பீர்பல் கதைகள்

அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிர்.

ஒரு நாள் அக்பர் சக்கரவர்த்தி பீர்பலிடம் ஒரு புதிர் போட்டார்.

“மேலே மூடி கிழே மூடி
நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது

இது என்ன?”

என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டார். பீர்பலுக்கு இந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை. “அரசே, எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து வந்து சொல்கிறேன்” என்றார் பீர்பல்.

மறுநாள் பீர்பல் ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்று  கொண்டிருந்தார். அவருக்குத் தாகம் எடுத்தது. தம் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் தண்ணீர் கேட்பதற்காக, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அங்குச் சிறுமி ஒருத்தி சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

“குழந்தாய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று  அந்தச் சிறுமியைப் பார்த்துக் கேட்டார் பீ்ர்பல்.

“குழந்தையைச் சமைத்துக் கொண்டிருக்கிறேன்; தாயாரை எரிய விட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று அந்தச் சிறுமி கூறினாள்.

“அப்படியா? உன் தகப்பனார் எங்கே” என்று அந்தச் சிறுமியிடம் கேட்டார் பீர்பல்.

“என் தகப்பனார் மண்ணுடன் மண்ணைச் சேர்ப்பதற்குச் சென்றுள்ளார்” என்றாள் அந்தச் சிறுமி.

“உன் தாயார் எங்கே?” என்று பீர்பல் கேட்டபொழுது, “ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள்” என்றாள்.

இந்த பதில்களைக் கேட்டப் பீர்பல் திகைத்துப் போய் விட்டார். இந்தச் சமயத்தில் அந்தச் சிறுமியினுடைய தாய் தந்தையர் அங்கு வந்தனர். அவர்களிடம் பீர்பல் எல்லா விவரத்தையும் கூறினார்.

இதைக் கோட்டுச் சிரித்த அந்தச் சிறுமியின் தந்தை ‘ அவள் சரியாகத்தான் கூறியிருக்கிறாள்” என்றார்.

“எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்றார் பீர்பல்.

“துவரம் பருப்பை வேகவைத்துக் கொண்டு, அதற்காக அடுப்பை எரிப்பதற்குத் துவரஞ் செடியின் காய்ந்த தண்டுகளை விறகாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். அதனைத்தான் குழந்தையைச் சமைத்துக்கொண்டு தாயாரை எரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்” என்றார் சிறும்யின் தந்தை.


“நீங்கள் மண்ணுடன் மண்ணைச் சேர்க்கச் சென்றாதகக் கூறினாளே” என்றார் பீர்பல்.

“என்னுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவரைச் சுடுகாட்டில் தகனம் செய்வதற்காகப் போயிருந்தேன். உயிர் போன பிறகு இந்த உடம்பு மண்ணோடுதானே சேர்ந்து விடுகிறது! அதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறாள்” என்றார்.

“உங்கள் மனைவி ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள் என்றாளே” என்றார் பீர்பல்.

“பக்கத்து வீட்டில் உளுந்து உடைத்துக் கொடுக்கச் சொன்னார்கள். அங்குச் சென்று உளுந்து உடைத்துக் கொடுத்துவிட்டு வருகிறாள்” என்றார்  அந்தச் சிறுமியின் தகப்பனார்.

இந்தப் பதில்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பீர்பல் “அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்குப் பதில் அளிக்கக் கூடியவர்கள் இவர்களே’ என்று கருதினார். அக்பர் சக்கரவர்த்தி கூறியதை நினைவுபடுத்திக் கொண்டு.

“மேல மூடி கிழே மூடி
 நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது.
இது என்ன?

என்று கேட்டார் பீர்பல்.

இதைக் கேட்ட அந்தச் சிறுமியின் தந்தை, “ இரண்டு மூடிகள் என்றால் ஒன்று ஆகாயம், மற்றொன்று பூமி. மெழுகுத் திரி என்பது மனிதன். பூமியில் மனிதன் வாழ்ந்து  இறந்து விடுகிறான். இதுதான், இந்தப் புதிருக்கு விடை” என்று கூறினான்.

இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பீர்பல் தம்மால் இயன்ற பொருள்களைச் சன்மானமாக அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்தார்.

மறுநாள் அரச சபைக்குச் சென்ற பீர்பல், அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்கான விடையைக் கூறினார்.

அதைக் கேட்ட சபையிலிருந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியப்பட்டனர்.

பீர்பலின் அறிவுத் திறனைப் பாராட்டி அக்ப்ர் சக்கரவர்த்தி, பொன்னையும் மனியையும் பரிசாக வழங்கினார். பீர்பல் தாம் அதைப் பெற்றுக் கொள்ளாமல், தமக்கு அந்தப் புதிருக்கு உரிய விளக்கத்தைக் கூறிய குடும்பத்தவரை வரவழைத்தார். “இவர்களே அந்தப் பரிசுக்கு உரியவர்கள்” என்று கூறி, நடந்த நிகழ்ச்சிகளை விளக்கமாகக் கூறினார். அக்பர் சக்கரவர்த்தி வழங்கிய பரிசை அந்தக் குடும்பத்தவர் பெற வழிசெய்தார். பீர்பலின் நேர்மையை வியத்து பாராட்டிய அக்பர் சக்கரவர்த்தி பீர்பலுக்குச் சிறப்புப் பரிசு வழங்கினார்.





4 கருத்துகள்: