செவ்வாய், 2 ஏப்ரல், 2013

நன்றியுள்ள பறவை.

தனது பெற்றோருக்கு ஒரே மகள் வினிதா. சிறு வயதிலிருந்தே அவள் எதை விரும்பினாலும் பெற்றோர் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். இதனால் அவள் வளர, வளர அவளிடம் பிடிவதக் குணமும் சேர்ந்தே வளர்ந்தது.

ஏழாம் வகுப்பு படிக்கும் வினிதாவின் நெருங்கிய தோழி கோமதி. தினமும் இருவரும் சேர்ந்துதான் பள்ளிக்கு செல்வார்கள். சாரணியர் படையிலும் சேர்ந்திருந்தனர்.

ஒருமுறை சாரணியர் பயிர்சிக்காக அருகிலுள்ள மலைப்பகுதிக்கு மாணவர்கள் கூட்டிச் செல்லப்பட்டனர். வினிதாவும் கோமதியும் அப்பயிற்சிக்குச் சென்றனர்.

இருவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஒரு பறவைக் கூட்டில் முட்டைகளைக் கண்டனர். பார்பதற்கு அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்த அந்த முட்டைகள் இருவரையும் வெகுவாகக் கவர்ந்தன. ஓவியப் பிரியையான வினிதாவுக்கு அம்முட்டைகளை வரைந்து பார்க்க ஆசை. எனவே அவற்றை எடுத்துக்கொண்டாள். கோமதிக்கு வினிதாவின் செயல் பிடிக்கவில்லை.

தாய்ப்பறவை பார்த்தால் ஆபத்து என்று வினிதாவை எச்சரித்துப் பார்த்தாள் கோமதி. வினிதாதான் பிடிவாதக்காரி ஆயிற்றே. அறிவுரையைக் கேட்பாளா என்ன?

“ஏய் பயந்தாங்கொள்ளி, உன் வேலையைப் பாத்துட்டு போ” என்று கோமதியைக் கேலி பேசி விட்டு போய்விட்டாள். கோமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாலை 4 மணி. பயிற்சி முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் புற்ப்பட்டனர்.

வினிதா வீட்டுக்குச் சென்ற போது அவளது பெற்றோர் ஏதோ பார்ட்டிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். வினிதாவுக்கு தங்க நெக்லஸ் அணிவித்து அவளையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர். பார்ட்டி முடிந்து இரவு நேரம் கழித்தே வீடு திரும்பினர்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த வினிதா, நெக்லஸை கழற்றி மேஜை மீது வைத்துவிட்டு அயர்ந்து தூங்கினாள். காலையில் எழுந்ததும் பல் துலக்கினாள் அப்போது ஜன்னல் வழியே அறையினுள் நுழைந்த ஒரு பறவை, மேஜை மீது கிடந்த நெக்லஸை கவ்விக்கொண்டு பறந்தது. இதைப் பார்த்த வினிதா அப்பறவையைத் துரத்திக் கொண்டு ஓடினாள். ஆனால் பறவையின் வேகத்துக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள்.

பள்ளிக்குச் சென்றபோதும் சோகமுடன் காணப்பட்டாள் வினிதா. இதைக்கவனித்த கோமதி, அவளிடம் காரணம் கேட்டாள். வினிதா காரணம் சொல்லியதும் சிரிக்க ஆரம்பித்தாள் கோமதி.

“ஏண்டி, நான் அழறதைப் பார்த்தா உனக்கு சிரிப்பு வருதோ?” எரிச்சலுடன் கேட்டாள் வினிதா.

அதற்கு கோமதி, “ஒரு பறவையோட முட்டையை திருடின, இன்னொரு பறவை வந்து உன்னோட நெக்லஸைத் திருடிட்டுப் போயிடுச்சு. அவ்வளவுதான் என்றாள்.

“பறவை முட்டையும் தங்க நெக்லசும் சமமா” என்று வினிதா கேட்டபோது.

“உயிரற்ற ஒரு நெக்லஸ் தொலைஞ்சு போனதுக்கே நீ இப்படி அழுது துடிக்கிறியே, உயிருள்ள தனது முட்டைகளைப் பறிகொடுத்த அந்தத் தாய்ப்பறவை எப்படி துடிச்சிருக்கும்?”
என்று சொல்லி வினிதாவின் தவறை உணர்த்தினாள் கோமதி. தான் செய்தது தவறுதான் என்பதை உணர்ந்துகொண்ட வினிதா, முட்டைகளை பறவையின் கூட்டிலேயே வைத்து விட்டாள்.

மறுநாள் காலையில் வினிதாவைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் ஓடிவந்த கோமதி, “உன் நெக்லஸை எடுத்துட்டுப் போன பறவை எங்க வீட்டு மரத்துலதான் கூடு கட்டியிருக்கு. காலைல மொட்டை மாடிக்குப் போனப்ப கூட்டுல உன்னுடைய நெக்லஸ் இருப்பதைப் பார்த்தேன். உடனே எடுத்துட்டு வந்துட்டேன்” என்றாள். நெக்லஸ் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளினாள் வினிதா.

“நீ திருந்தி அந்த முட்டைகளை வச்சதும் உன்னோட நெக்லஸூம் கிடைச்சிடுச்சி இல்லையா” என்று கோமதி சொன்னதும் மவுனம் மூலம் அதை ஆமோதித்தாள் வினிதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக