வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தலைவன்


மலையும், காடுகளும் நிறைந்த, நீர்வளமும் நில வளமும் கொண்ட, அந்த நாட்டை கொங்கன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அனுக்கு வீரத்திலும் தீரத்திலும், புத்திகூர்மையிலும், சிறந்த வீரத்தளபதி ஒருவர் இருந்தார். அவர் பெயர் அறிவுடையநம்பி.

அறிவுடையநம்பியின் புகழ், நாடு, நகரம் எங்கும் பரவியது. மக்கள் எல்லாம் இந்த கொங்க மன்னன் புகழுக்கு காரணமே, அறிவுடையநம்பிதான். அவரின் வீரதீரம் கண்டுதான், எதிரி நாட்டார் கொங்க நாட்டின் மீது படையெடுக்க அஞ்சுகின்றனர். என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அரசன் கொங்கனுக்கு கூட, அந்த எண்ணமிருந்தது. தன்னைவிட எல்லா விதத்திலும் சிறந்த அறிவுடையநம்பி தான் இந்த நாட்டை ஆள தகுதி வாயந்தவன், நாட்டாரும், நகரத்தாரும், அவன் அரசனானால் பெரிதும் மகிழ்வார் என எண்ணமிட்டார். இந்த விஷயம் குறித்து அறிவுடைய நம்பி மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்.

பின்பு குடுகுடுப்பைக்காரன் போல் வேடமிட்டுக் கொண்டு போய், அறிவுடையநம்பி வீட்டின் முன் நின்று கொண்டு, ராஜயோகம் வரப்போகிறது. இந்த வீட்டு ராஜாவுக்கு, நாட்டை ஆளும் எல்லாதகுதியும் இருக்கிறது. “கூடிய சீக்கிரமே இந்த நாட்டு ராஜா இவர் கையில் ராஜியத்தை ஒப்புவிக்க போகிறார்” என கூறினார்.

அதை கேட்டுக்கொண்டே வந்த அறிவுடைநம்பி மனைவி.

ஐயா, உன் பிரசங்கத்தை கொஞ்சம் நிறுத்து. நல்லவேளையாக அவர் வீட்டில் இல்லை. இருந்திருந்தால் உன் உயிருக்கு உத்திரவாதமில்லை. “இந்தா இதற்காகத்தானே, இப்படி எல்லாம் கூவினாய், வாங்கிக்கொண்டு ஓடிவிடும், என சிலபடி அரிசியை போட்டு போகச்சொன்னாள்.

“ஆகா” நம்பியின் மனைவிக்கு ஏன் இப்படி கோபம் வருகிறது. நம்பி இல்லாத சமயம் பார்த்து வந்து விட்டோமே... என புருவம் சுருக்கி மன்னர் நம்பி வீட்டின் உள்ளேதான் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு விசமம்புன்னகை புரிந்தபடியே... நம்பியின் மனைவியைப் பார்த்து “ஏனம்மா, நான் என்ன ஊரில் உள்ள அனைத்து வீட்டிற்குமா இப்படி பலன் சொல்கிறேன். உன் கணவருக்கு அரசாளும் தகுதி இருக்கிறதம்மா, அதனால்தான் சொல்கிறேன், என்றவர், ஏனம்மா உனக்கு இந்த நாட்டிற்கே ராணியாக வேண்டும் என்ற ஆசையில்லையா என்றார் நயமாய்.

“ஆகா” என் கனவருக்குத்தான் கிரகபலன் சரியில்லை என்றால் உனக்கும் சரியில்லை போலிருக்கிறது. வம்பை விலை கொடுத்து வாங்காமல் ஓடிவிடு ஐய்யா. நம்பியின் மனைவி கையை பிசைத்தபடியே படபடத்தார்.

என்ன கிரகபலன் சரியில்லை, அவரின் ஜாதகம் கொண்டுவாம்மா நான் பார்த்துச் சொல்கிறேன். என்றபடியே அவர்கள் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து விட்டார்.

உடனே தலையில் அடித்துக்கொண்டே உள்ளே போன நம்பியின் மனைவி, புன்னகையுடன் ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்தார்.

அதை புரட்டிப் பார்த்த குடுகுடுப்பை, ஆகா இது ராஜயோக ஜாதகம், கிரகபலம் எல்லாம் நன்றாக உள்ளன, என பாராட்டியபடியே... இந்தநாட்டு ராஜா கூடியசீக்கிரமே. ஸ்தல யாத்திரை போகப்போகிறார், அதனால் உன் கணவனே... இந்நாட்டு ராஜாவாய் நாட்டை ஆளப் போகிறான் என்றார் ரகசியக் குரலில்.

அதைக்கேட்டு புன்னகைத்த நம்பியின் மனைவி, அப்படியானால்.. ரொம்ப சந்தோஷம் ஐய்யா, இது நீங்கள் நாட்டை விட்டு ஸ்தலயாத்திரை போகப் போவதாய் சொன்ன நம் அரசரின் ஜாதகம். எங்கள் அரசரின் ஜாதகம்தான். இதிலிருந்து நீர் பொய்யான குடுகுடுப்பை என தெரிகிறது. உண்மையைச் சொல். உண்மையில் நீர் யார்?! எதிரி நாட்டு ஒற்றனா...?! நம்பியின் மனைவி தன் குரலை கம்பீரமாய் உயர்த்தினார்.

‘உடனே உருவியவாளுடன் வீட்டிற்குள்ளிலிருந்து. ஒரு சிறுவன் ஓடிவந்து குடுகுடுப்பையின் மார்புக்கு நேரே வாளை நீட்டினான். அவன் நம்பியின் மகன் என்பதை அறிந்த மன்னர் அவசரமாய் தன் வேசம் களைத்தார்.

‘ஆ’ மகாராஜா என வியப்புடன் கூறியபடியே... இருவரும் அவர் காலில் விழுந்தனர்.


“அம்மா” இங்கு இத்தனை நடக்கிறது. நம்பி எங்கே இன்னும் வெளிவரவில்லையே...என்றார். ஆச்சிரியமாய் அரசர். மகாராஜா அவர் உறங்குகிறார், உறங்கும் சமயம் அவரை யாராவது கொன்று போட்டாலும் அவருக்கு தெரியாது. அப்படி தூங்கும் பழக்கம் கொண்டவர். கும்பகர்ணனின் அடுத்தவாரிசு. உறங்கும் சமயத்தில் விழித்திருக்கும் ஆற்றல் வாய்ந்தவரே... சிறந்த அரசனாக இருக்க முடியும். இப்படி தன்னை மறந்து தூங்கும் பழக்கம் உள்ளவரிடம்  நாட்டை ஒப்புவித்தால் அந்த நாடு என்னத்திற்கு ஆகும்.

ஐய்யா கூடவே வீரமும் தீரமும் கொண்ட அவருக்கு பொறுமையும், சகிப்பு தன்மையும் கிடையாது. கண்ணால் கண்டதையே உண்மை என நம்பக்கூடியவர். ஒரு நாட்டை ஆளும் மன்னனுக்கு பொறுமையும், சகிப்புதன்மையும் மிக அவசியம் இல்லையா.
“அப்பொழுதுதானே... சிறந்த ஆட்சி நடக்கும்”

நீங்களே அத்தனை தகுதியும் கொண்ட சிறந்த மன்னர். உங்கள் நாட்டையே.. வேறு ஒருவருக்கு கொடுக்க சித்தமான.. உங்கள் பொருந்தன்மையே உங்கள் குலத்தின் புகழ்கூறும் என பலவாறு ராஜாவை புகழ்ந்தனர்.

இதையெல்லாம் கேட்ட அரசன் நம்பியின் இந்த குறைபாடு எனக்கு தெரியாமல் போய்விட்டது அம்மா. நல்ல சமயத்தில் என்னை விழிக்கச் செய்தாய். நான் வருகிறேன் என விடை பெற்றார்.

அவர் சென்று விட்டார் என்பதை உறுதி செய்து கொண்டபின் அறிவுடையநம்பி... எழுந்து வெளியே வந்தார். இனி நம் அரசர் எந்த உறுத்தலும் இல்லாமல், நிம்மதியாய் ஆட்சி செய்வார் இல்லையா என மனைவியை பார்த்தார்.

உங்கள் புத்திசாலித்தனமே அலாதிதான் என அறிவுடையநம்பியை பாராட்டினார், அவர் மனைவி. ஆம் தன் அரசரின் மனதிலிருந்த உறுத்தலை விரட்டான் அறிவுடையநம்பி... தன் மனைவியின் மூலம் அப்படி நாடகமாடச் சொன்னார். அதில் வெற்றியும் கண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக