வியாழன், 4 ஏப்ரல், 2013

வாழ்க்கை


குளங்களெள்ளாம் நிரம்பி ஒடின. ஒரு வாரமாக பலத்த மழை. பறவைகளால் அடைமழையால் வெளியே தலை காட்ட முடியவில்லை. உணவின்றி தவித்தன.

வடாத மழையிலும், மீன் கொத்தி பறவை மட்டும் மிகவும் சந்தோஷத்துடன் காணப்பட்டது.

நீர் நிரம்பிய குளக்கரை மரத்தில் அமர்ந்து கொண்டு குளத்து நீரில் துள்ளிக் குதிக்கிற மீன்களை பறந்து பறந்து பிடித்துத் தின்றது.

மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த மற்ற பறவைகள், மீன் கொத்தியின் சந்தோஷத்தைக் கண்டு பொருமின.

மறுநாள் மழை நின்றது. மீன் கொத்திப் பறவை மகிழ்ச்சி குறையாமல் பாட்டுபாடிக் கொண்டிருந்தது.

பசியிலும், பட்டினியிலும் வாடிய பறவைகள் ஆத்திரத்துடன் மீன் கொத்திப் பறவையிடம் சென்றன.

அருகில் வந்த பறவைகளை தன் பாட்டை நிறுத்திவிட்டு பார்த்தது மீன்கொத்தி.

“தம்பி ஒரு வாரம் பொய்த மழையில் நாங்களெல்லாம் பட்டினி” என்றது காக்கா.

“தெரியுமே” என்றது மீன்கொத்தி, சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்...

“தெரிந்துமா, இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாய்?” என மைனா குருவி கேட்டது.

“இதிலென்ன இருக்கிறது. மழையில் உங்களால் உணவு  தேட முடியவில்லை. நான் மழை பெய்ததால் சந்தோஷமாக இருக்கிறேன். இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே...”

மீன்கொத்தியின் பதில் பறவைகளை ஆத்திரப்படச் செய்தது.

“என்னது நாங்க பட்டினி கிடப்பது பெரிய விஷயமல்லையா?”, பச்சைகிளி கத்தியது.

“நண்பர்களே நானும் உங்களை மாதிரி பசியில் வாடியிருக்கிறேன்” என்றது மீன்கொத்தி.

“என்னது நீ கஷ்டப்பட்டியா?” ஆச்சிரியமாக கேட்டது சிட்டுக் குருவி.

“என்னுடைய உணவு மீன்கள்தான். அவை மழைகாலத்திலும், குளிர்காலத்திலும் நிறைய கிடைக்கும். கோடை கால்த்தில் குளங்கள் வறண்டு மீன்கள் இல்லாமல் ஆகிவிடும். அப்பொழுதெல்லாம் நான் பட்ட கஷ்டம்  எனக்குதான் தெரியும்” மீன்கொத்தி தன் கதையை சொல்லியது.

மேலும் தொடர்ந்து பேசியது மீன்கொத்தி... “ இயற்க்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதில் லாபம், நஷ்டம் கலந்தே இருக்கும். எனக்கு மழைக்காலத்தில் உணவு கிடைக்கிறது, உங்களுக்கு இல்லை. கோடைகாலத்தில் உணவுக்கு நான் கஷ்டப்படுகிறேன். நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள், மனிதர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்..” என்றது.

“மனிதனின் வாழ்க்கையும் நம்மைப் போன்று கஷ்டமானதா?” மைனா ஆச்சிரியத்துடன் கேட்டது.

“ஆம். உழைத்துப் பிழைக்கின்ற மனிதவர்க்கம், மழைகாலத்தில் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அதனால் வருமானம் இல்லாமலும், உணவுக்கு வழி இல்லாமலும், நம்மைப்போல கஷ்டப்படுகிறார்கள்.


இயற்கையின் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு சமயத்தில் வாழ்க்கை ஓஹோவென்று இருக்கும். சில சமயங்களில் இப்படி சலிப்பாகவும், கசப்பாகவும் இருக்கும். இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இதை பொறுத்துக் கொண்டுதான் வாழ வேண்டும். என்றது மீன்கொத்தி.

மற்ற பறவைகளும், மீன்கொத்தியின் கருத்தை ஆமோதித்து ஏற்றுக்கொண்டன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக