அரசிக்கு மருந்துவம் பார்த்து அவளது மயக்கத்தைத் தெளிவித்தார்கள். பிறகு அரசியையும் குழந்தையையும் தங்கள் குடியிருப்புக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.

அரசியின் கதையைக் கேட்டறிந்த வேடர்கள் அவள் தங்களுடன் எத்தனைக் காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்றும் அவளுக்கும் குழைந்தைக்கும் பாதுகாப்பாகத் தாங்கள் எப்போதும் இருப்பதாகவும் கூறினார்கள். அரசி நெகிழ்ந்து போய் அவர்களுக்கு நன்றி கூறினாள்.

மறுநாள் குழந்தை பசியால் வீறிட்டழுதது. வாரி மார்போடு குழந்தையை அணைத்துக் கொண்ட அரசியும் மனம் வருந்தி அழுதாள். ஏனென்றால் குழந்தைக்கு பாலூட்ட அவளிடம் பால் சுர்க்கவில்லை.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்தது அந்தப் பெண்மான். அழும் குழந்தையின் வாயில் அமுதெனப் பாலைச் சொரிந்துவிட்டு ஓடிவிட்டது.

இந்த அரிய காட்சியை வேடர்களும், அரசியும் வியப்போடு பார்த்து மகிழ்ந்தார்கள்.

பிறகு நாள்தோறும் அந்தமான் தவறாது வந்து குழந்தைக்கு பாலூட்டிச் சென்றது. வேடர்களும் அந்த மானுக்கு எந்தத் தீங்கும் நேரிடாதபடி பார்த்துக் கொண்டார்கள். குழந்தை பால்குடி மறக்கும் வரை அந்த மான் குழந்தைக்குப் பாலூட்டி வந்தது.

தன் மகனை ஒரு மான் பாலூட்டி வளர்த்ததால் அரசி அவனுக்கு மான்மகன் என்று பெயரிட்டாள்.

மான்மகன் பால்குடியை மறந்த பிறகும் கூட நாள்தோறும்  அந்த மான் வந்து அவனோடு விளையாடிவிட்டுச் செல்லும். மான்மகனும் அந்த மான்மீது மிகவும் அன்பு கொண்டு வளர்ந்தான்.

இதற்கிடையில் ஒரு போலி சோதிடனின் வஞ்சகத்தால் அரசன் அரசியைத் துரத்தியடித்ததைக் கேள்விப்பட்ட சில நல்ல சோதிடர்கள் அரசனிடம் சென்று உண்மையை விளக்கினார்கள்.

வெகுண்டெழுந்த அரசன் அந்த போலிச் சோதிடனை தேடிப் பிடித்து விசாரித்து அவனுக்கு மரண தண்டனை விதித்தான். பிறகு வீரர்களை காட்டுக்குள் அனுப்பி அரசியைத் தேடிக் கண்டு பிடிக்க ஆணையிட்டான்.

வீரர்கள் தேடிக் கொண்டு வந்தபோது அரசி தன் மகனோடு காட்டிற்குள் நெடுந்தொலைவில் இருக்கும் வேடர் குடியிருப்புக்கு வந்து விட்டிருந்தாள்.

அரசியை கொண்டு வந்து விட்ட இடத்தருகில் தேடிப் பார்த்த வீரர்கள் அரசியை கண்டு பிடிக்க முடியவில்லை என்று அரசனிடம் சொன்னார்கள். அரசி காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

அரசன் மனமொடிந்து போனான். அன்று முதல் அரசன் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்க்கும் பழக்கத்தை விட்டொழித்தான். போலி சோதிடர்களை நாட்டை விட்டு துரத்தியடித்தான்.

அரசி, மற்றும் குழந்தையின் நினைவாகவே இருந்து கவலையுடன் நாட்களைக் கழிக்கத் தொடங்கினான். காலம் ஓடியது.

இங்கே மான்மகன் வளர்ந்து இளைஞனாகியிருந்தான். வேடர்களிடமிருந்து போர்களையை நன்கு கற்றுத் தேறியிருந்தான். மான்பால் குடித்து வளர்ந்த அவன் எல்லா விலங்குகள் மேலும் அன்பு செலுத்தினான். அதனால் அவன் எந்த ஒரு விலங்கையும் வேட்டையாடுவதில்லை. இறைச்சியையும் உண்பதில்லை.

விறகு வெட்டி அதைக் காட்டின் அந்தப்பக்கம் இருக்கும் ஊர்களுக்கு கொண்டுபோய் விற்று தன் அன்னையைக் காப்பாற்றிவந்தான்.

தனக்கு பால் புகட்டிக் காப்பாற்றிய மானைத் தன் குடிசையிலேயே வைத்துக் கொண்டாண் மான்மகன். அந்த மான் பகலெல்லாம் காட்டுக்குள் திரிந்து விட்டு மாலையானதும் மான்மகனின் குடிசைக்கு வந்து விடும்.

அங்கே அரண்மனையின் மிகுந்த மனச்சோர்வுற்று இருந்த அரசன் ஒருநாள் வேட்டைக்கு தனியாகக் கிளம்பினான். அரசன் காட்டுக்குள் ஙுழைந்து வந்தபோது இந்த மான் அவன் கண்ணில் பட்டது. உடனே அரசன் மானை குதிரையில் துரத்தினான்.

மான் உயிரைக் காத்துக் கொள்ள விரைந்து ஓடியது. மானைக் குறி வைத்து அம்பு எய்தான் அரசன். அம்பு மானைக் காயப்படுத்தியதே தவிர கொல்லவில்லை.

உடலில் பாய்ந்திருந்த அம்போடு மான் காட்டுக்குள் ஓடி மறைந்தது. அரசனும் அதைவிடாதுத் தேடிச் சென்றான்.

காயம்பட்ட மான் காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்த மான்மகனிடம் சென்று அடைக்கலம் புகுந்தது. காயம் பட்டு வந்து நிற்கும் மானைக்கண்டு பதறிதுடித்த மான்மகன் அம்பை உருவி எடுத்து விட்டுப் பச்சிலைகளைப் பறித்து மானின் காயத்தில் வைத்துக் கட்டினான்.

அப்போது அரசன் அங்கே வந்து  சேர்ந்தான். “ஏய் விறகு வெட்டியே! அந்த மானின் மீது அம்பு எய்தவன் நான். எனவே அந்த மான் எனக்குச் சொந்தம். அதை என்னிடம் ஒப்படைத்து விடு!” என்று மிரட்டினான் அரசன்.

“இந்த மான் நான் என் வீட்டில் வைத்து வளர்க்கும் மான்! இது என் உடைமை. இந்த மான் மீது அம்பெய்ததற்காக நான் உங்களைக் கொல்லாமல் விட்டதே பெரிது! ஆகவே உடனே இங்கிருந்து அகன்று விடுங்கள்.” என்று களங்காமல் விடையளித்தான் மான்மகன்.

“என்ன ஆணவம் உணக்கு!? நான் இந்த நாட்டின் அரசன். இந்த காடும் இதில் உள்ள மரங்கள் பறவைகள், விலங்குகள் அனைத்தும் என்னுடையவை! எனவே மானை என்னிடம் கொடுத்துவிட்டு உயிர் பிழைத்து செல்” என்று உறுமினான் அரசன்.

மான்மகன் சிரித்தான். “நீங்கள் அரசராய் இருந்தால் எனக்கென்ன வந்தது? இந்த மான் நான் குழந்தையாயிருந்த போதிலிருந்து  எனக்கு பாலூட்டிவளர்த்த மான். எனவே இந்த மான் எனக்குதாய் போல என் தாய்க்கு உரிமை கொண்டாட நீங்கள் யார்? முடிந்தால் என்னுடன் போரிட்டு வென்று இந்த மானை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அறைகூவல் விடுத்தான் மான்மகன்.

சினம் கொண்ட அரசன் வாளை உருவிக்கொண்டு குதிரையிலிருந்து குதித்தான். மான்மகனை நோக்கிப் பாய்ந்தான. மான்மகனும் தன் வாளை எடுத்துக்கொண்டு பாய்ந்தான். இருவரும் கடுமையாக மோதினார்கள்.

வயதாகி விட்ட படியால் அரசனால் மான்மகனின் வாள் வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. விரைவிலேயே அரசன் களைத்துப் போனான். இறுதியில் கையிலிருந்த வாள் பறந்து செல்ல அரசன் தடுமாறிக் கிழே விழுந்தான்.

அரசனின் நெஞ்சுக்கு நேரே தன் வாளை நீட்டி வெற்றிச் சிறிப்பு சிரித்தான் மான்மகன். அப்போது அரசன் மான்மகனின் கைவிரலிலிருந்த தன்னுடைய முத்திரை மோதிரத்தைக் கண்டு திடுக்கிட்டான்.  அது அரசன் அரசிக்கு அணிவித்திருந்த மோதிரம். அதை அரசி மான்மகனின் விரலிலே அணிவித்திருந்தாள்.

“தம்பி! என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்...நீ அணிந்திருக்கும் இந்த மோதிரம் உனக்கு எப்படிக் கிடைத்தது என்று சொல்வாயா?” என்று பதட்டத்தோடு கேட்டான் அரசன்.

வாளை உறையில் போட்ட மான்மகன் அரசனைத்தூக்கி விட்டான். “மன்னிக்க வேண்டும் அரசே! என் உயிரைக்கூடக் கொடுப்பேன் ஆனால் அந்த மானை மட்டும் யாருக்கும் தரமாட்டேன்” என்று கூறிவிட்டுப் பின்னர் தான் காட்டுக்குள் பிறந்து மான்பால் குடித்து வளர்ந்த கதையைத் தெரிவித்தான். அந்த மோதிரத்தை அன்னையினுடையது என்றும் தெரிவித்தான்.

அரசி மான்மகனுக்கு அவனுடைய தந்தை கைவிட்டு விட்டுச் சென்று விட்டார் என்று கூறியிருந்தாளே தவிர, இந்த நாட்டின் அரசன் அவன் தந்தை என்ற உண்மையைக் கூறியிருக்கவில்லை.

மான்மகனின் கதையைக் கேட்ட அரசன் கண்ணீர் பொங்கி வர “மகனே!” என்று கதறி அவனை அனைத்துக் கொண்டான். மான்மகனுக்கு ஒன்றுமே புரியாது திகைத்து நின்றான்.

அப்போது மகனுக்கு உணவு எடுத்துக் கொண்டு அங்கே வந்த அரசி அரசனைக் கண்டாள்... அரசனும் அவளைக் கண்டான்...

பிறகென்ன? பிரிந்தவர்கள் ஒன்று கூடினார்கள். வேடர்கள் மனம் மகிழ்ந்தார்கள், அரசன் தன் மனைவியையும் மகனையும் முறைப்படி அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

இப்போது அந்தமான் அரண்மனைப் பூங்காவில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறது.


பொறுமை வெற்றி தருமா?

மாதேஸ்வரன் மலையச் சுற்றி அடர்ந்த காடுகள் இருக்கின்றன. அடுக்கு அடுக்காக மலைகளும் பள்ளத்தாக்குகளும் அவற்றில் அடர்ந்த காடுகளும் உள்ளன. மிகவும் உள்ளே தள்ளி யாரும் நுழைய முடியாத ஒரு பெரிய காடு உள்ளது. சிங்கம் முதல் முயல் வரை எல்லாவிதமான காட்டு விலங்குகளும்  அங்கு உள்ளன.

அந்தக் காட்டில் சிங்கராஜா என்ற ஒரே ஒரு சிங்கம் மட்டும் இருந்தது. அது எல்லா விலங்குகளுக்கும் அரசனாக இருந்தது. வீணாக எந்த விலங்கையும் துன்பறுத்தாது. காட்டில் எந்தவித சண்டையும் குழப்பமும் இல்லாமல் பார்த்துக் கொண்டது. தான் “காட்டுக்கே ராஜா” என்ற தலைக்கனம் அதற்கு இல்லை. மாறாக, சிங்க ராஜா எல்லா விலங்குகளையும் நேசித்தது. சிறியமுயல் முதல் பெரிய யானை வரை எல்லா விலங்குகளுக்கும் உரிய மதிப்பளித்து நடத்தியது. அதனால் எல்லா விலங்குகளுக்கும் சிங்கராஜாவை மிகவும் பிடிக்கும்.
அவையும் சிங்கராஜாவை மிகுந்த மரியாதையுடன் நடத்தின. நீதியைத் தவிர்த்து எந்த அநியாயத் தீர்ப்பும் சொல்லாது.

காட்டு மரங்களில் வாழ்பவை குரங்குகள். அவை கிளைக்குக் கிளை தாவி எல்லா இடங்களிலும் ஒடித்திரியும். எனவே சில சமயங்களில் மற்ற விலங்குகளுடன் வீணாகச் சண்டைக்குப் போகும். இவ்வாறு தேவையில்லாமல் மற்ற விலங்குகளை வம்புக்கு இழுப்பதை சிங்கராஜா கண்டித்து வந்தது. ஆனால் குரங்குகள்,  “நாங்கள்தான் மரங்களில் தாவியும் நிலத்தில் ஓடியும் வாழக்கூடியவர்கள். மற்ற விலங்குகளை விட எங்களுக்கு ஆற்றல் அதிகம்” என்று தற்பெருமையாகப் பேசிக்கொள்ளும்.

குரங்குகள் சிங்கராஜாவை மதிப்பதில்லை. மற்ற விலங்குகளிடமும் எப்போதும் ஏதாவது வம்புச் சண்டைதான். குறும்புகள் செய்துகொண்டே இருக்கும். எனவே நாளடைவில் மற்ற விலங்குகளும் குரங்குகளைக் கண்டுகொள்வதில்லை.

ஒருநாள் சிங்கராஜா காட்டைச் சுற்றி வந்து இருந்தது. எதையோ எதையோ எதிர்பார்த்து நடந்துகொண்டிருந்த சிங்கம் ஒரு கிணரு போன்ற குழியில் விழுந்துவிட்டது. சற்று ஆழமான குழிதான். குழியிலிருந்து எழும்பி வெளியே தாவ முயற்ச்சித்தது. ஆழம் அதிகமானதால் வெளியே வர முடியவில்லை.

தான் இப்படி விழுந்து கிடப்பதை பெரிய அவமானமாகக் கருதியது சிங்கம். மற்ற விலங்குகள் பார்க்க நேரிட்டால் என்ன ஆகும்? எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தும் ஒரு வழியும் கிடைக்க வில்லை. எப்படியும் ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று காத்திருந்தது. நேரமாக ஆக, வேறு வழியின்றி “கர்...கர்...” என்று கர்ஜித்து மற்ற விலங்குகளை உதவிக்கு அழைத்தது.

சிங்கராஜாவின் குரல் கேட்டு அங்கு வந்தவை குரங்குகள்தாம். அவைதான் அருகிலிருந்த மரத்தில் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. சிங்கராஜா குழியில் விழுந்து கிடப்பதைப் பார்த்த குரங்குகள்  அதை ஏளனம் செய்தன.

“என்ன சிங்கராஜா, என்ன ஆச்சு உங்க சக்தியெல்லாம்? பாவம், குழியில மாட்டிக்கிட்டீங்க!” குரங்குகள் குறும்பு செய்து சிரிக்க ஆரம்பித்தன.

தகுதியால் சிறியவர்கள் மரியாதையின்றி பெரியவர்களைக் கேலி செய்து சிரிப்பது போல அந்தக் குரங்குகள் சிங்கராஜாவை மிகவும் கேலி செய்யத் தொடங்கின.

அது மட்டுமின்றி அந்தக் குரங்குகள், பாவம் அந்தச் சிங்கத்தின் மீது கல்லொறியத் தொடங்கின. அது அவர்களுக்கு வேடிக்கைக் குறும்பாக மாறிவிட்டது. சிறிதும் பொரிதுமாக கற்களால் அவை தாக்கிக் கொண்டேயிருந்தன. அந்த இடத்தில் கற்கள் தீர்ந்து போன பிறகும்கூட தூரத்திலிருந்து கற்களைப் பொறுக்கி வந்து தாக்கின.

அடுத்தவர் துன்பம் அவற்றுக்கு விளையாட்டு. சிங்கம் வேதனைப்படுவது அவற்றுக்கு இன்பமாக இருந்தது. அதை ஒரு கேலியான விளையாட்டாக அவை கருதின. சிங்கம் பொறுமையாக இருந்தது. கற்கள் தன்னைத் தாக்காது தற்காத்துக் கொண்டேயிருந்தது. அதன் அடர்ந்த உரோமம் கல்லடியிலிருந்து காத்தது. எப்படியும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் பொறுமையைக் கடைப்பிடித்தது.

“பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது பழமொழி அல்லவா? நம்பிக்கையும் பொறுமையும் எப்போதும் வீண் போகாது என்று அதற்குத் தெரியும்.

குரங்குகள் குழிக்குள் எட்டிப் பார்பதும் சிரிப்பதும் கற்களால் தாக்குவதுமாக தங்கள் ஈன விளையாட்டைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. சிங்கராஜா தளர்ந்து வீழ்வதைக் காண்பதே அவற்றின் லட்சியம். நீண்ட நேரம் இது தொடர்ந்தது.

“திடீர்” என்று ஒரே தாவலில் சிங்கம் குழியை விட்டு வெளியே பாய்ந்தது. குரங்குகள் நடுவில் சிங்கம் சீறிப் பாய்ந்து வந்ததைக் கண்ட குரங்குகள் வெலவெலத்துப் போயின.

சிங்கராஜா தங்களை பழிக்குப் பழி வாங்கிவிடும் என்று அவை பயந்து நடுங்கிக் கொண்டு நின்றன.

“சிங்கராஜா.... எங்களை மன்னித்து விடுங்கள். சிறியோர் நாங்கள் அறிவில்லாமல் பெரும் பிழை செய்துவிட்டோம்” எல்லா குரங்குகளும் கெஞ்சத் தொடங்கின.

“உங்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நீங்கள் எனக்குத் தந்த உபத்திரவம்தான் எனக்கு உதவியாக மாறியது.”

குரங்குகள் ஒன்றும் புரியாமல் விழித்தன. “நாம் சிங்கத்தைத் துன்புறுத்தியது எப்படி அதற்கு உதவியாக மாறியது?” என்று குழம்பி நின்றன.

“நீங்கள் என்னைத் துன்புறுத்து வதற்காக எறிந்த கற்கள்தான் எனது தப்பிக்கும் முயற்சிக்குப் படிக்கட்டுகளாக அமைந்தன. எந்தத் தோல்வியும் முடிவு அல்ல. அவை வெற்றியின் படிக்கட்டுகள்தான்.”

ஆம் பொறுமை வெற்றி தரும். குரங்குகள் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சென்றன. அவற்றின் சிறுமைப் புத்தி மாறியது. சிங்கம் தன் பொறுமையின் வெற்றியை கம்பீரமாகப் பறைசாற்றிக் கொண்டே கர்ஜனை செய்து நடந்தது.

பேராசை

அந்தக் கிராமத்திலுள்ள பிரபலமான மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அன்று இரவு மாஜிக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் கோயிலில் திரண்டிருந்தனர். மந்திரவாதி ஒருவர் திறந்த வெளியில் தனது சாகச மாஜிக் வித்தைகளை காண்பித்துக் கொண்டிருந்தார்.

தொப்பிக்குள்ளிருந்து முயல் குட்டியை வரவழைத்ததும், கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இவற்றை பக்கத்துப் புதரில் பதுங்கியிருநத் புலி ஒன்று கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கும் ஒரு புலிக் குட்டியை வரவழைத்துக் கொடுக்கும்படி மந்திரவாதியை நிர்பந்திக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தது.

மாஜிக் ஷோ முடிந்ததும் மூட்டையைக் கட்டிக்கொண்டு மந்திரவாதி புறப்பட்டார். போகும் வழியில் புலி அவரை இடைமறித்தது. மந்திரவாதியை நோக்கி “உன் தொப்பியிலிருந்து முயல் குட்டியை வரவழைத்தாய். அதேப் போல எனக்கு ஒரு புலிக்குட்டியை வரவழைத்துக் கொடு. இது எனது நீண்ட நாள் ஆசை” என புலி பிடிவாதம் செய்தது.

மந்திரவாதிக்கோ ஒர் இக்கட்டான நிலை ஏற்பட்டுவிட்டது. புலியிடமிருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்த மந்திரவாதி சமாளித்துக் கொண்டு, “முயல் குட்டி எப்போதும் என் தொப்பியில் இருக்கும். மிருகங்களை என்னால் உடனடியாக வரவழைக்க முடியாது. இருந்தாலும் உனக்காக வரவழைத்துத் தருகிறேன். அதற்கு ஒருமாத கால அவகாசம் பிடிக்கும்” என்றார் மந்திரவாதி. புலி சம்மதித்தது. அதுவரை புலி சோற்றையும், பாலையும் உண்டு வாழ வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார் மந்திரவாதி. நிபந்தனைக்கு புலி ஒத்துக் கொண்டதும் மந்திரவாதி தனது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டார்.

ஒரு மாதம் கடந்து. மந்திரவாதி மீண்டும் அக்கிராமத்திற்கு வருகை புரிந்தார். புலி மந்திரவாதியைக் கண்டு கொண்டது. சரியான உணவு இல்லாமல் உடல் மெலிந்து போன புலி தனக்கொரு குட்டியை வரவழைத்துக் கொடுக்கும்படி மந்திரவாதியை கேட்டது.

உடனே மந்திரவாதி கிராமவாசிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.
“உங்களுக்கு சிறப்பான மாஜிக் ஷோ நடத்தப் போகிறேன். முயல் குட்டிக்குப் பதில் தொப்பியிலிருந்து அதன் இனத்தைச் சேர்ந்த பிராணி ஒன்றை வரவழைக்கப் போகிறேன்” என கூட்டத்தினரை நோக்கி மந்திரவாதி கூறினார்.

தொப்பியைக் கவிழ்த்துவிட்டு சில மந்திரங்களை ஓதினார். சிறிது நேரம் சென்று தொப்பியை தூக்கியதும் பூனைக் குட்டி ஒன்று மியாவ் என கத்திக் கொண்டு தலையை நீட்டியது. கிராமவாசிகளின் சிரிப்பொலியைக் கேட்ட புலி ஆவேசமடைந்தது. புலி மெலிந்து விட்டதால் சப்தம் கூட எழுப்ப முடியவில்லை. மந்திரவாதி மீது ஆத்திரம் அடைந்த போதும் பேராசையால் எற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் புதருக்குள் சென்று மறைந்தது புலி.

மூட நம்பிக்கையால் விளைந்த கேடு.


முன்னொரு காலத்தில் ராமாபுரி என்ற ஒரு நாடு இருந்தது. அதை ராஜகம்சன் என்ற அரசன் ஆண்டுவந்தான். மாதம் மும்மாரி பொழிய எல்லாவளமும் பெற்று செழிப்பாக இருந்தது அந்தப் பூமி. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர். கொலை, கொள்ளை என எந்தக் குற்றமும் நடப்பதில்லை. ஏனெனில், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து வந்தது. மக்களை நேசிக்கக் கூடிய ராணுவத்தைக் கொண்ட நாடு அது.

ராமாபுரிக்கு அண்டை நாடு தாணடவராயன் ஆளும்  விஜயபுரி. அவன் தந்திரமானவன், அதே சமயம் பேராசைக்காரனும் கூட. அவனும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிந்து வந்தான். மக்களை எந்தக் குறையும் இல்லாமல் ஆண்டான். அவனுக்கு ராமாபுரியின் மீது எப்பொழுதும் ஒரு கண் இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென துடியாய் துடித்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையையும், ராணுவத்தின் வீரத்தையும் கண்டு அவன் மிகவும் யோசித்தான். அந்த நாட்டின் பலமே பொருளாதாரத்தில் தான் இருக்கிறது. அதைக் குலைத்தால் அங்கே மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு...அதையே நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நாம் படையெடுத்து விடலாம் என மந்திரி கூறியதை பல முறை சிந்தித்துப் பார்த்தான்.

அப்போதுதான் திடீரென்று அவனுடைய மனதுக்குள் ஒரு யோசனைப் பிறந்தது. ராமாபுரி மக்கள் வலிமையானவர்களாக இருந்தாலும், மூடநம்பிக்கைச் சேற்றில் மிகவும் ஊறியவர்கள். ஏன் இந்த ஒரு காரணத்தை வைத்து ஏதாவது செய்ய முடியாதா என்று யோசித்தான் தாண்டவராயன். உடனே மந்திரிகளை அழைத்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

ராமாபுரிக்கு சாமியார் ஒருவர் வந்தார். ஒரு கோயில் மண்டபத்தில் அவர் தங்கிக் கொண்டார். புதிதாக சாமியார் வந்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டதும், அந்நாட்டு மக்கள் அலை அலையாய் வந்து அந்தச் சாமியாரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். வெகு விரைவிலேயே அந்தச் சாமியாரின் புகழ் பரவியது.

சாமியாரின் வருகையை அறிந்த ராமாபுரி மன்னன் ராஜகம்சன். அவரை தன்னுடைய அரண்மனைக்கு அழைத்துவர உத்தரவிட்டான். “சிறிது காலத்திற்கு நீங்கள் அரண்மனையில் தங்கி இந்த இடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்” என்று மன்னன் கேட்டுக் கொண்டான். துறவியும் உடனே சம்மதித்தார். ஒரு வாரம் சென்றது. துறவிக்கு ராஜ உபசாரம்தான். அவர் தானாக எதையும் கேட்கவில்லை. அதே சமயம் கொடுப்பதையும் மறுக்கவில்லை. அன்று ஒரு நாள் மன்னன் ராஜகம்சன் துறவியின் அறைக்கு வந்தான்.

அங்கு துறவி சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்ட மன்னன் “ என்ன காரணம்?” என்று பணிவாகக் கேட்டான். முதலில் வாய் திறக்காத அந்தத் துறவி, மன்னன் சிறிது வலியுறுத்திக் கேட்ட பின்னர் பேச ஆரம்பித்தார்.

“மன்னா! உங்கள் நாட்டை கேடு சூழ்ந்துள்ளது” என்றார்.

இதைக் கேட்ட மன்னன் திகைப்படைந்தான். “என்ன சொல்லுகிறீர்கள்?”

“ஆம் மன்னா! இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆபத்து காத்திருக்கிறது. அவர்களின் உயிர் அவர்களின் கையில் இல்லை” என்றார் துறவி. இதைக் கேட்டதும் மன்னன் அதிர்ச்சியடைந்தான்.

“நீங்கள் கூறுவது வியப்பாகவும், அதிர்ச்சியாவும் உள்ளதே!” என்றான் மன்னன்.

“உன்மை மன்னா! நான் கூறுவது உண்மை. உயிரைப் பறிக்கும் தீய சக்தியின் தற்போதைய இருப்பு எங்குள்ளது என்பதை சக்தியின் அருளால் நாம் கண்டு கொண்டோம். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பச்சை மரத்திலும் அந்த தீயசக்தி குடிகொண்டுள்ளது. வரும் அமாவாசை அன்று அது உயிர் பெற்று வெளியே வரும். மக்கள், படைவீரர்கள் ஆகியோர் அதன் இலக்கு!”

“நம்பவே முடியவில்லையே.”

“நம்பித்தான் ஆக வேண்டும். நான் சொல்வதை சொல்லிவிட்டேன். தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்.”

“எவ்வாறு தடுப்பது?”

“அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. அதற்குள் தீய சக்தி குடியிருக்கும் மரங்களை வெட்டி அழிக்க வேண்டும்.

“அப்படிப்பட்ட மரங்களை எவ்வாறு அடையாளம் காண்பது?

“அடையாளம் காண வேண்டிய அவசியமே கிடையாது. இருக்கும் ஒவ்வொரு மரத்திலும் தீய சக்தியின் இருப்பு உள்ளது.”

“அய்யய்யோ! அப்படி என்றால் ஒவ்வொரு மரத்தையும் வெட்டி ஆக வேண்டுமா?”

“நிச்சயமாக வேறு மார்க்கமே இல்லை. மரம் கூட வேறொன்று நட்டுவிடலாம். ஆனால் மனிதரை...”

“உண்மைதான்! இப்போதே ஆணையிடுகிறேன்.”

படை வீரர்களுக்குத் தகவல் அனுப்பட்டது. அவர்கள் துரிதரீதியில் செயல்பட்டு அனைத்து மரங்களையும் வெட்டினர். மன்னன் துறவிக்கு நன்றி தெரிவித்தான். பரிசு கொடுக்கவும் முனைந்தான். ஆனால் துறவி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாந்தமாக புறப்பட்டுப் போனார். மக்களின் உயிரைக் காப்பாற்ற வந்த அந்தத் துறவியை எல்லோரும் மனதில் நினைத்து வழிபட்டனர்.

அமாவாசை கழிந்தது. எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் விடுகிற அசுத்தக் காற்றை எடுத்துக் கொண்டு தூயக் காற்றை கொடுக்க இப்போது ஒரு மரமும் அந்த நாட்டில் இல்லை. மக்களும் சரி, மன்னனும் சரி இதையெல்லாம் உணரவேயில்லை.

இரண்டு, மூன்று  நாளாக  ஓய்வு இல்லாமல் வேலை செய்த களைப்பு காரணமாக மக்களும், வீரர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது தான் அது நடந்தது.

வெளியே போர் முரசு ஒலிக்கும் சத்தம் கேட்டது. அரண்மனைக்கு வெளியே வந்து பார்த்தான் மன்னன் ராஜகம்சன். விஜயபுரி நாட்டு கொடி பறக்க ஒரு பெரும்படை திரண்டு வந்திருந்தது. “முன் அறிவிப்பு இன்றியே போர் தொடுக்க தாண்டவராயன் வந்து விட்டானே...அவன் புத்தியே இதுதான்” என நினைத்த மன்னன் அவசரமாக படைகளுக்கு ஆனணயிட்டான். ஆனால், உடல் களைப்பு காரணமாக யாருமே செயல்பட முடியவில்லை.

சிறிது நேரத்தில்... எது நட்க்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது. ராமாபுரியைக் கைப்பற்றினான் தான்டவராயன். மன்னன், மந்திரிகள், படைவீரர்கள், மக்கள் எல்லோருமே அவன் பிடியில். கை விலங்கு பூட்டப்பட்ட ராஜகம்சனைப் பார்த்து தாண்டவராயன் பேசினான்.

“என்ன ராஜகம்சா! நான் அனுப்பிய துறவி நன்றாகத் தான் வேலை செய்திருக்கிறார். வலிமையுள்ள மக்களும், படையும் கொண்ட நாடு ராமாபுரி. ஆனால், மூட நம்பிக்கைச் சேற்றில் சிக்கியிருந்தீர்கள். உங்களை அடிமைப்படுத்த அதையே நான் வாய்ப்பாகக் கொண்டேன்”. துறவி இங்கே வந்து நடந்து கொண்டதெல்லாம் நான் வகுத்த திட்டப்படியே. முட்டாள்களே! மரத்தில் தீய சக்தியாவது, அது மக்களை அழிப்பதாவது. இக்கணம் முதற்கொண்டு நீங்கள் எனது அடிமைகள். நான் உத்தரவிடுவதை தட்டாமல் நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.

“ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக சீன நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அடுத்து, எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டதோ அதே அளவுக்கு புதிய மரங்கள் நடப்பட வேண்டும்”. என்னுடைய இந்த முதல் உத்தரவை நிறைவேற்றி விட்டு வாருங்கள் என்று அட்டகாசமாய் சிரித்தவாரே கூறினான் தாண்டவராயன். ராஜகம்சன் ஏதும் பேசாது திரும்பி நடந்தான். மக்களும் அவனைப் பின் தொடர்ந்து தலைக்குனிந்து  சென்றனர்.

நீதி: மூட நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உண்மை நிலையை உணராவிடில். வாழ்க்கை எனும் காலசக்கரத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவது உறுதி.

உணவுக்கு மரியாதை

உணவுக்கு மரியாதை

திருமண வீட்டில் விருந்து நடந்து கொண்டிருந்தது. கதிரவனும், அவனது அம்மாவும் சாப்பிட அமர்ந்தனர்.

அப்போது கதிரவனின் ஆசிரியர் கந்தசாமியும் விருந்திற்க்கு வந்தார்.

இதை கவனித்த கதிரவன், தன் பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில் ஆசிரியரை அமர அழைத்தான்.

ஆசிரியர் கதிரவன் பக்கத்தில் அமர்ந்தார். அவனது அம்மா, ஆசிரியருக்கு வணக்கம் செய்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

உணவு பரிமாறப்பட்டதும் அனைவரும் சாப்பிடத் தயாரானார்கள்.

ஆசிரியர் காலணியைக் கழற்றாமல் சாப்பிடப் போவதைக் கண்ட கதிரவன், “அய்யா காலணியை கழற்றிவிட்டுச் சாப்பிடுங்க” என்றான்.

இப்படியே சாப்பிட்டால் என்ன? காலில் கிருமிகள் தொற்றாதல்லவா? என்று பதிலளித்தார் ஆசிரியர்.

“அய்யா உணவு கடவுளுக்குச் சமம் என்பார்கள். கோவிலுக்குள் போகும்போது காலணியை கழற்றி விட்டு தானே உள்ளே போகிறோம். அப்போ உணவு சாப்பிடும்போதும் காலணியை கழற்றிவிட்டு தானே சாப்பிடனும்.

‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்’ என்று மணிமேகலை சொல்றதா நீங்களே பாடம் நடத்தி இருக்கீங்க. அப்போ உணவு உயிருக்கும்ச் சமம் இல்லையா? அந்த உணவுக்கு மரியாதை கொடுக்கணும் இல்லையா?

அதனால்தானே சாமிக்கு பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், தழுகை, எலுமிச்சை சாதம், படைத்து பக்தர்களுக்குத் தர்றாங்க? அன்னதானமும் செய்றாங்க....’ என்று பெரும் சொற்பொழிவுபோல ஆசிரியருக்கு தன் கருத்தை விளக்கினான்.

ஆசிரியருக்கு தனது தவறை எண்ணி நாணம் ஏற்பட்டாலும், அதேவேளையில் தன் மாணவனின் அறிவுக்கூர்மையை எண்ணிப் பெருமையும் ஏற்பட்டது.

“நீ சொல்வது சரிதான் கதிரவா” என்ற ஆசிரியர். காலணியை உடனே கழற்றினார்.

அப்படியே ‘வெரி குட் பாய்’ என்று கதிரவனைப் பாராட்டி தனது இலையில் வைத்த இனிப்பை கதிரவன் இலையில் எடுத்து வைத்து “சாப்பிடு” என்றார் ஆசிரியர்.

இதைக்கண்ட கதிரவனின் அம்மா, மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

நீதி: உன்மையின் உனர்வு மனித இனத்தில் சிரியவர் முதல் பெரியோர்வரை யாரிடத்தில் வேண்டுமானாலும் இருக்களாம். அதனை ஆமோதித்து, கடைபிடிப்பது நமது கடமையாகும்.

என் பெயர் என்ன?

எச்சமு பாட்டி தினம் மத்யானம் வெயில் வேளையில் நல்ல தயிர் சாத்தைப் பிசைஞ்சு வச்சுன்டு, சச்சு, கோண்டு, சீனு, பத்மா எல்லோருக்கும் கையில் அன்போட உருண்டை பிடிச்சுப் போடுவா.

ஆனா வெறுமே சாதம் மட்டும் போட்ட குழந்தேள் சாப்பிட மாட்ட. கதையும் சொன்னாதான் சாதம் இறங்கும்.


அன்னிக்கும் கோண்டு கேட்டான். “பாட்டி... இன்னிக்குப் பெர்..ரீய கதையா, வேடிக்கைக் கதையா சொல்லு பாட்டி”.

ஒரு ஊர்ல ஒரு ஈ இருந்தூச்சாம். அதுக்குத் திடீர்னு தன்னோட பேர் மறந்துபோயிடுச்சாம். பக்கத்து மாட்டுக் கொட்டில்ல, கொழு கொழு-ன்னு அழகான கன்னுக்குட்டி நின்னுட்டிருந்துச் சாம். அதுகிட்டப் போயி. “கொழு கொழு கன்றே! என் பெயர் என்ன?”- ன்னு கேட்டுச்சாம். உடனே கன்னுக் குட்டி. “எனக்குத் தெரியாது... என்னை ஈன்ற தாய்கிட்டேப் போய்க் கேளு”- ன்னு சொல்லுச்சாம்.

உடனே அதோட தாயான பசுமாட்டுகிட்டேப் போய். “கொழு கொழு கன்றே! கன்றின் தாயே! என் பெயர் என்ன?”. –ன்னு கேட்டுச்சாம். உடனே அந்தப் பசு. “எனக்குத் தெரியாது. என்னை மேய்க்கும் இடையன்கிட்டே கேளு” –ன்னு சொல்லி அனுப்பிடுச்சாம்.

ஈ உடனே இடையனிடம் போய் அதே கேள்வியைக் கேட்டுச்சு. இடையனோ. “எனக்குத் தெரியாது. என்கையில் இருக்கும் கோலிடம் (கம்பு) கேளு” – ன்னு சொன்னான்.

கோல்கிட்டேப் போன ஈ, “கொழு கொழு கன்றே! கன்றின் தாயே! தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக்கோலே! என் பெயர் என்ன” –ன்னு கேட்டது. “எனக்குத் தெரியாது. நான் வளர்ந்த மரத்திடம் கேளு” –ன்னு பதில் சொல்லுச்சு கோல்.

மரத்துக்கிட்ட பறந்து போச்சு ஈ. மேலே சொன்ன மாதிரியே மரத்திடம் கேட்டது. மரம் உடனே. “எனக்குத் தெரியாது. என் கிளையின் மேல் நிற்கும் கொக்கைக் கேளு” –ன்னு சொல்லிடுச்சி.

கொக்குக்கிட்ட போச்சு ஈ “கொழு கொழு” –ன்னு ஆரம்பிச்சு. “மரத்தின் கிளைக் கொக்கே... என் பெயர் என்ன?” –ன்னு முடிச்சது. “எனக்குத் தெரியாது... நான் வசிக்கும் குளத்திடம் போய்க் கேளு” –ன்னு சொல்லுச்சு கொக்கு.

ஈ ரொம்ப வருத்தப்பட்டுச்சு. ‘ச்சே! யாருக்குமே தெரியலையே!’ –ன்னு புலம்புச்சு. ‘சரி... குளத்தைக் கேட்டுப் பாப்போம்’ –ன்னு கேட்டுச்சு. “எனக்குத் தெரியாது. என்னுள்ளே வசிக்கும் மீன் கிட்டே கேட்டுப் பாரு” –ன்னு சொல்லிடுச்சு.

மீன்கிட்டப் போன ஈ. “எல்லாரும் தெரியாது-ங்கிறாங்க.. நீயாவது சொல்லேன்..” –ன்னு கேட்டது. “என்னனைப் பிடிக்கும் வலையனிடம் கேளு” –ன்னு சொன்னது மீன்.

வலையன்கிட்டேப் போன ஈ, இது வரை தான் கேட்ட பேர்களை எல்லாம் வரிசையாகச் சொல்லி. “யாருக்குமே தெரியலையாம்! கொழுகொழு கன்றிலேர்ந்து. குளத்திலேயிருக்க மீன் வரை கேட்டுட்டேன்.. உன்னைக் கேக்கச் சொன்னாங்க... என் பெயர் என்ன” –ன்னு பாவமாக் கேட்டுச்சாம். “எனக்குத் தெரியாதே!” –ன்னு சொன்ன வலையன். வேணா என் கையிலிருக்க மீன் சட்டியைக் கேளு” –ன்னு சொன்னானம்.


சட்டியைக் கேட்டுச்சாம் ஈ. அந்தச் சட்டி, ‘எனக்குத் தெரியாது’ –ன்னு சொல்லி. ‘என்னைப் பண்ணிய குயவன்கிட்டே கேளு’ –ன்னு சொல்லிடுச்சாம்.


குயவன் கிட்டே கேட்டது ஈ. அவன் ‘என் கையிலேர்க்க மண்ணைக் கேளு’ –ன்னானாம்.

ஈ வந்து மண்ணைக் கேட்டுச்சு. மண்ணும் “எனக்குத் தெரியாது... என் மேல் வளர்ந்திருக்கும் புல்லைக் கேளு” –ன்னு சொல்லுச்சு.

‘புல்லே. புல்லே என் பெயர் என்ன?’ –ன்னு அலுத்துப் போய் ரொம்ப பரிதாபமாக் கேட்டுச்சு ஈ. “எனக்கு என்ன தெரியும்? என்னைத் தின்னும் குதிரையிடம் கேளு” –ன்னு சொல்லுச்சு புல்லு.

ஈ –க்கு அழுகையே வந்துவிட்டது. பகவானே! இப்படி அலைய வடுறாளே! என் பேர் இப்படியா மறந்துபோகும்!” –னு அலுத்துக்கிட்டே குதிரைகிட்டே போச்சு ஈ. முதல்லேந்து ஆரம்பிச்சு, எல்லாம் சொல்லி, “புல்லைத் தின்னும் குதிரையே என் பெயர் என்ன?” –ன்னு கேட்டுச்சு. குதிரைக்கு ஈயைப்பார்த்து சிரிப்பாக வந்துச்சாம். தன்னோட பல்லைக் காமிக்சு, ‘ஈ...ஈ...’ –ன்னு பெரிசா சிரிச்சுச்சாம் குதிரை.


இதைக் கேட்டதும் ஈ –க்கு சந்தோசம் தாங்கலை. குதிரைக்கு ஒரு முத்தம் குடுத்து. “என் பெயர் ஈ... என் பெயர் ஈ...” –ன்னு ஜாலியா சொல்லிண்டே பறந்துடுச்சாம்.

கதையும் முடிஞ்சது.

  


எண்ணம்


துறவி ஒருவர், அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார். மருத்துவம், சோதிடம் சொல்லி கிராம மக்களுக்கு உதவி வந்தார். அதற்க்காக காசு, பணம் எதுவும் வாங்குவதில்லை.

ஒரு வேளை உணவு மட்டும் யாசித்து உண்பார். உணவு அதிகமாக இருந்தால் நாய், பறவைகள் என்று பிராணிகளுக்கு படைத்து விடுவார். அல்லது யாருக்காவது கொடுத்து விடுவார்.

அங்கு ஒரு மூதாட்டியும் வசித்து வந்தாள். அவளுக்கு துணையாக ஒரே மகன். அவனும் பெரிய குடிகாரன். வேலைக்குச் செல்வதில்லை, ஊரைச் சுற்றி வருவான்.

வீட்டுக்கு வந்து தாயை அதட்டி, மிரட்டி சாப்பிட்டுவந்துவிட்டுச் செல்வான். அம்மா வேலை செய்து வைத்திருக்கும் பணத்தையும் பிடுங்கி கொண்டுபோய்விடுவான்.

மகனின் மோசமான நிலையைப் பார்த்துப் பழகிய மூதாட்டிக்கு வாழ்க்கையே துன்பமாகத் தெரியும். யாரைக் கண்டாலும் வெறுப்புடன் பேசுவாள். திட்டித் தீர்ப்பாள். அதிலும் அவளிடம் அதிகமாக திட்டு வாங்குவதில் அந்த துறவி முக்கியமானவர்.

சாதுவாக இருப்பார் என்பதால் மூதாட்டிக்கு துறவியை கண்டாலே பிடிக்காது. இஷ்டம்போல் திட்டித் தீர்த்துவிடுவாள். ஆனால் மூதாட்டியின் வெறுப்பையோ, கோபத்தையோ துறவி சற்றும் பொருட்படுத்துவதில்லை.

ஒருநாள் மகன், மூதாட்டியை அடித்து உதைத்து கையில் இருந்த பணத்தை எல்லாம் பிடுங்கிப் போயிருந்த சமயம், துறவி பிச்சை கேட்டு வந்தார். மிகுந்த வருத்தத்தில் இருந்த மூதாட்டிக்கு துறவியைக் கண்டதும் கடும் கோபம் ஏற்பட்டது.

‘வேலை செய்றவங்களே நிம்மதியாகக் சாப்பிட முடியவில்லை. இவன் ஊரைச் சுற்றிக் கொண்டு வேளாவேளைக்கு பிச்சை எடுத்து தின்கிறான்.. இவன் கதையை முடித்துவிட வேண்டும்’ என்று எண்ணிய மூதாட்டி, சோற்றில் விஷம் வைத்து எடுத்து வந்து துறவிக்குப் போட்டாள்.

அதை வாங்கிக் கொண்டு, தான் வழக்கமாக இருக்கும் குடிலுக்குச் சென்றார் துறவி. அவர் சாப்பிடத் தயாரானபோது அங்கே மூதாட்டியின் குடிகார மகன் வந்து சேர்ந்தான்.

தள்ளாடியபடி வந்த அவன், ‘யோவ் சாமியாரே சாப்பாடு வச்சிருக்கியா?’ என்று கேட்டுக் கொண்டே பிச்சைப் பாத்திரத்தை எடுத்தான்.

துறவியோ, அவன் சாப்பிட்டது போக மீதியை நாம் உண்ணலாம் என அமைதி காத்தார்.

குடித்துவிட்டு வந்ததிருந்த அவன் பேராசையுடன் எல்லா சோற்றையும் சாப்பிட்டுவிட்டான். அடுத்த கணம் அங்கேயே மயங்கி விழுந்தான்.

அவனது நாடித்துடிப்பை சரிபார்த்த துறவி, மருந்து கொடுத்துப் பார்த்தார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இறந்துபோனான்.

தகவல் மூதாட்டிக்கு தெரிவிக்கப்பட்டது. ‘ஐயய்யோ! நான் உமக்குக் கொடுத்த உணவையா எனது மகனுக்கு கொடுத்தீர்? அதில் உம்மை சாகடிக்க விஷம் கலந்திருந்தேனே. இப்போது என் தவறுக்கு எனது ஒரே மகனையும் இழந்துவிட்டேனே?’ என்று கதறி அழுதாள் மூதாட்டி.

கதையின் நீதி: “கெடுவான் கேடு நினைப்பான்”, தீமையை எண்ணிவிட்டு நன்மையை அடையமுடியாது. என்பதை இந்த சிறுகதை விளக்குகிறது.