ஞாயிறு, 10 மார்ச், 2013

மனவலிமையே வெற்றி தரும்



முன்னொரு காலத்தில் சூரன் என்கிற ராட்சசன் இருந்தான். மிகவும் பயங்கரமானவன். ஊர் ஊராகச் சென்று தனக்கான இரையைத் தேடிக்கொள்வான். அதில் அவன் ஒரு வழக்கத்தை வைத்திருந்தான். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு ஊருக்கு வந்ததும் மக்களை அழைப்பான். நமக்கிடையே ஒரு சவால். உங்களில் யாராவது ஒருவர் என்னைவிட பலசாலி என்று நிரூபித்துவிட்டால் அவர்களின் அடிமையாகி சொன்னதைச் செய்வேன். இந்தச் சவாலில் கலந்துகொள்ள யாருக்கும் விருப்பம் இல்லையென்றால் ஊரை விட்டுத் சென்றுவிடுங்கள். நீங்கள் மட்டும்தான் செல்ல வேண்டும். ஆடு, மாடுகளை இங்கேயே விட்டுவிட வேண்டும். இதை மீறினால் உங்களையும் சேர்த்துக் கொன்று தின்றுவிடுவேன். ஒரு நாள் அவகாசம். முடிவு செய்யுங்கள் என்று கூறிவிட்டு ஊர் எல்லையில் சென்று காத்திருப்பான்.

ராட்சசனுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? அதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஊரை விட்டே சென்று விடுவார்கள். பிறகு ஊருக்குள் வரும் சூரன் அங்கிருக்கும் ஆடு, மாடுகளை அடித்துத் தின்பான். எல்லாம் காலியாகும் வரை அந்த ஊரில் இருப்பான். பிறகு வீடுகளை எல்லாம் இடித்து தள்ளிவிட்டு அடுத்த ஊருக்குச் செல்வான். அங்கும் இதே கதைதான்.

அப்படித்தான் பொன்னம்பட்டிக்கு வந்து மக்களிடம் சவால் விட்டான். வழக்கம் போல் ஊர் எல்லையில் சென்று காத்திருந்தான். அனைவரும் தங்களுக்குத் தேவையான பொருட்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊரைவிட்டுச் செல்லத் தயாரானார்கள்.

அதே ஊரில் அறிவழகன் என்பவன் இருந்தான். பிறவியிலேயே ஒரு காலை இழந்தவன். பெற்றவர்களும் இல்லை. பக்கத்து வீட்டுப் பாட்டிதான் அவனுக்கு சில உதவிகளைச் செய்வாள்.

ஏன் எல்லோரும் இப்படிப் பயப்படுகிறீர்கள். இது நமது ஊர். நாம் எதற்காக ஒட வேண்டும்? என்று கேட்டான்.

ஓடாமல் இங்கேயே இருந்து ராட்சசனுக்கு இரையாகச் சொல்கிறாயா? அவனோ ராட்சசன். நாமோ சாதாரண மனிதர்கள். அவனுடன் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டுகிறேன். நீங்கள் எல்லாம் இங்கேயே இருங்கள் என்றான் அறிவழகன்.

நீயா? ஒரு கால் இல்லாத உன்னால் என்ன செய்ய முடியும்? உன்னை நம்பி எங்கள் உயிரை இழக்கத் தயாராய் இல்லை. நாங்கல் செல்கிறோம் என்றாள் ஓருத்தி..

அனைவரும் ஊரை விட்டு செல்ல ஆரம்பித்தனர்.

அறிவழகா! நான் சொல்வதைக் கேள். எங்களுடன் வந்துவிடு என்றாள் பக்கத்து வீட்டுப் பாட்டி.

இல்லை பாட்டி! நான் அந்த ராட்சசனை ஜெயித்துக் காட்டுகிறேன். நீங்கள் எனக்காக சில உதவிகளைச் செய்யுங்கள். ஒரு பெரிய வெண்ணெய் கட்டி உருண்டையைச் செய்து அதன் மீது சேற்றைப் பூசிக் கொடுங்கள். ஒரு பாத்திரத்தில் குங்குமம் கலந்த தண்ணீரைக் கொடுங்கள். ஒரு முயல் குட்டிக்கும் ஏற்பாடு செய்யுங்கள் என்றான் அறிவழகன்.

அவன் கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பாட்டியும் ஊர் மக்களோடு சென்று விட்டாள்.

அறிவழகன் வெண்ணெய்க் கட்டியை வீட்டு வாசலில் வைத்தான் ஒரு பலூனில் குங்குமக் கரைசலை ஊற்றி அதை ஒரு மாட்டின் அடி வயிற்றில் மறைவாகக் கட்டினான். ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் துளை செய்து அதில் முயலை விட்டு மூடினான். பாத்திரத்தை கிழே வைத்து கால்களால் அழுத்திக்கொண்டான்.


நேரம் நகர்ந்தது. சூரன் ஊருக்குள் நுழைந்தான். ஹா..ஹா..ஹா..இந்த ஊரிலும் எல்லோரும் ஓடி விட்டார்கள். நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. பத்து நாட்களுக்கு விருந்துதான் என்று சொன்னவாறு வந்தான்.

ஏய் சூரா! நில் என்று தைரியமாகக் குரல் கொடுத்தான் அறிவழகன்.

சூரன் வியப்புற்று. யாருடா அவன். என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது?  என்றபடி திரும்பிப் பார்த்தான்.

அறிவழகன் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். காலுக்கடியில் பாத்திரம். பக்கத்திலேயே மாடு கட்டப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளி வெண்ணெய் கட்டி. பார்பதற்கு அது கல் போல் இருந்தது.

நான் உன்னோடு போட்டியிடப் போகிறேன் என்றான் அறிவழகன்.

அதைக்கேட்டு சூரன் இடிஇடியெனச் சிரித்தான். பொடிப் பயலே! நீ என்னோடு போட்டி போடுகிறாயா? ஒரு ஊது ஊதினால் பறந்து விடுவாய் என்றான்.

யாரைப் பார்த்து அப்படிச் சொன்னாய்? நான் ஊதுகிறேன் பார் என்றவன் குனிந்து பாத்திரத்தை நோக்கி ஊதியபடி காலை எடுத்தான்.
அடுத்த நொடி பாத்திரத்தில் இருந்த முயல் ஒட, அதனுடன் பாத்திரமும் உருண்டோடியது.

சூரன் திகைத்துப் போனான். எனினும் சுதாரித்துக் கொண்டு, நான் நினைத்தால் உன்னை ஒரே கையால் நசுக்கி விடுவேன் என்றான்.

நான் நினைத்தால் மலையையே நசுக்குவேன். சந்தேகம் இருந்தால் பார் என்ற அறிவழகன் கல் போல் கிடந்த வெண்ணைக் கட்டியை எடுத்து அழத்த அது நசுங்கியது.

சூரனுக்குள் பயம் வந்தது. பொடிப்பயலே! உன்னை அடித்து அடித்துக் கொள்கிறேன் பார் என்று உறுமினான்.

உன்னால் இரண்டு கைகளால்தானே அடித்துக் கொல்ல முடியும் நான் ஒரு விரலால் தீண்டினாலே ரத்தம் கொட்டும். பார்க்கிறாயா? என்று சொன்னபடி விரல் நகத்தால் மாட்டின் அடி வயிற்றில் கட்டி இருந்த பலூனைக் குத்தினான். ரகசியமாக மாட்டின் வாலை அழுத்தினான்.

மாடு வலியால் ம்ம்மா... என்றது. அதேசமயம் பலூன் உடைந்து குங்கும நீர், ரத்தம் போல கீழே கொட்டியது.

சூரன் அதிர்ந்து போனான். என்னை விட நீ வலிமையானவன்தான். இனி நான் உனது அடிமை. என்ன செய்ய வேண்டும் சொல்? என்று கேட்டான்.

இனி எந்த ஊருக்குள்ளும் வந்து யாரையும் பயமுறுத்தக்கூடாது காட்டுக்குள் சென்றுவிடு என்றான் அறிவழகன்.

சூரனும் சென்றுவிட, விஷயமறிந்து ஊர் திரும்பிய மக்கள் அறிவழகனைப் பாராட்டினார்கள்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக