வியாழன், 4 ஏப்ரல், 2013

மனசாட்சிசாமிநாதன் தன் மகன் சரவணனின் வரவை எதிர்பார்த்தபடியே பள்ளியின் வரவேற்பறையில் காத்திருந்தார்.

திடீரென்று பள்ளியில் இருந்து அவனை அழைத்திருந்தார் தலமை ஆசிரியர்.

‘என்ன விஷயமாக இருக்கும்? எதற்காக கூப்பிட்டிருப்பாங்க’ என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டு யோசித்தபடி இருந்தார் சாமிநாதன்.

சரவணன் சந்தோஷமாக ஓடி வந்தான்.

தந்தை கேட்பதற்கு முன்பே, மகிழ்ச்சியில் திளைத்தபடி மளமளவென்று பள்ளியில் நடந்ததைக் கூறத் தொடங்கினான் அவன்...

“அப்பா இந்தாங்க சுவீட் எடுத்துக்கோங்க...” என்று லட்டுவை கொடுத்தபடியே பேசினான்.

“அப்பா நான்தான் ‘ஸ்கூல் பஸ்ட் மார்க் வாங்கியிருக்கேன். வருஷா வருஷம் ஸ்கூல் பஸ்ட் மார்க் வாங்குறவங்களுக்கு எங்க ஸ்கூல்ல முன்னாடி படிச்ச சாமிநாதன்ங்கிற சார் 10 ஆயிரம் ரூபா பரிசு தருவாராம்.

இந்த வருஷம் நான் பஸ்ட் மார்க் வாங்கினதாலே என்னைக் கூப்பிட்டு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாங்க. சாமிநாதன் சார், உதவி கலெக்டரா இருக்கராம். தான் செய்ற உதவி வெளியே தெரியக்கூடாதுன்னு, ரொம்ப சிம்பளா என்கிட்டேயே கொடுத்துட்டாங்கப்பா” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான் சரவணன்.

மகன் கூறியதைக் கேட்டு சாமிநாதன் சந்தோஷப்பட்டார்.

“வெரிகுட் சரவணா, இந்தப் பணத்தை என்ன செய்யலாமனு நினைக்கிறே” என்று கேட்டார்.

ஓரு நிமிடம் யோசித்துவிட்டு சரவணன் பதில் சொன்னான்.


“அப்பா உங்க பிரண்ட் ரவியோட மகன் கிருஷ்ணன் எங்க ஸ்கூல்லதான் படிக்கிறான். ரவி அங்கிள் இறந்து போயிட்டதால அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க இல்லப்பா. கிருஷ்ணன் இந்த வருஷம் 10-ம் வகுப்பு போவான். அவங்க அக்காவும் பிலஸ்-2 போவாங்க. அதனால அவங்களுக்கு செலவுக்குத் தேவைப்படும். இதை அவங்களுக்கே கொடுத்துடலாம்பா” என்றான் சரவணன்.

மகனின் பேச்சு தூக்கி வாரி போட்டது. ஒரு வினாடி அப்படியே ஆடிப்போய்விட்டார். அவருடைய மனதில் மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து போனது.

அன்று தனது வீட்டிற்கு வந்திருந்தான் நண்பன் ரவி.

“சாமிநாதா எனக்கு வரவேண்டிய அரியர் பணம் எல்லாம் வந்துவிட்டது. அடுத்தவாரம் என் மகளுக்கு பர்த்டே. இந்த கவர்லே பத்தாயிரம் இருக்கு. அவள் அடிக்கடி தங்கக் கம்மல் வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்கா. இந்த பர்த்டேக்கு சர்ப்பிரைஸ்ஸாக வாங்கிக் கொடுக்கப் போறேன்.

வீட்டுக்கு கொண்டு போனா செலவாயிடும். பத்திரமா நீயே வெச்சிரு. யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமா எங்க வீட்டுக்கு...” என்று கூறி பணத்தை கொடுத்துவிட்டுப் போனவன் தன் வீட்டிற்குப் போய்ச் சேரவில்லை. வழியில் லாரி மோதி இறந்து போனான்.

சாமிநாதனுக்கு பண ஆசை கண்னை மறைத்தது. பணம் கொடுத்தது யாருக்கும் தெரியாது என்பதால் அதை அவனே வைத்துக் கொண்டான்.

மூன்று மாதங்களாக மனசாட்சியின் உறுத்தலை கண்டு கொள்ளாமல் இருந்த சாமிநதனுக்கு மகனின் பேச்சு, தன் நிலையை எண்ணி வெக்கப்பட வைத்தது.

‘துண்பம் வரும் நேரத்தில் நண்பனுக்கு உதவ வேண்டிய நாம், அவன் கொடுத்த பணத்தைக்கூட மறைத்து வைத்துக் கொண்டோமே’ என்று வருந்தினார்.


“வயதில் சிறியவனான தன் மகன், மனதளவில் தன்னைவிட உயர்ந்து நிற்கிறானே?” என்ற எண்ணம் சாமிநாதனின் மனதை அரித்தது.

தன் மகனை கட்டிப்பிடித்து அன்பு முத்தம் வைத்ததோடு, கண்ணீரையும் உதித்தார்.

‘ஏன்பா அழறீங்க...” என்று கேட்டான் சரவணன்.


உண்மையை வெளிப்படச் சொல்ல முடியாத சாமிநாதன், ‘உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது’ என்று கூறிய அவர், இன்னும் பத்தாயிரம் சேர்த்துக் கொடுத்துவிடுவோம் என்று தனது கடனைத் தீர்தார்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக