செவ்வாய், 2 ஏப்ரல், 2013

யார் காரணம்?


நாட்டில் மழையில்லை. பஞ்சம், பசி, பட்டினி பரவியது. வறுமை, திருட்டு தொடர் கதையானது.

மக்கள் ராஜாவை தூற்றினர். ‘மன்னர் சரியில்லை. இவர் மடிந்தால்தான் நாட்டில் மழை பெய்யும், இவரது ஆட்சி மாற வேண்டும்’ என்று பேசிக் கொண்டனர்.

இந்த வஷயம் மன்னரின் காதையும் எட்டியது. அமைச்சரிடம் ஆலோசனை கேட்டார் மன்னர்.
‘உங்களுக்குத் தெரியாத விஷயமா மன்னா?’ என்று பதில் சொல்லி நழுவிக்கொண்டார் அமைச்சர். அன்றிரவு ராஜாவுக்கு தூக்கம் பிடிக்கவில்லை

‘சொன்னது சொன்னபடி நடக்குது. கேட்டவரம் கொடுக்கிறார்’ என்று மக்கள் ஆங்காங்கே பேசிக் கொள்ளும் காட்டுச் சாமியார், மன்னரின் நினைவிற்கு வந்தார்.

காலை எழுந்ததும் ராஜா, தன் வெள்ளைக் குதிரையேறி காட்டுச்சாமியாரைப் பார்ககச் சென்றார்.

செடி கொடிகள் வளர்ந்து கிடக்கும் அத்துவானக்காட்டில் காட்டுச்சாமியார் கண்னண மூடி தியானித்துக் கொண்டிருந்தார்.

“இந்த நாட்டுக்கு அரசன் எட்டப்பராஜா வந்திருக்கிறேன், சாமி கண் திறக்க வேண்டும்” என்றார் மன்னர்.

கண் விழித்த காட்டுச்சாமியார், “எனக்கு அரசனும், ஆண்டியும் ஒன்றுதானப்பா. வந்த விஷயத்தைச் சொல்” என்றார்.

‘சாமி சாமி’ என்ற மன்னர், ‘மும்மாரி பொழிந்த நாட்டில் மழையில்லை. மழை வேண்டும்! மக்களின் பஞ்சம் நீங்க வேண்டும்! பசியாற வேண்டும்! அதற்கு தங்கள் ஆசி வேண்டும், அரண்மனைக்கு வந்து தாங்கள் வழிகாட்ட வேண்டும்’ என்றார் மன்னர்.

‘உன் எண்ணம் தர்ம சிந்தனை நிரம்பியது. நான் நிச்சயம் வருகிறேன்’ என்று கூறிய காட்டுச்சாமியார் அரண்மனை புறப்பட்டார்.

அரண்மனை சென்றதும் கருவூலத்தின் சாவி காட்டுச்சாமியார் வசம் மாறியது.

‘பசி பட்டினியால் தன்னை வந்து சந்திப்பவர்களுக்கு எந்த தயக்கமும் இன்றி கருவூலத்திலிருக்கும் பணத்தை வாரி இறைத்தார்’ காட்டுசாமியார். அப்படியே மக்களுக்கு ஒரு நிபந்தனையும் விதித்தார்.

‘அரசர் உயிர் வாழும்வரை, இந்த பணத்திற்க்கு நீங்கள் அசலையோ, வட்டியையோ திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.  தினமும் வீட்டில் நீங்கள் கூட்டாக மன்னர் நீடூழி வாழ்ந்து நல்லாட்சி புரிய வேண்டும், என பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று சாமியார் மக்களிடம் கூறி அனுப்பினார்.

மக்களும் மகிழ்ச்சியோடு பணத்தைப் பெற்றுச் சென்றனர். இப்போது மன்னர் மீது மக்களுக்கு வருத்தமில்லை.

“மன்னர் நீடுழி வாழ வேண்டும். மழை இல்லாததற்கு மன்னர் என்ன செய்வார்? இறைவா மழையைக் கொடு” என்று மக்கள் வேண்டிக் கொண்டார்.

காட்டுச்சாமியார், ‘மக்கள் இப்போது உங்களைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்?’ என்று மன்னரிடம் கேட்டார்.

“தினமும் மன்னனுக்காக மக்கள் பிரார்த்தனை செய்வதாக தூதுவர்கள் சொன்னார்கள்”.

இதை மன்னர் காட்டுச்சாமியாரிடம் கூறினார். அவர் மன்னுக்கு சில ஆலோசனைகளைக் கூறினார்.  

மன்னர், மக்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். காட்டுச்சாமியாரின் ஆலோசனைப்படி மக்கள் மத்தியில் பேசினார்.

நாட்டில் மழை பொய்த்துவிட்டது. நாடே வறுமையில் வாடியது. மக்களைக் காப்பதே மன்னன் வேலை என்பதால் கருவூலத்தில் இருந்த செல்வங்களையெல்லாம் உங்களுக்கே வழங்கியிருக்கிறேன். நீங்கள் அதை திரும்பத் தர வேண்டியதில்லை.

“மழை குறைந்ததற்கு நாம் காரணம் எண்பதை புரிந்து கொள்ள வேண்டும். மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டு மரக்கன்றுகளை அனைவரும் நட்டு பராமரிக்க வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது. ஏரி, குளங்களை தூர் வார வீட்டுக்கு ஒருவர் முன்வந்து சேவை செய்ய வேண்டும்” மன்னன் மக்கள் முன் கண்ணியமாகச் பேசினார்.

மக்களும் மன்னனின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டானர்.

ஆங்காங்கே மரங்கள் நட்டு பராமரிக்க ஆரம்பித்தனர். நாடு சோலையானது, மேகங்கள் நகரை வலம் வந்தன.

மழை பொழிந்தது! நாடு செழித்தது! மக்கள் நலம் பெற்றனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக